இரண்டாயிரங்களின் பின்னர் தமிழில் நாவல்களே எழுதப்படவில்லை என்று லஷ்மி மணிவண்ணன் அறிவித்திருந்த நாளில் லஷ்மி சரவணகுமாரின் கொமோரோ நாவலை வாசித்து முடித்திருந்தேன். நாவல் கொடுத்த கனதியான மனநிலையில் லஷ்மி மணிவண்ணனின் அந்தக் கூற்று கொமோரா நாவலில் அர்த்தம் நிரம்பியதாக ஒரு கணம் பட்டும் மறைந்தது. தமிழில் எழுதப்படும் ஒரு தொகுதி நாவல்கள் சம்பவங்களின் தொகுப்பாக்கம் மட்டுமே. புனைவின் கட்டற்ற சுதந்திரத்தின் நுனியைக் கூடத் தீண்டாமல் முடிந்துவிடும் எளிய வாழ்க்கைச் சித்திரிப்புகளுடன் மாத்திரம் இருக்கின்றன. நாவல்களில் தமக்கான தனியான கதை நிலங்களையும், மனிதர்களையும் புனைவின் வழி உருவாக்கி அதன் தர்க்க நியாயங்களின் ஆழங்களுக்குள் புகுந்து செல்வதற்குப் பதில் மேற்பரப்பின் சித்திரிப்பிலும், கவித்துவ மொழியின் மேற்பூச்சோடும் செல்லப்படும் அவலமே நாவல்களில் நிகழ்த்தப்படுகின்றன. அவையே நாவல்கள் என நம்பவும் படுகின்றன.
இன்னொரு தொகுதி நாவல்கள் ஈழ யுத்தத்தை, யுத்த அனுபவங்களை புகைப்படக் கருவியின் துல்லியத்தில் பதிவு செய்வதை மட்டும் செய்கின்றன. அந்த வகை நாவல்களில் கருப்பு-வெள்ளையில் மட்டுமே யுத்த அவலங்களையும், வன்முறையையும் வாசித்துக் கொள்ளமுடிகிறது. அவையும் அப்பாவிகளை முன்வைத்து வன்முறைகளையும் இனவாதத்தையும் பேசும் பலகீனமான நாவல் கட்டமைப்புடனே இன்னும் இருக்கின்றன. அவை முப்பது வருட யுத்தத்தின் சிடுக்குகளை இன்னொரு இனவாதக் கட்டமைப்பினுள் தொலைத்துவிடும் அபாயத்துடனே இருக்கின்றன.
நாவல்கள்; சம்பவங்களின் தொகுப்பைச் சொல்வதற்கான வடிவம் அல்ல, அது தன்னுள் ஒரு நம்பகத்தன்மையான நிகர் வாழ்வை உருவாக்கிக் கொள்கிறது, அதில் உருவாகிவரும் முரண்களோடு மனிதர்கள் முட்டி மோதி வளர்ந்து, வாசிப்பவர்களின் இன்னொரு வாழ்வாக விரிந்து கொள்கிறது. அப்படியான நல்ல வாசிப்பு அனுபவத்தையோ, உணர்த்துதலையோ கொடுக்காத ஒற்றைப்படையான நாவல்களின் பெருக்கமே தமிழ்ச்சூழலில் நிகழ்த்தப்படுகின்றது. குறிப்பாக, சென்னைப் புத்தகச் சந்தையையொட்டி அவசரமாக எழுதப்படுபவை எல்லாம் நாவல்களாகவும் கட்டுரைகளாகவும் கதைகளாகவும், பிரசுரித்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்கின்றன.
வன்முறையையும், சிறு நகரங்களின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வையும் பதிவு செய்வதாகச் சொல்லும் நாவல்களும் வன்முறையை, விளிம்புநிலை வாழ்வைப் புனிதப்படுத்துவதுடன், வணிக நாவல்களிலிருந்து கொஞ்சமாகத் தம்மை விடுவித்துக் கொள்ளும் மேற்பூச்சுக்களுடன் இலக்கியங்களாகப் பாவனை செய்கின்றன. பாவனைகள் இலக்கியப் பிரதிகளாகி விடுவதில்லை வெறும் பாவனைகளாகவே எஞ்சிவிடுகின்றன.
உப்பு நாய்கள் சம்பத்தும் – கொமோரா கதிரும்
‘கொமோரா’ நாவல் இரண்டு பண்பாட்டுப் புலங்களை ஊடறுத்துத் தனது களத்தைப் பதிவு செய்வதாக நம்பப்படுகிறது. ஒன்று கம்போடிய கொமர் ரூஸ் படுகொலைகளின் காலத்தை டயறிக் குறிப்புகளாகப் பதிவு செய்கிறது. கொலைக் குற்றவாளிகளாகவும், சிறைக்கைதிகளாகவும் இருக்கும் தமிழகக் கீழ்மத்திய வர்க்கத்தினரின், சிறு தொழில் செய்பவர்களின் இருப்பைக் கதிரின் வாழ்வினூடே பேசுவதாக நாவல் பாவனை செய்தாலும் அதன் அடிப்படைத் தத்துவார்த்தச் சிக்கல் தந்தையைக் கொலைசெய்யும் / செய்ய உள்ளார்ந்தமாக விரும்பும் மகன் கதிரின் வாழ்க்கை. சிறையிலிருக்கும் தந்தையைக் கொல்வதற்காக அவர் ஆயுள் தண்டனைக்காலம் முடிந்து வெளிவரும் காத்திருப்புக்கும் இடையில் கதிரின் வாழ்வைப் பதிவுசெய்கிறது நாவல். கதிர், தன்னுடைய அவலமான, அவமானமான வாழ்விற்கும் காரணம் அப்பா அழகர்சாமிதான் என்பதைப் பாரதூரமாக நம்புவதால் அவரைக் கொல்ல வன்மமாக நினைக்கிறான். பரோலில் வந்து செல்லும் அழகர்சாமியைக் கொல்லாமல் தண்டனைக்காலம் முடியும்வரை காத்திருந்து ஏன் கொல்லவேண்டும் என்ற சினிமாத்தனமான காத்திருப்புகளுக்கும் நாவலில் விடையிருப்பதில்லை. தன்னுடைய தந்தை அழகர்சாமியைப் போல எல்லாத் தந்தைகளும் கெட்டவர்கள் இல்லை என்பதைச் சொல்லவும் / கதிர் உணர்ந்து கொள்ளவுமாக கதிரின் நண்பரின் தந்தை, மகன் மதியைக் காப்பாற்ற வேண்டி, அவனுடைய கைலியை வாங்கிக் கட்டிக் கொண்டு தீக்குளித்து இறந்து போவதுபோன்ற அதீத புனிதப்படுத்தல் அபத்தங்களையும் நாவல் தாண்டிச் செல்வதில்லை.
ஆண்-ஆண் காதலையும் அந்த உறவிலுள்ள சிக்கலையும் தமிழ்ச்சூழலில் பேசாமல் அதைக் குறித்த கற்பனைக் கதைகளை (romantisme) உருவாக்குவதையே நாவல் செய்கிறது. ஆண்-ஆணுக்குமிடையான காதலைப் பொதுச் சமூகம் எப்படி எதிர் கொள்கிறது, அதன் வெளிப்படுத்தல் எப்படியான உள்ளார்ந்த சிக்கல்களுடன் இருக்கிறது என்பதைப் பேசுவதை தவிர்த்து புனிதமாக்கலைச் செய்வதை மட்டுமே செய்கிறது. கதிரிற்குப் பொருளாதாரச் சிக்கல்களைவிட உறவின் சிக்கல் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் நாவலில் அதற்கான நிகழ்வுகள் இருப்பதில்லை. சத்தியா, முருகன், முருகனின் தங்கை, சந்திரன், கதிரின் காதலி என எல்லோரும் கதிரில் அன்புடனும் கரிசனையுடனுமே இருக்கின்றனர். கதிரின் சிக்கல் என்ன தந்தையைக் கொல்ல உள்ளார்ந்த விருப்புடன் / வன்மத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கான வலிமையான நிகழ்வுகள், அதற்கான வலுவான காரணங்கள் நாவலில் சொல்லப்படுவதும் இல்லை. சிறையிலிருப்பவர்களின் மனைவிகள் குறித்தும் (இலகுவாக உடலுறவிற்கு ஒத்துழைக்க வைக்கலாம் , அந்த உடலுறவுகள் கூட திரைப்படம் அணுகும் புனிதப்படுத்தப்பட்ட திருப்திகரமான / கலவியில் வெற்றிவாகைசூடும் ஆணின் விருப்பாக, கிளர்ச்சியாக மட்டுமே இருக்கிறது, அவை வீழ்ச்சியையோ, மதிபீப்டுகளையோ கேள்விக்குட்படுத்தப்படுவதில்லை) சராசரி மனநிலையிலேயே நாவல் அணுகுகிறது.
நாவலின் மையப்பாத்திரமான கதிரின் பாத்திர உருவாக்கமும், உப்பு நாய்கள் சம்பத்திற்கும் அதிக வேறுபாடுகள் இருப்பதில்லை. இருவரின் குணவியல்புகளிலும் வேறுபாடே தெரியாத அளவிற்கு இயல்புகள், தொழில், வாழ்க்கை ஒன்றானதாகவே இருக்கின்றது. நாவலில் கம்போடியாப் பகுதியை எடுத்துவிட்டால் உப்புநாய்களின் அடுத்த அத்தியாயம் போலவே வாசித்துக் கொள்ளும் அளவிற்கு ஒத்த தன்மையிலான கதைகளும் கதைமாந்தர்களும் நாவல் முழுக்க வருகிறார்கள், வெவ்வேறு பெயர்களில். உப்பு நாய்கள் சம்பத்தை கதிராக உருமாற்றி அப்பாவைக் கொல்லும் சிக்கலைப் பேச கம்போடியா வரை சென்றிருக்கிறது கொமோரோ நாவல்.
கொமோரா கவனம் கொள்ள வேண்டிய தந்தையைக் கொல்லும் மகனின் உள்ளார்ந்த சிக்கலைப் பேசாமல் அது ஆண்-ஆண் காதல், சாதியம் போன்ற பிரச்சினைகளையும் பேச விழைகிறது. அவை நாவலிற்கு ஒட்டாத உதிரிச் சம்பவங்களின் தொகுப்பாக்கமாக இருக்கின்றன. முக்கியமாகத் தந்தைக்கும் மகனுக்குமான முரணும், தந்தை அழகர்சாமியின் கொடூரமான குழந்தைப்பருவம் தவிர்த்த அவருடைய இயல்புகளும், வாழ்க்கை, சிந்தனை, செயற்பாடு எதுவும் சரியாக எங்கும் முன்வைக்கப்படவில்லை அதனால் முடிவில் கதிர் அவரைக் கொலை செய்யும் போதும் அது எதுவித பாதிப்பையும் நம்முள் ஏற்படுத்துவதில்லை. தந்தை அழகர்சாமியைக் கொல்லும் கதிரின் வன்மத்தின் அடிப்படைக் காரணம் எதுவும் நாவலில் வலுவாக முன்வைக்கப்படுவதில்லை. கொலை செய்தார், பெண்களுடன் தொடர்பிலிருந்தார், வீட்டைக் கவனிக்காமல் திரிந்தார் என்பதெல்லாம் தந்தையைக் கொல்வதற்கான வலுவான காரணங்களாகக்கொள்ள முடியவில்லை. ஆனால் நாவலில் கதிரிற்கு அவை தான் அப்பா அழகர்சாமியைக் கொல்வதற்கான வலுவான காரணங்கள். அப்பாவைக் கொலைசெய்யும் ஈடிபஸ் உளச்சிக்கல் உள்ள மகனின் அலைச்சலும், சிக்கலும் பதிவாகுவதற்குப்பதில் சில அதிர்ச்சி மதிப்பீட்டு கதை சொல்ல முயன்றதனூடு நாவல் நுட்பமான புனைவுவின் தன்மையிலான நம்பகமான புறச்சூழலையோ, தகவற்செறிவோ, ஆழமோ இல்லாத மேற்பூச்சுக் கவித்துவ மொழியின் இருப்பாக மட்டுமே எஞ்சிவிடுகிறது.
கொமர் ரூஸ்சும் வன்முறையும்
அழகர்சாமியின் குழந்தைப் பருவ வன்முறையின் வடிவமாக வரும் கம்போடிய கொமர் ரூஸ் வன்முறை நாவலில் டயறிக் குறிப்பாக வருகிறது. கொமர் ரூஸ் படையின் வன்முறையை அணுகுவதில் நாவலில் உள்ள சிக்கல் அது மூன்றாம் உலக நாடுகளின் புரட்சிகர விடுதலைப் போராட்டங்களை அணுகும் வெள்ளை மனநிலையிலிருந்து வன்முறையை உரையாடுவதாகும். கொமர் ரூஸ் படுகொலைகள் குறித்த ஆவணங்களும், குறிப்புகளும் நிறையவே இணையத்தில் இருக்கின்றன. நாவல் ‘First they killed my father’ திரைப்படத்தின் / புத்தகத்தின் காட்சிகளையும் நாவலின் களமாக எடுத்துக் கொள்கிறது. first they killed my father திரைப்படம் கொமர் ரூஸ் படை தலைநகரைக் கைப்பற்றுவதில் தொடங்குகிறது கொமோரா நாவலில் அது கம்போடியக் குறிப்புகள் 2ல் வருகிறது. அதற்கு முன்னர் வருபவை அழகர்சாமிக்கும் காப்டன் குடும்பத்தினருக்குமான இணைப்புக்குறித்த விபரிப்புகள். பின்னர் அரச அதிகாரியின் சின்ன மகளின் பார்வையில் விரிகிறது திரைப்படம். நாவலும் அப்படியே கப்டன் மகளின் வழியும், அழகர்சாமியின் வழியும் பின் தொடர்ந்து செல்கிறது. திரைப்படம் பின் தொடர்ந்து செல்லும் சிறுமிக்கு நிகழ்வது போன்றே நாவலின் கம்போடியப் பகுதியும் இருக்கிறது. அதுவரை மன்னரின் படையில், அரச அதிகாரங்களில் இருந்து ஆட்சி செய்தவர்கள், தலைநகரில் வாழ்ந்த அதிகாரவர்கத்தினர் எல்லோரும் கிராமங்களை நோக்கி உடல் உழைப்பிற்காக அனுப்பப்படுவதை அவர்களின் வாழ்வு சிதைக்கப்படுவதைப் போலி மனிதநேயத்துடன் நாவலும், படமும் அணுகுகின்றன. பல காட்சிகள் படத்திலிருந்து / புத்தகத்திலிருந்து அப்படியே நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கொமர் ரூஸ் படை தலைநகரைக் கைப்பற்றி தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்திய பின்னர், அது சமூகக் கட்டமைப்பை அடியோடு புரட்டிப்போடும் மாவோ பாணியிலான ஆட்சியமைப்பை அமைக்க முயன்றதால் அந்தப் புரட்சி உள் அழிவுகளையும், உட் படுகொலைகளையும் செய்யும் குருதிதோய்ந்த புரட்சியாக முடிந்து விட்டது.
நாவலிலும், திரைப்படத்திலும் கொமர் ரூஸ் படையிலிருந்தவர்களையும், அவர்களின் வன்முறைகளையும் காலங்காலமாக அடக்கி அதிகாரம் செய்த மன்னரின் விசுவாசிகளாகவும், அதிகாரத்தில் இருந்தவர்களின் பார்வையிலே கொமர் ரூஸ் வன்முறை, போராட்டம் அணுகப்படுகிறது. படத்தின், நாவலின் நாயகர்களைச் சுற்றி ஆயுதம் தரித்திருக்கும் குழந்தைகள் காலங்காலமாக அதே அதிகாரவர்க்கத்தினரால் பசியிலும், மீளா வறுமையிலும் வைக்கப்பட்டிருந்தவர்கள் தான். அந்த அதிகார வர்க்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டம் கொமர் ரூஸ் போராட்டம். ஆனால், அப்போராட்டமும் வன்முறைகளும் உட் படுகொலைகளும் நிறைந்ததாக முடிகிறது. அவர்களின் போராட்ட வீழ்ச்சியை நாவலும், திரைப்படமும் அதிகாரவர்க்கமாக இருந்து அணுகி விசாரித்து தீர்ப்பளிக்கின்றன. கொமர் ரூஸ் போராளிகளை படுகொலை செய்யவும், உடலைக் கலைபோல வருத்தி வன்முறை செய்ய உறுதிபூண்டவர்களாகவும் அதற்கான உள்ளார்ந்த விருப்பத்தோடு இருப்பவர்களாகவும் நாவலிலும் சொல்லியிருப்பது அது திரைப்படத்தை அப்படியே தழுவிக் கொண்டு கொலிவூட் கண்கள் ஊடே போராட்டத்தை அணுகியதன் விளைவேயன்றி வேறில்லை. வன்முறையைக் குழந்தைகளை வைத்து உரையாடிப் பரிதாபம் கொள்ள வைப்பதுமா புனைவெழுத்து? அல்லது கொமர் ரூஸ் / புலிகள் போன்ற மூன்றாம் உலகநாடுகளின் புரட்சிகரப் போராட்டங்கள் ஏன் வன்முறைகளிலும், உள் படுகொலைகளிலும் உள்ளார்ந்த அழிவும், மீளாத்துயருடையதாகவும் மாறுகின்றன போன்ற அரசியல் பிரச்சினைகளை நாவல் பேசுவதில்லை? ஏன் பேசவில்லை என்றால் நாவல் தழுவிய படம் அப்படிப் பேசவில்லையே பிறகு எப்படி நாவல் பேசும்? ஆக, லஷ்மி சரவணகுமார் நாவலில் செய்த கலைத்தனமான படைப்பூக்கமான செயற்பாடு என்பது first they killed my father திரைப்படத்தில் வரும் சம்பவங்கள் (மணிக்கூட்டைக் கேட்டல், நடனம், நீர் நிலை மடைமாற்றல் எக்ஸெட்ரா….எக்ஸெட்ரா … காட்சிளை அப்படியே எடுத்துக் கொண்டு அதனுள் அழகர்சாமி என்ற தமிழ்ப் பாத்திரத்தை நுழைத்து விட்டதுதான். மிகுதி எல்லாம் அப்படியே திரைப்படத்தின் தழுவல் பார்வையேதான் நாவலில் இருப்பது.
கொமர் ரூஸ் வன்முறையும், படுகொலையும் நிறுவப்பட்ட ஒன்று. அதை அப்படியே நாவலிலும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்வதன் அவசியமென்ன தமிழ்ச்சூழலில்? அது என்ன வகையான கண்டடைதலை நமக்குக் கொடுக்கிறது? அது எப்படியான வன்முறையாக உருமாறிக் கொள்கிறது நாவலில்? சிறுவயதில் அதீத வன்முறையின் பாற்பட்டவர்கள் பிற்காலத்தில் அதே அதீத வன்முறையாளர்களாவும், அச்சம் அற்றவர்களாகவும் கொலைகளை குற்றவுணர்வற்றுச் செய்யக்கூடியவர்களாகவும் புரிந்துகொள்வதென்பது வன்முறை தொழிற்படும் நுட்பத்தைப் புரிந்துகொள்ள முடியாதன் விழைவே அன்றி வேறில்லை அல்லது வெள்ளை இன மனிதாபிமான இரவல் கண்களினூடே மூன்றாம் உலகப் புரட்சிகரப் போராட்டங்களை நோக்கும் அறியாமையன்றி வேறில்லை.
***
கம்போடியா பகுதி அப்பட்டமான திரைப்படத் தழுவலாக இருப்பது, ஒட்டுமொத்த நாவலின் நம்பகத் தன்மையைக் கீழிறக்குவது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் அது பேசும் சம பாலுறவு, உடல் வன்முறை போன்றவையும் லஷ்மிசரவணகுமாரின் சிறுகதைகளில் நிகழ்த்தப்படுவது போன்ற மேற்பூச்சுப் பாவனைகளை மட்டுமே பேசிச் செல்கிறது. அவற்றில் உள்ள சமூக, தனிமனிதச் சிக்கல்களை அவை கண்டு கொள்வதுமில்லை உரையாட முற்படுவதுமில்லை. உறவுச்சிக்கல், உடல் அரசியல்களில் வெறுமே நிர்வாணம், கலவி, இன்பம், புனிதப்படுத்தல் என்பதைத் தாண்டி அதன் ஆழமான பிரச்சினைகளை லக்ஷ்மி சரவணகுமாரால் தொடமுடியாமலே உள்ளது. லக்ஷ்மி சரவணகுமாரின் படைப்புகளை வாசித்துவிட்டு சு.வேணுகோபாலின் கூத்தப்பனை குறுநாவலை வாசித்துப்பாருங்கள். புரியும் உடலரசியலைப் பேசுவதில் உள்ள மேற்பூச்சுப் பாவனையும், புனிதப்படுத்தல் அபத்தங்களும்.
கலை மற்றொரு கலையின் தாக்கத்திலிருந்து பிறந்து வருவது தான். திரைப்படங்களில் இருந்து வருவதிலும் தவறில்லை. ஆனால், தாக்கம் வேறு தழுவல் வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னைப் பாதித்த கலையின் சாரத்திலிருந்து புதிதாக ஒன்றை கண்டடைந்து தன் படைப்பூக்கத்தின் வழியினால் அதை மேவிச் செல்லும்போது அங்கு தழுவல் நடைபெறுவதில்லை. கொமோராவில் இருக்கும் சிக்கல் என்பது அதன் கம்போடியாப்பகுதி நேரிடையாக first they killed my father திரைப்படத்தைத் தழுவிச்செல்வதாகும். அதன் பின் அத்திரைப்பட இயக்குநருக்கு நன்றி சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. வெறுமே தப்பித்தல் உத்தியாகும். இந்தப்படத்தைப் பார்த்ததன் அடிப்படையிலும், கிண்டிலில் கொமோரா நாவலை வாசித்ததன் அடிப்படையிலும் இங்கு எழும் தழுவல்களை குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது.
திரைப்படங்களைப் பார்த்து தனது கதைகளை, நாவலை எழுதிக் கொள்கிறார் என்பது லஷ்மி சரவணக்குமார் மீது தொடர்ச்சியாக வைக்கப்படும் குற்றச்சாட்டு. இதனைப் பல நண்பர்கள் ஃபேஸ்புக்கிலும் சுட்டிக் காட்டியிருந்தார்கள். கானகன் நாவல் வெளியாகிய சமயமும் அதன் மீது சேனன் அப்படியொரு குற்றச்சாட்டை வைத்திருந்தார். ஆகவே தழுவல்களையும், போலி இலக்கியப்பாவனை தொடர்ந்து சுட்டிக்காட்ட வேண்டியதைத் தவிர நமக்கு வேறு என்ன வேலையிருக்கிறது?
இந்தச் சர்ச்சை ஆரம்பித்த பின்பு, நிறைய நண்பர்கள் தொடர்பு கொண்டு மேலும்…மேலும் முன்னர் லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய படைப்புகளை குறிப்பிட்டு அவை சில திரைப்படத்தின் தழுவல்கள் என்று சொல்லியவாறு உள்ளார்கள். அவற்றை எல்லாம் உறுதிப்படுத்தித் தர்க்கங்களுடன் எழுதவே விரும்பினோம். எனினும் தனிமனித வன்மமாக இவை திசை திருப்பப்பட்டுள்ளதால், கொமோரா நாவல், first they killed my father திரைப்படத்தின் தழுவல்களை கொண்டது என்று சொன்னதற்கான விளக்கத்தை முதலில் கொடுத்துவிடலாம் என்பதால் அதனைக் குறித்து மட்டும் இப்பொழுது சுட்டிக் காட்டியிருக்கிறோம். இருப்பின் திரைப்படத்தையும், கொமோரோ நாவலின் கம்போடியாப் பகுதியையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.
***
இப்புத்தகத்தை எழுதிய லக்ஷ்மி சரவணகுமாரின் துணைவியார் இக்கட்டுரையாளரில் ஒருவரான அனோஜன் பாலகிருஷ்ணனைக் குறிப்பிட்டு தான் எழுதிய ஃபேஸ்புக் குறிப்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு லக்ஷ்மி சரவணகுமார் இவ்வாறு பதிலளிக்கிறார்.
ஒரு படைப்புக்கு எழும் விமர்சனத்தை தன் தரப்பிலிருந்து எழுப்பியவருக்கு இவ்வாறான பதில் ஒன்றைத்தான் கொடுப்பார் எனின், அது மிகவும் துரதிஷ்டவசமானது. இப்படியானவொரு பதிலைத்தான் கானகனுக்கு கேள்வி எழுப்பிய சேனனிற்கும் கொடுத்திருந்தார். இதன் மூலம் உருவாக்கப்படும் அதிகார மையம் என்பது, அவர் இயங்குவதாகச் சொல்லிக்கொள்ளும் தளத்துக்கே எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது என்பதைச் சொல்ல வேண்டியுள்ளது.
யுவபுராஸ்கார் விருது கிடைத்தபோது பெரும் ஆரவாரத்துடன் விருதை வாங்கினார் லக்ஷ்மி சரவணகுமார், எனினும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தன் எதிர்ப்பைக்காட்டும் முகமாக விருதைத் திருப்பி அளிக்கிறார். விருதைத் திருப்பிக்கொடுத்தால் அதன்பின் அதன் அடையாளங்களைத் துறந்து இருப்பதே அறமாகும். அது கொடுக்கும் எந்த விஷேச இயல்புகளையும் முற்றிலும் துறந்து இருத்தலே அந்த விருதை திருப்பிக்கொடுத்தமைக்கான நேர்மையாகும். இங்கே லக்ஷ்மி சரவணகுமார் அதன் அடையாளங்களை மீண்டும் மீண்டும் விருதைக் கொடுத்தப் பின்பும் பயன்படுத்துகிறார். அது கொடுக்கும் அங்கீகாரங்களையும் சுவீகரித்துக் கொள்கிறார். கொமோரோ புத்தகத்திலும் விருதுக் குறிப்புடனே அவருடைய அறிமுகக்குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது. இது அவரின் நேர்மையை முற்றிலும் புரட்டிப்போடுகின்றது. இந்தப் போலித்தனங்களின் வழி உருவாகி வருவதுதான் அவரின் படைப்புகளாகவும் இருக்கின்றன. அவர் தான் எழுதுவதற்கும் நேர்மையாக இல்லை, தான் நம்பும் அரசியலுக்கும் நேர்மையாக இல்லை.
***
நாம் முன்வைக்கும் விமர்சனங்களை டயஸ்பொறா புலியெதிர்ப்பு, காப்ரேட் புலியெதிர்ப்பு எனும் ஒற்றைப் புள்ளிக்குள் தள்ளிவிட்டு தங்களுடைய போலித்தனத்தை அறியாமைப் பிற்போக்குவாதக் குப்பைகளை மறைத்துக் கொள்ளும் மொளடீகர்களுக்கு, நாம் பேசும் வன்முறை எதிர்ப்பு என்பது வெறுமனே புலி எதிர்ப்பாகச் சுருக்கி தப்பித்துக் கொள்ள நினைப்பது உங்கள் அறியாமையன்றி வேறல்ல. இங்கு எதிர்ப்பது புலிகளை மாத்திரமல்ல. புலியெதிர்ப்பு என்பது நம் சூழலில் குறியீட்டு ரீதியான அர்த்தம் நிரம்பிய அரசியற் செயற்பாடு. இங்கு எதிர்ப்பு என்பது நம்சூழலில் உள்ள சனநாயக மறுப்பை, விடுதலைப்போரட்டத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை, அதனுள் புரையோடியிருந்த சாதிய, நுண்பாஸிசத் தன்மையை, துரோகிகள் எனச் சொல்லிச் செய்த அழித்தொழிப்பை நியாயப்படுத்துவதை, இஸ்லாமிய வெறுப்பைக் கொண்டலையும் யாழ்ப்பாணிய மனநிலையை எதிர்க்கும் அரசியற் செயற்பாடாகும். புலி / வெள்ளாள / தமிழ்தேசிய மனநிலையின் சிதைவிலிருந்துதான் நம் சூழழில் சிறுபான்மை இனங்களிற்கிடையான அய்க்கியமும், சமத்துவமான வாழ்விற்கான விடுதலைக் கருத்தியலை நாம் கண்டடைய முடியும். அதை நீங்கள் புலி எதிர்ப்பு என்று சுருக்கி பேசுவீர்கள் எனின் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. இது லஷ்மி சரவணகுமார் நாவல் குறித்து முன்வைக்கும் விமர்சனங்களைப் புறந்தள்ளி புலியெதிர்ப்புச் சாயம் பூசி, தான் தப்பிக்க அணியும் சால்வையாகும்.
***
‘உப்பு நாய்கள்’, ‘வள்ளிதிருமணம்’ போன்ற நல்ல புனைவுகளை எழுதிய லஷ்மி சரவணகுமார் இன்று ‘ரகசியத்தின் அரூப நிழல்கள்’, ‘கானகன்’ , ‘நீலப்படம் ‘கொமோரா’ போன்ற மிகமலிவான pulp fiction களை எழுதிக்கொண்டிருப்பது அவர் தன்னைச்சுற்றி உருவாக்கிக்கொண்ட கூட்டத்தினாலே என்றே எண்ணத் தோன்றுகின்றது. அதில் தன்னை இரட்சகனாக நினைத்துக்கொண்டிருப்பது வேடிக்கையானது என்பதைப் புரிந்துகொண்டு அந்த மூடர்கூட்டத்திலிருந்து வெளிவர வேண்டும். சுய படைப்பூக்கத்தை நோக்கிச் செல்லவேண்டும். இல்லையெனில் அடுத்ததாக அவர் எழுதப்போவதாகச் சொல்லும் ‘திலீபன்’ நாவல் முள்ளிவாய்க்கால் பின்னணியில் டைட்டானிக் திரைப்படத்தை தழுவி எழுதியதுபோல் ஆகலாம்.
கட்டுரை எழுதியவர்கள் – தர்மு பிரசாத் | அனோஜன் பாலகிருஷ்ணன்
நன்றி: ஃபர்ஹான்
அருமை, ?