யதார்த்தனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு ‘மெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம்’. தொண்ணூறுகளுக்குப்பின் பிறந்து எழுத ஆரம்பித்த தலைமுறையைச் சேர்ந்தவர் யதார்த்தன்.
யதார்த்தன் தன் சிறுவயது பிராயத்திலிருந்து பதின்ம வயது இறுதிவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வாழ்ந்தவர். இறுதியுத்தத்தின் விளிம்புவரை சென்று மீண்டு முகாம் வாழ்க்கையைக் கழித்து, தற்போது பல்கலைக்கழக மாணவராக இருக்கிறார்.
இணைய வெளியில் எழுத ஆரம்பித்துப் படிப்படியாக இலங்கை சிற்றிதழ் சூழலுக்குள் வந்தவர். ஆரம்பத்தில் கவிதை உருவாக்கத்தில் ஈடுபட்டு பிற்பாடு கதைகள் எழுதுவதில் அதிகநேரத்தை செலவழிக்க ஆரம்பித்தவர்.
மெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம் தொகுப்பில் மொத்தம் பதினொரு கதைகள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாகச் சேர்த்து வாசிக்கும்போது யுத்தத்தின் போதும் யுத்தத்தின் முடிவுக்குப் பின்பும் உள்ள மக்களின் மனநிலையில் உறைந்திருக்கும் கீழ்மையையும் அன்பையும் சொல்வதாகவே தோன்றுகின்றது. ஒருவகையில் எளிய பொருளாதாரத்தைக் கொண்ட மனிதர்களின் அன்பின் மேல் ஏவப்படும் வன்முறையின் சிறிய முட்கள் அவை. அனைத்துக் கதைகளில் இருக்கும் நிலப்பரப்பும் ஒரே நிலப்பரப்பாபகவே இருக்கின்றன. இன்னும் கூர்ந்து பார்த்தால் அங்கிருக்கும் கதைமாந்தர்கள் அனைவரும் ஏதோவொரு வகையில் கதைசொல்லிக்கு நெருக்கமானவரக்களாக இருப்பார்களோ என்றும் தோன்றுகின்றன.
கதையின் கூறுநிலையைத் தன்னிலை சார்ந்து சொல்லலாம் அல்லது மேலிருந்து பரந்தவாரியாக அனைத்துப் பாத்திரங்களையும் பேசவிட்டுச் சொல்லலாம். இத்தொகுப்பில் இருக்கும் கதைகளில் தன்னிலை சார்ந்த அணுகுமுறையைக்கு அதிகம் அணுக்கம் இல்லாமல் பொதுப்படையாகக் கதையைச் சொல்லும் முறையையே கையாளப்படுகின்றது. வெவ்வேறு கதைபிரதித் துண்டுகளை இணைக்கும், கோர்க்கும் மையச்சரடாகவே கதைசொல்லி இருக்கிறார். பெரும்பாலான கதைகளில் வரும் கதையின் மைய மாந்தர்கள் பதின்ம வயதினைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். உண்மையில் அனைத்துக் கதைகளுக்குள்ளும் இந்தப் பதின்ம வயது மனநிலையைக் கொண்ட கதை சொல்லியே தெரிகிறார். கதைத் துண்டுகளை இணைக்கும் வேலையைச் செய்யும் கதை செல்லியிடம் இக்கூறுகள் மிதமிஞ்சிக் கிடக்கின்றன. அவர்கள் பருவப் பெண்களை அணுகுவதில் குறுகுறுப்பு கொண்டவர்களாக, பெண்களின் மார்பின் மீது பதற்றம் கொண்டவர்களாக, வாழ்க்கையின் சாரத்தை முதிர்ச்சியற்றுப் பார்ப்பவர்களா இருக்கிறார்கள்.
வன்னி நிலப்பரப்பும் அவை சார்ந்த தகவல்களும் ஏராளமாகக் கதைகளில் வருகின்றன. அவை ஒருவகையில் நுணுக்கம் மிக்கச் சித்திரம் ஆக்குகின்றன. சில இடங்களில் இந்த இயல்புகள் அதிகம் வடிவச்சிதறல்களை மிதமிஞ்சி உருவாக்கி விடுகின்றன. இலங்கைப்பூச்சி, கோழிக்கால் பட்டியின் கடைசிப்பசுமாடு போன்ற கதைகளில் இவை அதிகம் இருக்கின்றன. இந்த இயல்புகள் ஏனைய கதைகளிலும் தொடர்கின்றன.
புனைவு வாசிப்பு என்பது படைப்புகளில் இருக்கும் சமூக,அரசியல் கருத்தை வாசிப்பது அல்ல. அது இடது/வலது, புலி ஆதரவு/எதிர்ப்பு என்ற முடிவைக் கொடுப்பது அல்ல. ஒரு கருத்தைக் கண்டடையும் வாசிப்பு என்பதும், புனைவின் கட்டுமானச் சிக்கல் சார்ந்த அதன் உத்திகளைக் கண்டு வியந்து வாசிக்கும் வாசிப்பு என்பதும் உண்மையில் இலக்கிய வாசிப்பு அன்று என்றே என் புரிதலாக இருக்கின்றது. உணர்வுகளைக் கண்டடைதலே இலக்கிய வாசிப்புக்கு அணுக்கமான ஒன்றாக இருக்கும். உணர்வின் தூண்டுதல்களை நிகழ்த்துவதின் எல்லைகளை நிர்மாணிப்புச் செய்வதைப் படைப்பு உரிமை கோராது. அது வாசிப்பவரின் தன்னிலை சார்ந்ததாகவே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இத்தொகுப்பையும் அவ்வாசிப்பு ஊடாகவே அணுகுகிறேன்.
யதார்தனின் கதைகள் பெரும்பாலும் அதிர்ச்சி மதிப்பீடுகள் கொண்டவை. சமூக விழுமியங்கள், மானுட அறங்களை மீறிவிட்டு அதன் அபத்த உணர்ச்சிகளைப் பாணுக்குப் பூசும் பட்டர்போல் பூசி கதையாக மாற்றுகின்றது. இவை மெல்லுணர்வுகளைத் தூண்டுவதோடு நின்று விடுகின்றது. இவை கழிவிரக்கத்தைக் கோரவில்லை தான். ஆனால், உணர்வு பிளப்புகளைச் செய்கின்றன. இவற்றுக்குள் நுழைந்து துழாவிக் கண்டடைய பலசமயம் ஏதும் இல்லாமல் வெறுமையே எஞ்சுகிறது. லெப்ரினன் கோணல் இயற்கை, இறைச்சி, மிளகாய்ச் செடி, கோலியாத் போன்ற கதைகள் அவ்வாறே வெளிப்படையாக உணர்வுகளைத் தீண்டுவதோடு முடிவடைகின்றது.
இக்கதைகள் பேச்சு மொழியில் நகருகின்றன. உலகமயமாக்கல் சூழலுக்குப் பின்பு ஏற்பட்டு இருக்கும் பேச்சு மொழி ரீதியிலான மற்றத்தை அவதானிக்கலாம். எஸ்.பொ எழுதிய யாழ்ப்பாண மொழி இன்றில்லை. அவர்களுக்குப் பின் வந்த ராகவன், ஷோபா சக்தி போன்றோர் எழுதிய பேக்சு மொழியும் இன்று மாறிவிடுட்டது. யதார்த்தன் சொல்லிச் செல்லும் மொழி என்பது விவிலியத்தையும், இன்றைய உருமாறிய வடக்கின் பேச்சு மொழியையும் பிணைத்து அவருக்குரிய தனித்துவத்துடன் ஒப்பேற்றும் ஒன்று.
ஒட்டுமொத்தமாக யதார்தனின் படைப்புலகம் மானுடர்களின் அன்பைத் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கும் சக மனிதர்களின் கீழ்மையையே சொல்கின்றது. ஆ.மாதவன் மனிதர்களின் கீழ்மையைச் சொன்னார். அவருக்கும் யதார்த்தனுக்கும் இடையில் முக்கிய வேறுபாடு உண்டு. யதார்த்தன் அதிகம் அகவய உணர்வுகளுக்குள் செல்லாதவர். புறவயமான சித்தரிப்புகளிலே தங்கிவிடுவார். இது இயல்புவாத எழுத்தின் ஒரு பங்கு; புறவய சித்தரிப்புகள் ஊடக எளிமையாக அன்றாட நிகழ்வுகளை இணைத்துக் கதை சொல்லுதல். எஸ்.பொ, பூமணி போன்றவர்களிடம் இதே வகையான இயல்புகளைக் காணமுடியும். அதனாலே இன்றும் அவர்கள் இயல்புவாத எழுத்தின் முன்னோடிகளாக அடையாளப் படுத்தப்படுகிறார்கள். இலங்கைத் தமிழ் இலக்கியம் சார்ந்து நுண்சித்தரிப்புகளை அதிகம் வெளிக்கொணர்ந்தவர்களில் எஸ்.பொவும் தெளிவத்தை ஜோசப்ப்பும் முக்கியமானவர்கள்.
தெளிவத்தை ஜோசப்பின் கதைகளில் மலையக மக்களின் வாழ்க்கைச் சூழல் சார்ந்த தகவல்கள் எக்கச்சக்கமாக நுண்சித்தரிப்புகளின் ஊடாகப் புறவயமாக வரும். அதேநேரம் அகவயமான உணர்வுகளின் ஊடக ஒரு மானுட நாடகத்தை நிகழ்த்தி இயல்புவாத எழுத்திலிருந்து யதார்த்தவாத எழுத்துக்குத் தெளிவத்தை ஜோசப் சென்றுவிடுவார். குடை நிழல், மீன்கள் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் இவற்றுக்கு மிகச்சிறந்த உதாரணங்கள். யதார்த்தனின் கதைகளில் வன்னி நிலப்பரப்புச் சார்ந்த தகவல்கள் நுண்மையாக வரும். ஆனால், யதார்த்தன் அகவய உணர்வுகள் பக்கம் இன்னும் செல்லவில்லை, அவரை இயல்பு வாத எழுத்தாளராகவே என்னால் மதிப்பிட முடிகின்றது.
எளிய மனிதர்களின் ஆசைகளும் அவர்களின் வீழ்ச்சியும், உலகமயமாக்கலின் பின்பு சமூக வலைத்தளப் பாவனைகளின் அதிகரிப்பின் பின்பு, யுத்தம் ஓய்ந்த பின் எழுந்து வந்திருக்கும் தலைமுறையின் வாழ்க்கை மீதான அவதானிப்புகளை இக்கதைகள் இயல்பாக முன்வைக்கின்றன. அந்த வகையிலும் இலங்கை இலக்கியச் சூழலில் இத்தொகுப்பு முக்கியமான தொகுப்பாகவே தெரிகின்றது.
யதார்த்தன் தத்துவங்கள் ஊடாகவும் அனுபவங்கள் ஊடாகவும் தன் சுயம் சார்ந்த வாழ்க்கையின் மீதான மதிப்பீடுகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அவை புனைவடுக்குகள் ஊடக நுழையும் போது அசலான கதைகளாக வெளிவரும். அதற்கு இன்னும் செல்ல வேண்டிய மலையடிப்பாதை திறந்தே கிடக்கின்றது. அதை விரைவில் எட்டிப்பிடித்துவிடுவார் என்றே தோன்றுகின்றது.
வெளியீடு : ஆக்காட்டி
விலை : 300 ரூபாய் (இலங்கை) , 8 யூரோ
மலையகத்தில் இடம்பெற்ற 47-ஆவது இலக்கியச் சந்திப்பில் இத்தொகுப்பை அறிமுகம் செய்து வைக்கும் போது ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.