குற்றவுணர்வுகளில் வீழ்வதும் அதிலிருந்து வெளியேறத் தவிப்பதும் மனித வாழ்கையில் சகஜமான ஒன்றுதான். ஆனால், சுற்றிப்பிடிக்கும் குற்றவுணர்வுகளின் வீரியத்திற்கு ஏற்ப அதன் பாதிப்புகள் தொடரலாம். எனினும் குற்றவுணர்வு பிடிக்கப்பட்டவரின் மனதின் பலவீனம் அதன் விளிம்பு எல்லைகளை மாற்ற முயலலாம். சிறிய தவறுகளுக்குக்கூட அதிகம் வருந்தலாம். சிலர் பெரிய அநீதிகளுக்குக் கொஞ்சம் வருந்தலாம். சிலர் இறுதிக்காலங்களில் பலதை நினைத்து அதிகம் வருந்தலாம். அது தனிமனிதக் குணம் சார்ந்தது.
செயலின்மையின் முடிவற்ற எல்லையில் நின்று தத்தளித்து வெளியேறிய பின் ஏற்படும் குற்றவுணர்வுகளில் பீடிக்கப்பட்ட ஒருவன் அதிலிருந்து மீண்டுவர சந்தர்ப்பம் ஒன்று வேறுவகையில் கிடைக்கும்போது அதிலிருந்து எவ்வாறு மீள்கிறான் என்பதே “பட்ட விரட்டி” என்ற நாவலின் கதை.
சமாதானமும் அமைதியும் நிலவிய ஆப்கானிஸ்தானில் இருந்து யுத்தம் கொப்பளிக்கும் தலிபான்-அமரிக்க யுத்தம்வரை கதையின் களம் நீள்கிறது. யுத்தம் வன்முறை தலிபான்களின் அட்டூழியம், ரஷ்யாவின் மீதான விமர்சனம், இஸ்லாமிய அடிப்படைவாதம் மீதான விமர்சனம் என்று பல்வேறு விடயங்கள் வந்தாலும், கதையின் அகதரிசனம் இரண்டு சிறுவர்களுக்கு இடையிலான நட்பையும், தந்தைக்கும் மகனுக்குமான உறவையும், தனிமனித சுயநலத்தையும், கசியும் அன்பையும் வெட்டியெடுத்த துண்டுகளாகக் காட்டுகின்றது.
பெரும்பகுதிக் கதை ஆப்கானிஸ்தான் நகரான காபூல் நகரில் நடக்கிறது. ஹசனின் அப்பா அலி. அலியின் மனைவி சனோபர். அவர்கள் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். ஹசன் பிறந்த சிறிது நாளிலே சனோபர் ஒரு நாடோடி கும்பலுடன், அலியின் மீதான உறவுகளைத் துண்டித்துவிட்டுச் சென்றுவிடுகிறாள். ஹசனின் அப்பாவான அலிதான் ஹசனை வளர்க்கிறார்.
அலி, ஆகா என்பவருக்குக் கீழ் சிறுவயதிலிருந்தே வேலை செய்கிறார். ஆகா செல்வச்செழிப்பு மிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு ஒரு மகன். பெயர் அமீர். அமீர் பிறக்கும்போது ஆகவின் மனைவி இறந்துவிட்டார். அவர்கள் பஸ்டூன் இனத்தைச் சேர்ந்தவர்கள். பஸ்டூன்களுக்கு ஹசாரா இனத்தைச் சேர்ந்தவர்களைப் பிடிக்காது. இன ஒடுக்குமுறைகள் நிரம்பவேயுண்டு. அலி ஹசார் இனத்தைச் சேர்ந்தவர்.
ஆனால், ஹசனும் அமீரும் சிறுவயது முதல் ஒன்றாகவே வளர்கிறார்கள். அலியின் குடிசையில் ஹசன் வளர்ந்தாலும் அமீருடனே பலமணி நேரங்களை ஹசன் செலவு செய்கிறான். அமீர் மட்டுமே பாடசாலையில் கல்விகற்கிறான். ஹசனுக்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாது. அவன் தந்தையான அலியும் அவ்வாறே. இருந்தும் ஹசனுக்கும், அமீருக்கும் இடையில் நல்ல நட்பு இருக்கின்றது. அமீருக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் ஹசன் பரிவோடு செய்கிறான். அதில் கொஞ்சம் அடிமைத்தனமும் உண்டு. பல இடங்களில் ஹசனை தன் நண்பன் என்று சொல்வதைக்கூட அமீர் தவிர்க்கிறான். அவ்வாறான இடங்களில் வீட்டு வேலைக்காரனின் மகன் என்று சொல்கிறான். இது எல்லாம் தெரிந்தும் அமீருடன் ஹசன் சாந்தமான முகத்துடன் நட்புடனே யாரிடமும் அமீரை விட்டுக்கொடுக்காமல் இருக்கிறான்.
பட்டம் விடுவதில் இருவரும் வல்லவர்கள். காபுலில் பட்டம் விடும் போட்டிகள் நடக்கும். பறக்கும் பட்டங்களை மாற்றி மாற்றி அறுக்க வேண்டும். அறுந்த பட்டங்களை அறுத்தவர் தேடிப்பிடித்துச் சேகரிக்கவும் வேண்டும். அதிலே வெற்றி தங்கியுள்ளது. அமீர் அறுக்கும் பட்டங்களை ஹசனே தேடிப்பிடித்துக் கொண்டுவருவான். இவ்வாறான சூழலில் பஸ்டூன் இனத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் அமீரிடன் வம்புக்கு இழுக்கிறார்கள், ஹசார இனத்தைச் சேர்ந்த ஹசனிடமான நட்பைத் துண்டிக்கச் சொல்கிறார்கள். வெருட்டுகிறார்கள். ஒரு சமயத்தில் ஹசன் ஆமிரை அவர்களிடம் இருந்து காக்கின்றான். அது கடும் சினத்தை அவர்களிடம் விதைக்கிறது.
பிறிதொரு சந்தர்பத்தில் ஹசன் மீது கொண்டிருக்கும் கோபத்தினால் அவனை வன்புணர்வு செய்துவிடுகிறார்கள். அதனை ஒளிந்திருந்து, அதனைத் தடுக்க இயலாமல் அமீர் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவர்களிடம் சண்டையிட திராணியற்று நண்பனை காப்பற்ற முடியாமல் திணறி நிற்கிறான். இந்தக் குற்றவுணர்ச்சி அமீரை கொடுமைப்படுத்துகின்றது. தனக்கு நடந்த சம்பவம் எதுவும் தெரியாதது போல நடிக்கிறான். ஆனால், வன்புணர்வு நடக்கும்போது பார்த்துகொண்டு கையாலாகாத் தனமாக நின்றது ஹசனுக்குத் தெரிந்திருக்குமோ என்று உள்ளூர அஞ்சுகிறான். இந்த அச்சமும், ஹசனின் அமைதியான மௌனமும் அவனது அன்பும் அமீரை நிலைகுலைய வைக்கின்றது.
ஹசனை தன்னை வெறுக்கவைக்க முயலுகிறான். ஆனால், அவன் அன்புடனே இருக்கிறான். என்ன செய்து அவனைக் காயப்படுத்தினாலும் அவன் பதிலுக்கு எதுவும் செய்யாமல் அன்பாகவே இருக்கிறான். இந்த அன்பின் மௌனத்துக்குள் சிக்குண்ட அமீர் அவதிக்குள்ளாகி அதிலிருந்து வெளியேற ஹசனை தன் அருகாமையில் இருந்து அப்புறப்படுத்த விரும்புகிறான். போலியான திருட்டுக் குற்றத்தைச் சுமத்தி அலியையும், ஹசனையும் வெளியேற்றுகிறான். இதைச் செய்தது அமீர் என்று தெரிந்தும் ஹசன் அந்தக் குற்றத்தை தான் செய்ததாக ஏற்றுக்கொள்கிறான். இதுவெல்லாம் தனக்காகத்தான் என்று தெரிந்த அமீர், ஹசனின் தூய அன்பின் முன்னால் அவதிக்குள்ளாகி துன்புற்று நிற்கிறான். இந்தக் குற்றவுணர்வு அவனை மிகவும் பாதிக்கிறது.
அதன் பின் ஆப்கானிஸ்தானுக்குள் ரஷ்ய படைகள் வருகின்றன, யுத்தம் வலுக்கின்றன. பலர் அகதிகளாகி நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள். அமீரும் அவனுடைய தந்தையும் காபூலைவிட்டு அகதிகளாக அமெரிக்கா செல்கிறார்கள். அங்கு வேறொரு வாழ்க்கை. உயர் கல்வி, பல்கலைக்கழகம் என்று சென்று, காதலித்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்கிறான். காதலித்த பெண் தன் கடந்தகாலக் கசப்பான காதல் அனுபவம் ஒன்றைச் சொல்கிறாள். அதனைச் செவிமடுக்கும் அமீர், தான் ஹசனுக்குச் செய்த துரோகத்தை அதுபோல் வெளிப்படையாக அவளிடம் சொல்ல முடியாமல் திணறுகிறான். அதுவொரு கொடிய கனவாக இருக்கிறது.
இதிலிருந்து மீண்டு வர அவனுக்கு ஒரு சந்தர்பம் வாய்க்கிறது. அது மிகப் பயங்கரமானது. மீண்டும் ஆப்கானிஸ்தானுக்குச் செல்கிறான். தலிபான்கள் ஆட்சி அங்கே; நிறைய அதிர்ச்சிகள் அவனுக்குக் காத்துக்கிடக்கின்றன அங்கே. அவை உளவியல் ரீதியான நெருக்கடியை உண்டு செய்யக்கூடியவை. அது என்னவென்று நாவலை வாசித்துத் தெரிந்துகொள்க.
அமீருக்கு இருக்கக்கூடிய பிரச்சினை, ஆளுமை சார்ந்த குறைபாடு. அம்மா இல்லை என்கிற ஏக்கம் ஒருபக்கம் இருந்தாலும் அதன் தாக்கம் பெரியளவில் அவனிடம் இல்லை. இருந்தும் பலவீனமானவனாகவே இருக்கிறான். பணம் என்னும் அதிகாரம் அவனிடம் இருக்கிறது, இருந்தும் அதிகமான நண்பர்கள் அவனுக்கு இல்லை. சமூகம் கற்பித்த ஒழுக்கத்தில் அவன் சிறந்தவனாக இருக்கிறான். அவனது காதலி, தன் கடந்தகாலத்தில் ஓர் ஆணுடன் இருந்ததைப் பற்றிச் சொல்லும்போது, அவனிடம் சிறிய எதிர்மறைத் தாக்கம் உருவாகிறது. தான் இதுவரை ஒரு பெண்ணைக்கூடப் படுக்கைக்கு அழைத்துச் செல்லவில்லை, ஆனால் அவள் அப்படி இல்லை என்கிற முள் குத்துகிறது. இருந்தும் தன் காதலியை கட்டற்ற அன்புடன் நேசிக்கிறான். இந்த நேசிப்பும், அவள் மீதான அன்பும் நாவலின் பிற்பகுதியை நிறைக்கின்றது.
ஹசன், அலியின் அரவணைப்பில் வளர்ந்தவன். அமீரை அதிகம் நேசிக்கிறான். யாரிடமும் அவனை விட்டுக்கொடுப்பதில்லை. பலமுறை அமீர் வெவ்வேறு வகையில் அவமானப்படுத்தியும் ஹசன் மௌனமாக அதே அன்புடன் நிற்கிறான். அவனது குணம் ஒருவகையில் அடிமைத்தனம் மிக்கது, எனினும் உறுதியான நேசிப்பும் கொண்டது.
அமீர்,ஹசன் இருவருக்கும் இடையிலான உறவும், அமீரின் உளவியல் கொந்தளிப்பும், அகச்சிகளும் நாவலை பல்வேறு படிகளுக்குள் தள்ளி உயர்த்துகின்றது.
காலித் ஹுசைனி எழுதிய நாவல் The Kite Runner. தமிழில் பட்ட விரட்டி என்ற தலைப்பில் எம்.யூசூப் ராஜா மொழிப்பெயர்த்துள்ளார். கச்சிதமான மொழிபெயர்ப்பு. எந்தத் தடங்களும் இன்றி ஒரே அமர்வில் வாசிக்க வைக்கும் மொழிபெயர்ப்பு.
ஒன்பது வருடங்களுக்கு முன்பு வெளிவந்து உலகெங்கிலும் 55 மொழிகளில் மொழிபெயர்க்கபட்டு, 2 கோடிக்கும் மேல் விற்பனையான நாவல் இது. The Kite Runner என்ற பெயரில் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. அமரிக்க சார்பு இவ்நாவலில் வெளிப்படையாகத் தெரிந்தாலும், மனிதர்களின் கதை என்ற ரீதியில் அட்டகசமான நாவலாகவே தெரிகிறது.
தனிமனித கீழ்மைகளை அட்டகாசமாக வெளிப்படுத்திய இவ்நாவல், கடும் உணர்வுக் கொந்தளிப்பைத் தருகின்றது.
பட்ட விரட்டி
காலித் ஹூசைனி
தமிழில் எம்.யூசூப் ராஜா
எதிர் வெளியீடு