கோவம் எழும் உந்துதல் கணம் சட்டென்று பெரும் விசையுடன் எழும்போது சுற்றியிருக்கும் அணைத்துத் தற்காலச் சூழலும் மறந்துபோகும். எமக்கு மிகப்பிடித்தவர்களைக் கூட மிகுந்த கோவத்துடன் எம் நிலை மறந்து சில இடங்களில் வசைச் சொற்களால் பேசியிருப்போம். அந்த இடங்களில் அவ்வாறு பாவனைச் செய்திருக்கக்கூடாது என்பது உறைக்கும்போது, எல்லாமே மாறியிருக்கும். மிக மனம் நோகடித்துப் புண்படுத்தியிருப்போம். அனைத்தும் தலைகீழாக உருமாறியிருக்கும்.
இலங்கையர்கோன் எழுதிய ‘வெள்ளிப் பாதசரம்’ சிறுகதை அவ்வாறான நெருக்கடி ஒன்றை கண்முன்னே சித்தரிக்கின்றது. மிகப் பிரமாண்டமாக நிகழும் திருவிழா ஒன்றுக்குத் திருமணமாகி மூன்று மாதங்கள் கழிந்த புதுத் தம்பதியினர் செல்கிறார்கள். கணவன், தன் மனைவிக்கு நிரம்பிய ஆசையுடன் காலில் அணியும் வெள்ளிப் பாதரசம் சங்கிலியைப் பரிசளிக்கிறார். அச்சங்கிலி மிக விஷேசமானது, இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டது.
ஆனால், அத்திருவிழாவிலே ஒரு காலில் அணிந்திருந்த சங்கிலி பாதத்திலிருந்து கழன்று காணாமல் சென்றுவிடுகிறது. அதை அவதானித்த மனைவி, கணவரிடம் சொல்ல கணவர் நிலை மறந்து உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு உள்ளாகி மனைவியைக் கடும் வசைச் சொற்களால் பேசிவிடுகிறார். மனைவி கடுமையாகப் புண்பட்டுவிடுகிறார். மனைவியின் கண்கள் பனிப்பதைக் கண்டவுடன் கணவன் சமநிலையடைகிறார். மேற்கொண்டு திருவிழாவில் கலந்துகொள்ளும் எண்ணம் அற்று மனைவி வீட்டுக்கு மீண்டும் செல்லுமாறு கணவரிடம் பணிக்கிறார். கணவர் தன் நிலை எண்ணி வருந்தி மன்னிப்பு கேட்ட பொழுதிலும், கடுமையாகப் புண்பட்ட மனைவி திருவிழா வேண்டாம் என்று மறுத்து வீட்டுக்குச் செல்வதிலே இஷ்டமாக இருக்கிறார். மறுவார்த்தை பேசாது கணவன் மனைவியை வந்த வழியே மாட்டு வண்டியில் அழைத்துச் செல்கிறார்.
மௌனமாக அமர்ந்து வரும் மனைவி மாட்டு வண்டிப் பயணத்தில், இயற்கை காட்சிளுடன் ஒன்றிப்பிணைந்து தன் அடியாழ உள்ளத்திலிருந்து நடந்த கடுமையான சம்பத்தை மீட்டு அதிலிருந்து வெளியே வருகிறார். கணவன் மீது கருனையும் அன்பும் மீண்டும் வருகிறது. அதற்கான காரணங்கள் மிக நுட்பமாக, எளிமையான கருணை நிரம்பிய பெண் சிந்திப்பது போல வருகின்றது. கணவர், மனைவி சமநிலைக்குத் திரும்பியதை அவளின் கூர்மையான சொற்களில் இருந்து அறிந்து கொள்கிறார். மிக வலிமையான ஆண்-பெண் உறவுகளுக்குப் பின்பேயுள்ள வலிமையான பிணைப்பை மெல்லிய கோடாக ஒரு சிறுகதையில் இழுத்திருப்பார் இலங்கையர்கோன்.
பேருந்துப் பயணத்தில் யன்னலோர இருக்கையில் அமர்ந்து வீதியின் நகர்வுகளைப் பார்க்கும்போது, ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நாம் வேறொரு கோணத்தில் மதிப்பீட்டு அலசியராய்வோம். மிக முக்கியத் திறப்புக்கள் நமக்குக் கிடைத்திருக்கும். மிக முக்கியத் தருணங்கள் அவை. அதே புள்ளி இக்தையில் மிக இயல்பாக வரும்.
இதேவகையான கதைகள் இப்பொழுது மீண்டும் மீண்டும் எழுதப்பட்டு, நீர்ந்துபோன கதைகளா ஆகிவிட்டாலும் இக்கதையின் மீதான மதிப்பீட்டை இக்கதை எழுதப்பட்ட காலப்பகுதியான 1960-களில் வைத்தே மதிப்பிட வேண்டும். சம்பவ வர்ணனைகளும், உணர்வுகளின் சித்தரிப்பும் இக்கதையை இன்றும் ‘ஈழத்து இலக்கிய’ பரப்பில் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக நிறுத்துகிறது.
பின் குறிப்பு
ஈழத்துச் சிறுகதைகளின் முன்னோடிகள் என்று குறிக்கப்படுபவர்களில் இலங்கையர்கோன், சம்பந்தன், சி. வைத்தியலிங்கம் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் இலங்கையர்கோன் ஒருவர் என்றபோதும் இன்று வரை அவரது எழுத்துகள் தொகுக்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது 15 கதைகளே அவர் இறந்து ஒரு வருடத்தின் பின் ‘வெள்ளிப் பாதசரம்’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. இன்னும் தொகுக்கப்படாத கதைகள் இருக்கின்றன தவிர அவர் மொழிபெயர்த்த சிறுகதைகள் பலவும் உண்டு. நாடகங்களும் பல எழுதியுள்ளார்.
ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளின் தொகுப்புக்கள்கூட இன்னும் எமது சூழலில் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பது கவலைக்குரியது.
நூலகம் நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள ‘வெள்ளிப் பாதசரம்’ புத்தகத்தை தரவிறக்கிக்கொள்ள இங்கே அழுத்தவும்