பாத்திரம் – ஐ.சாந்தன் – 08

நாம் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்கவேண்டும் என்றே விரும்புவோம். அவை பிழைக்கும் போது கடுமையான மனச்சோர்வு சுற்றிப்பிடிக்கும். இந்த அழுத்தங்களில் இருந்து வெளியேற உள்மனம், முன்னம் எடுத்த முடிவு ஏன் பிழைத்தது? நான் எடுத்த முடிவு உண்மையில் பிழையா? தவறு நம்பக்கமா? ச்சே ச்சே இல்லை; என் பக்கம் அவ்வாறு இல்லை என்று ஓயாமல் அரற்றிச் சமாதானப்படுத்த காரணங்களைத் தேடும்.

அதே போல் ஏமாற்றப்படும்போதும் அந்த அவமானகரமான வலியில் இருந்து வெளியேற மனம் ஒரு காரணத்தைத் தேடித்பிடித்துச் சுயசமாதானப்படுத்தும். மனித மனதின் நுட்பமான கூறுகள் அவை.

                                                     ஐ.சாந்தன்

ஐ.சாந்தன் எழுதிய ‘பாத்திரம்’ சிறுகதை மிக எளிமையான சின்னத் தருணத்தை வெட்டி எடுத்து உருவாக்கிய அட்டகாசமான சிறுகதை.

கொழும்பில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்தப்பட்ட இன ஒடுக்குமுறை வன்முறையில் எக்கச்சக்க பேர் வதிவிடத்தை, சொத்துகளை இழந்தார்கள். வடக்குக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர்க்கு வடக்கில் வீடுகள் இல்லை. அப்படியொரு நிலையில் வடக்கு அனுப்பப்பட்ட கணவனை இழந்த பெண் ஒருவர் பொருளாதார உதவி தேடி வருகிறார்.

இளைஞனின் ஒருவரின் பார்வையில் கதை நகர்கிறது. அப்பெண்ணின் நிலையறிந்து வருந்திய இளைஞனின் தயார் பண உதவி செய்ய வீட்டுக்குள் செல்கிறார், அந்த நேரத்தில் அப்பெண்ணுடன் உரையாடிய இளைஞன் உண்மையில் அப்பெண் கொழும்பிலிருந்து வரவில்லை, பொய் சொல்கிறார் என்பதை ஊகிக்கிறார்.

அம்மாவிடமிருந்து பணத்தை வேண்டிக்கொண்டு அப்பெண் சென்றபின் அம்மாவிடம் அவள் சொன்னது பொய்; ஏன் பணம் கொடுத்தீர்கள் என்று எரிச்சலுடன் கேட்கிறார். அதற்கு அம்மா “பாவம், அவள் வீட்டை விட்டு அதிகம் வெளிக்கிடாமலிருந்திருக்கலாம்” என்பார். உடனே அப்படிதான் இருக்கும் என்று இளைஞனின் மனம் சமாதானம் அடைகிறது.

உண்மையில் கதையின் முடிவு நுட்பமானது. கருணையின் எல்லையில் நிக்கும்போதும் தான் ஏமாற்றப்படவில்லை என்பதை மனித மனம் விரும்புகின்றது. அப்படித்தான் இருக்கும் என்ற சுய சமாதானத்தை உருவாக்கிக்கொள்கிறது. மிகக்கூர்மையான தருணம் அது! அதை ஓர் அசலான கதையாகச் சாந்தன் எழுதியிருக்கிறார்.

ஐ.சாந்தன் மிகக்குறைந்த சொற்களில் கூர்மையாகக் கதைகளை எழுதிவிடுவார். தேவையற்ற அலங்காரங்கள் இருக்காது. குறைத்துரைத்து எழுதும் முறையை ஈழ இலக்கியத்தில் அறிமுகப்படுத்திய முன்னோடியாகச் சாந்தனைக் கருத இயலும். இவருக்கும் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனுக்கும் இடையில் படைப்பாக்கம் சார்ந்து நிறைய ஒற்றுமைகள் உண்டு. மிக எளிமையான தருணங்களைக் கதையாக மாற்றும் அசோகமித்திரன் போன்றே சாந்தனின் கதையுலகமும்.

பின் குறிப்பு

ஐ.சாந்தன் பற்றி மேலும் தெரிந்து கொள்ள அருண்மொழிவர்மன் எழுதிய இக்கட்டுரையை வாசிக்கலாம்.

‘பாத்திரம்’ சிறுகதை ‘காலங்கள்’ தொகுப்பில் உள்ளது. நூலகம் நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள அப்புத்தகத்தை தரவிறக்கிக்கொள்ள இங்கே அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *