சிறுவயதில் என்னவாக ஆக விரும்பினேன் என்று எனக்குள்ளே நான் கேட்கும் போது ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொன்றை விரும்பியிருந்தது நினைவுகளில் வருகின்றது. இருந்தும் ஏதோவொரு லட்சியம் ஆழமானதாக மனதுக்கு மிக நெருக்கமானதாக இருந்துவிடுகிறது. வழி தவறியோ விரும்பியோ விரும்பாமலோ நாம் வேறொரு துறைக்குள் நுழைந்து அதிலே சுழன்று வாழ்ந்து எல்லாம் சரியாகச் செல்கிறது என்ற திருப்தியில் இருக்கும்போது திடீரென்று இது எனக்குரிய துறையில்லை; இது நான் விரும்பியதில்லை என்று தெரியவரும். நினைவுகளையும் ஏக்கங்களையும் பிசைந்து ஒருவிதமான மந்தமான மனநிலைக்கு மனிதமனம் இட்டுச் செல்லும். ஏதாவொரு கட்டத்தில் பெரும்பாலானவர்கள் அனுபவித்து இருப்பார்கள்.
சிறுவயது இலட்சியக் கனவுகள் மிக வலிமையானவை. ஒரு விதைபோல ஆழமாக மனித சதைக்குள் உறைந்திருக்கும். அன்றைய பருவங்களில் எம்மைச்சுற்றி நிகழும் சம்பவங்களும் சுற்றியிருக்கும் மனிதர்களுமே அவற்றைத் தீர்மானிக்கும். வளரும்போதும் வெவ்வேறு வாழ்க்கைச் சூழலுக்குள் நுழையும்போதும் அவை மாறுபடும். இருந்தும் ஆழமாக உறங்கிக்கொண்டிருக்கும் விதை துளிர்த்து வெளியே முளைத்து அனைத்தையும் அடையாளம் காட்டும்.
வ.அ.இராசரத்தினம் எழுதிய சிறுகதைகளில் ‘தோணி’ சிறுகதை சிறுவயதில் ஏற்படும் இலட்சியம் ஒன்று முகிழ்ந்து எழும் கனவைப் பற்றிப் பேசுகின்றது. எப்படிச் சிறுவயதில் ஏற்படும் ஆழமான மன எழுச்சிகள், இலட்சிய வெறிகளைத் தீர்மானிக்கின்றன என்பதே கதையின் மையச்சரடகா இருக்கின்றது.
கதை செல்லியான சிறுவனின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. மிக அட்டகாசமாகச் சிறுவர்களுக்குரிய நுண்ணிய அவதானிப்புக்களுடன் குதூகலமாக நகர்கிறது. அப்பா தினமும் தோணியில் ஏறி மீன்பிடிக்கச் செல்வதை ஆசையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறான். தானும் ஒரு நாள் தோணியில் ஏறி மீன்பிடிக்கச் செல்வேன் என்பது அவனது சிறிய மனதை இன்பப்படுத்துகிறது. முருங்கை மரத்தடியில் விளையாட்டுத் தோணி செய்து விளையாடுகிறான். உள்ளதைக் கிளர்த்துகிறான்.
ஒரு கட்டத்தில் அப்பாவின் தோணி அவருக்குச் சொந்தமானது அல்ல; அப்பா கூலிக்கு முதலாளிக்கு வேலை செய்கிறார் என்பது தெரிய வருகிறது. அச்சம்பவம் ஆழமான மனக் காயத்திற்கு அவனை இட்டுச்செல்கிறது. எதிர்காலத்தில் சொந்தமாகத் தோணி ஒன்றை வாங்க வேண்டும் என்பது மிகப்பெரிய இலட்சிய வெறியாக உருவெடுக்கிறது. இந்த மன எண்ணவோட்டங்கள் சிறுவனுக்குரிய அணுகுமுறையுடன் எழுத்தில் வ.அ.இராசரத்தினம் கொண்டு வந்திருப்பார்.
கதை இறுதி முடிவை நோக்கிச்செல்லும்போது இக்கதை வலிந்து திணித்த முற்போக்குக் காரணிகளுடன் அதீத நாடகமா செயற்கையாக முடிவடையும் கதையாக இருக்கிறது. சிறுவனின் மன எண்ணங்களைச் சிறுவர்களுக்குரிய பாணியில் நகர்ந்து வந்தாலும், அவன் வளர்ந்து இளம் பொடியனாகிய பின்னரும் அவனின் பார்வைக் கோணத்தில் சிறுவனின் இயல்புகளே இருக்கின்றன. இரண்டு பருவத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை நுண்மைகயாச் சித்தரிக்கப்படவில்லை என்பது குறையாகவே இருக்கின்றது.
எனினும் இக்கதையின் முன்பகுதி மிகக்கூர்மையாகச் சித்தரிக்கப்பட்டு எழுதப்பட்டு இருக்கின்றது. காட்சிச் சித்தரிப்புகளும் சரி, மனங்களின் ஏக்கங்களும் இயல்பாக இருக்கும். மிக இயல்பான முடிவை நெருங்கி இருந்தால் மேலும் ஒருபடி இச்சிறுகதை சென்றிருக்கும்.
பின் குறிப்பு :
வ. அ. இராசரத்தினம் அதிகம் அறியப்பட்ட ஈழத்தின் மூத்த புனைவு எழுத்தாளர். 1940-கள் முதல் எழுதி வரும் வ. அ.இராசரத்தினம் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதை எழுதியிருக்கிறார். அவருடைய முதல் கதைத் தொகுதியின் மகுடக்கதையான ‘தோணி’யே மிகுந்த கவனிப்பையும் பரவலான வரவேற்பையும் பெற்றது. அநேக தொகுப்புகளில் அது இடம்பெற்றிருக்கிறது.
‘தோணி’ சிறுகதை ஈழகேசரியில் 1954 இல் வெளியாகியது. அது தோணி என்கிற தொகுதியாக 50-54 இல் அவர் எழுதிய கதைகளின் தொகுப்பாக இளம்பிறை பதிப்பகம் ஊடாக ரஹ்மானால் பதிப்பிக்கப்பட்டது. பின்னர் ஒரு காவியம் உருவாகிறது என்கிற பெயரில் வ. அ. இராசரத்தினத்தின் முழு கதையும் எஸ்.பொவின் மித்ர பதிப்பகம் ஊடாக வெளியாகியிருக்கிறது.
‘தோணி’ சிறுகதையை ‘ஒரு காவியம் நிறைவு பெறுகிறது’ சிறுகதை தொகுப்பில் வாசிக்கலாம். நூலகம்திட்டத்தின் கீழ் தரவிறக்கிக்கொள்ள இங்ககே அழுத்தவும்.