அறங்களாக வகுத்துக்கொண்டதை மீறும் போது ஏற்படும் குற்றவுணர்வின் இடைஞ்சல்களைக் களைவது ஒரு சவால்தான். மீறல்களை எவ்வளவு விரைவாக நிகழ்த்த முனைந்தாலும் குற்றவுணர்வு வேகத்தடையை ஏற்படுத்தும். இந்தக் குற்றவுணர்வு என்பது வகுத்துக்கொண்ட அறங்களை நம்புவதிலும் பின்பற்றுவதிலுமுள்ள அதீத ஈடுபாட்டால் உருவாவது. வலிமையாக அறத்தை நம்பினாலும், சில இடங்களில் அதனை மீற அதை நம்பிய மனித மனம் துடிக்கிறது. சமூகத்தில் இடம்பெறும் நம்மவியலாத பாலியல் உறவுமுறைகள்கூடப் பல சமயம் செய்திகளாக அறிந்துகொள்ளும்போது அறங்களுக்கு நன்கு பழகிய மனிதமனம் திடுக்கிடுகிறது. இது என்ன உலகம் என்று வெறுப்பை உமிழ்கிறது.
மு.தளையசிங்கம் எழுதிய சிறுகதையில் முக்கியமானது “கோட்டை”. திருமணமாகி வாழ்ந்து வரும் ஒருவருக்கும் அவரின் வீட்டில் தங்கி பரீட்சை ஒன்றுக்குப் படித்து வரும் மிக இளம் வயது பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் தனிமனித அகச்சிக்கல் சார்ந்த சிறுகதையாக இச்சிறுகதையைக் கருத இயலும். அப்பெண்ணின் மீதான கவர்ச்சி என்பது அவருக்குக் காமம் சார்ந்ததாகவே இருக்கிறது, அவள் மனைவியின் அண்ணன் மகள்; இவருக்கு மருமகள் முறை. அவற்றில் தெளிவிருந்தும் அவருக்குள் சாதாரணமாகப் பதுங்கியிருக்கும் மிருகம் விழித்துவிட்டது.
அந்த இளம் பெண்ணுக்கும் அவரின் மீது ஈர்ப்பு இருகின்றது. அவளின் அகம் சார்ந்த மனக் கதவுகள் ‘கோட்டை வாயில்கள்’ போல் அவருக்குத் தோன்றுகிறது. படிப்படியாக அதனைத் திறக்க வேண்டும். அதற்கான நகர்த்தலை தினமும் செய்கிறார். பலசமயம் கோட்டை கதவுகள் தானாகத் திறக்கின்றன. ஒரு கட்டத்தில் கதவுகள் நன்கு திறக்க குற்றவுணர்வு அதிகம் அவரை மீறிக் கிளற, அந்தக் குற்றவுணர்வுகளை அந்தப்பெண்ணின் மீதும் ஏற்றிவிடுகிறார். எதிர்பாராத வகையில் அனைத்துக் கதவுகளும் இறுக்கமாகச் சாத்தப்படுகின்றன. இனிமேல் எப்போதும் திறக்க முடியாது. கோட்டையைத் தகர்த்தும் உள்நுழைய முடியாது.
இக்கதையில் உறவுசார்ந்த தளத்தில் ஏற்படும் உணர்சிக் கொந்தளிப்புகளைப் பாத்திரங்கள் ஊடக ஊடாடவிடுவதிலும் பார்க்க அதனை விளக்கி எழுதுவதிலே மு.தளையசிங்கம் முனைப்பாக இருக்கிறார். இதனால் சம்வங்கள் சுருங்கி, சிக்கல்களை முன்குறிப்பாக விளக்கி எழுதும் பந்திகளே அதிகமாகின்றன. இருந்தும் அக்கதையின் திறப்புப் புள்ளி என்பது முக்கியமானதாகிறது.
இச்சிறுகதை 1960-களில் எழுதப்பட்டது. இதே காலப்பகுதியில் எழுதப்பட்ட பெரும்பாலான தனிமனித அகச்சிக்கல் நிறைந்த கதைகளில் பெண்ணுடன் ஏற்படும் உறவை ‘ஆணின்’ பார்வையில் பேசுவதாகவே பெரும்பாலும் அமைத்திருக்கிறது. இவ்வாறான கதைகள் அதே காலப்பகுதியில் பெண்களின் பார்வையில் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை அவதானிக்கும் போது, இன்னும் மனித உறவுகளின் சிக்கல்களை ஈழத்து பொது மனநிலையில் வைத்து புரிந்து கொள்ள இயலும். இன்றுவரை பெண்களின் பாலியல் குறித்த எழுத்துகள் அதிகம் கவிதைகள் ஊடாக வெளிப்பட்டதாகவே இருக்கின்றது. இக்காலத்திலும் அவைபூடகமாக எழுதுகின்ற சுதந்திரத்தில் அல்லது புரிந்துணர்வு அற்ற சமூகத்தில் ஏற்படும் விளைவுகளைச் சமாளிப்பதற்கு ஏற்ற தற்காப்பு உத்திகளைக் கவிதைகளில் மேற்கொள்ள முடியும் என்பது அதற்குக்குரிய காரணமாக இருக்கலாம்.
இச்சிறுகதை ‘புதுயுகம் பிறக்கிறது’ தொகுப்பில் உள்ளது.
மு.தளையசிங்கத்தின் ‘கோட்டை’ சிறுகதைத் தொகுப்பினை நூலகம் திட்டத்தின் கீழ் தரவிறக்கிக்கொள்ள இங்கே அழுத்தவும்.