அப்பாவிடம் இருந்து மகளுக்குக் கிடைக்கும் அன்பென்பது வெளிப்படையானது. அன்பு திகட்டும் பேச்சும் கருணை சொட்டும் விழிப்பரிமாற்றமும் நேரிடையாகவே அப்பாவிடமிருந்து மகளுக்குக் கிடைக்கும். ஆனால், அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அன்பும் பாசமும் வெளிப்படையற்றது. கண்டிப்பும் சரி, கருணையும் சரி அம்மாவின் மூலமே அப்பா, மகனுக்குத் தெரிவிப்பதே எமது சூழலில் அதிகம் நிகழும் பொதுப்படையான உண்மை.
அனேகமானவர்களின் வீட்டுச்சூழல் அப்படித்தானிருக்கின்றது. அதேபோல் அம்மாவுக்கும் மகனுக்குமேல் இருக்கும் அன்பும் வெளிப்படையானது. இருந்தும் இரண்டுக்கும் நுண்மையான வித்தியாசம் இருக்கின்றது. அம்மாவின் அன்பு தன் சுயநலத்துடன் கலந்தும் மகனின் தேவைகளின் மீது சிரத்தை எடுத்தும் இரண்டுக்கும் இடையில் அல்லாடி ஒரு சமநிலையில் நின்று தத்தளிக்கும்; கண்ணீர் சிந்தும், தன்னை வருத்திக்கொள்ளும்.
ரஞ்சகுமார் எழுதிய ‘கோசலை’ சிறுகதை அம்மாவுக்கும் மகன்களுக்கும் இடையிலான அன்பையும், ஏக்கத்தையும் மிகக்கூர்மையாகச் சொல்கிறது. மீண்டும் மீண்டும் வாசித்தாலும் இன்னும் அதே செறிவோடு தவிர்க்க இயலாத ஈழத்துத் தமிழ் சிறுகதைகளில் ஒன்றாக இருக்கின்றது. தன் அருகாமையில் இருந்து, எப்போதும் கதகதப்பான தன் தோள்களுக்குள் ஒளிந்துகொண்டு, இருட்டுக்குப் பயந்து எப்போதும் ‘அம்மா அம்மா’ என்று குலாவும் சிறுவர்கள் மெல்ல மெல்ல வளர்ந்து ஒருகட்டத்தில் கற்பனைக்கு எட்ட முடியாத பயங்கரத்தைக்கூட மிக எளிமையாகச் செய்கிறார்கள். எப்படி இந்தத் திறன்கள் இவர்களுக்கு வாய்த்தது, என் கூடவே ‘பயந்து பயந்து’ வளர்ந்த இவர்களிடம் இப்படி அசாத்திய வீரம் கிளர்ந்து எழுந்துது; எந்தக் கணத்தில் இம்மாற்றங்கள் நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ளக் கடினப்பட்டு ஒரு தாய் திகைத்து ஆச்சரியம் அடைவதை ‘கோசலை’ சிறுகதை உரசி ஒருகணத்தில் சட்டென்று சொல்லிவிடுகிறது.
அக்கதையில் வரும் அம்மாவுக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள். ஆனால், அவரின் சிந்தனையும் பயமும் மகன்களைச் சுற்றியே இருக்கின்றது, மகளைப்பற்றிப் பெரிதாக அக்கறை என்பது அவரின் மனதில் கிஞ்சித்தும் இல்லை. அக்கதை எழுதிய சூழலில் ஆயுதபோராட்த்தில் பெண்களின் பங்களிப்புப் பெரியளவில் இல்லாமல் இருந்திருக்கவேண்டும். இதே கதை வேறொரு காலத்தில் எழுதப்பட்டிருந்தால் மகள் மீது அம்மாவுக்கு இருக்கும் உணர்வுத் தளமும் சிறப்பாக ரஞ்சகுமாரினால் எழுதப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். இருந்தும் இயல்பு நிலையில் எழக்கூடிய மகள் மீதான பிரஞ்சைகூட மகன்களின் மீதான அழைக்களிப்பில் சிறுமையாகத்தானுள்ளது.
வெவ்வேறு இயக்கங்கள் இயங்கிய 1980-களில் இருந்த ஈழத்து குடும்பச் சூழலின் உணர்வுகளும் அச்சமும் வேறானவை.
குடும்பத்துக்குள்ளேயும் உறவினர்களுக்கிடையிலும் நண்பர்களாகவும் பகைவர்களாகவும் நேருக்கு நேர் பழகிச் செல்லும் பழக்கமும் பழியுணர்ச்சியும் குற்ற உணர்ச்சியும் உடையவர்கள். இவ்வுணர்வுகளை உசாவி மிகச்சிறந்த கதைகளை உருவாக்கலாம். அந்த வெற்றிடம் இன்னும் இன்னும் சரிவர நிரப்பப்படவில்லைதான்.
கோசலையில் வயது முதிரும்போது இயல்பாகவே புறக்கணிக்கும் திறன்கள் உருவாவதை மகனின் பக்கத்தில் இருந்து குறிப்புணர்த்தி இறுதிவரை வற்றாமல் இருக்கும் தாயின் அன்பைச் சொல்லி ஒரு நீள்மூச்சை வெளியேற்ற வைக்கின்றது. அரசியல் கதைபோல் ‘கோசலை’ சிறுகதை மேன்போக்காத் தோன்றினாலும், ஆழமான உணர்வுகளால் நெய்யப்பட்ட கதையாகத்தான் இச் சிறுகதை இன்றுவரை இருக்கின்றது.
பின் குறிப்பு
01. ‘கோசலை’ சிறுகதை ‘மோகவாசல்’ சிறுகதைத்தொகுப்பில் வெளியாகியது.
02. மோகவாசல் புத்தகம், நூலக நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்நூலை வாசிக்க விரும்புபவர்கள் இச்சுட்டியில் தரவிறக்கக்கொள்ள இயலும்.