அனுபவக்குறிப்பு
யாழ்.பொதுசன நூலகம் கச்சேரிக்கு முன்னுள்ள பரந்த கட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்தபோது எனக்கு அறிமுகமாகியது. மகோகனி மரங்கள் சூழ, மிக அமைதியான சூழலில் நூலகம் இயங்கியது. அப்போது நான் சிறுவர் பகுதியில் அதிகநேரம் செலவழிப்பேன். ஞாயிற்றுக்கிழமைகளில் ஆங்கிலத் திரைப்படங்கள் ஒன்றை ஒவ்வொரு வாரமும் காட்சிப்படுத்துவார்கள். ஜுரசிக் பார்க் என்ற முதலாவது ஆங்கிலப்படத்தை நூலகத்தில் பார்த்த அனுபவம் இன்னும் எனக்கு நினைவில் இருக்கின்றது. நிறையச் சிறுவர்களைப் போலவே சிறுவர் பகுதியிலுள்ள கொமிக்ஸ் புத்தகங்கள் வாசிப்புத் தொடக்கத்தை எனக்கும் கொடுத்தது. மாயாவியின் உருவமும், பிளாஷ்கார்டினின் உருவமும் கற்பனையிலும் கனவுகளிலும் எண்ணற்ற கிளர்ச்சியைக் கிளறின. சிறுவர்களுக்கான இரவல் வழங்கும் பிரிவில் ஆங்கிலப்புத்தகங்கள் உட்பட எண்ணற்ற தமிழ்ப்புத்தகங்களும் இருந்தன. அவற்றைப் படிக்கத் தொடங்கியபோது நான் புதியதோர் உலகத்துக்கு அறிமுகமானேன்.
பின் அந்த நூலகம் இடம் மாற்றப்பட்டது. எங்கே அந்த நூலகம் என்று தேடியபோது அது யாழ் கோட்டைக்கு அருகே இயங்கத்தொடக்கியிருந்தது. மகோகனி மரங்களின் சகவாசம் இன்றி அந்த நூலகம் புத்தம் புதிதாக இயங்கிக் தொடங்கியிருந்தது. எப்போது எல்லாம் சைக்கிள்பாரில் அமர்ந்து அப்பாவுடன் யாழ் நகருக்குச் செல்கிறனோ அப்போது எல்லாம் அந்தக் கட்டடத்தை பார்த்திருக்கிறேன். கருகிப் பாழடைந்து பயந்தரும் வண்ணம் தனிமையில் ஆழ்ந்திருக்கும் அந்தக் கட்டடத்தில் புற்களும் சருகுகளும் மண்டிக்கிடக்கும்.
அதன் வரலாற்றை கேட்கத் தொடங்கினேன்.
முற்குறிப்பு
பல்லின மக்களை உள்ளடக்கிய இலங்கைத்தீவின் பல்லினத்தன்மையைப் பேணாது சிங்கள பௌத்த நாடாகத் தன்னை நிலைநிறுத்த சிங்கள பௌத்த தரப்பானது முழுமூச்சாக இயங்கியது. இதனால் புறம்தள்ளப்பட்ட சிறுபான்மை இனங்கள் தமது சுயத்தை இழப்பதாகவும், ஒடுக்கப்படுவதாக உணரவும் தலைப்பட்டனர். இலங்கையின் இரண்டாவது பெரும்பான்மை இனமான தமிழ்மொழி பேசும் மக்கள் நேரடியாக அதிகம் பாதிக்கப்பட்டனர். அதற்கான தற்காப்பாக அவர்கள் தமிழ்தேசியமாக ஒன்றுபட்டனர்.
வடக்கு கிழக்கின் தலைமையாக யாழ்ப்பாணம் மிளிர்ந்தது. யாழ்மையவாதச் சிந்தனை தமிழ்தேசியச் சிந்தனையிலும் தனது பாதிப்புகளை நிகழ்த்தியது. ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் நிலப்பரப்பின் தலைமைப்பீடமாக யாழ்ப்பாணம் மாறத்தொடங்கியது. தமிழ்மக்களிடையே உறுதியடைந்துவந்த தமிழ்தேசிய ஆதரவு நிலைப்பாடு சிங்கள பௌத்த தேசியவாதிளுக்கு வெறுப்பூட்டுவதாக அமைந்தது. அந்த வெறுப்பு தமிழ்மக்களின் மீதும் அவர்களது அடையாளங்கள் மீதும் பெரும் வன்முறைகளை கட்டவிழ்ப்பதாக சில நிகழ்வுகளில் பிரதிபலித்தது. அத்தகைய கறைபடிந்த நிகழ்வுகளில் ஒன்றாக யாழ்.நூலகம் எரியூட்டப்பட்டது அமைந்தது. யாழ்.பொதுசன நூலகம் ஒட்டுமொத்த யாழ்பாணத்தின் அரசியல் அடையாளச் சின்னமாகவும் தமிழ்தேசியத்தின் பண்பாட்டு அடையாளமாகவும் விளங்கியது. யாழ் நூலகம் குறிவைக்கப்படுவதற்கு இந்தப் பின்னணியும் ஒரு முக்கிய காரணியாக அமைந்தது.
•மே 31 ஆம் திகதி 1981–ல் துரையப்பா விளையாட்டரங்கில் இனம்தெரியாத சிலர் தங்கவைக்கப்படுகிறார்கள்.
• ஜூன் 01 ஆம் திகதி 1981-ல் யாழ்நூலகம் எரிக்கப்படுகின்றது. அதன் கரும்புகை வானளவு எழுந்து மேகத்தை அண்டுகின்றது.
• தாவிது அடிகள் நூலகம் எரிக்கப்பட்ட செய்திகேட்டு ஜூன் 01 ஆம் திகதியே அதிர்ச்சியில் உயிர்நீக்கின்றார்.
ஏறக்குறைய 97,000 புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், கைப்பட எழுதிய காகிதக் குறிப்புகள், தனிநபர் சேகரங்கள் என்று வேறெங்கும் கிடைக்காத வேறு பிரதிகள் அற்ற புத்தகங்களையும், தனித்துவமான உசாத்துணைப் பிரிவைக்கொண்டதுமான யாழ்நூலகம் வெறும் சாம்பலாகியது.
ஆரம்பக் குறிப்பு
யாழ்பாண மக்களின் புலமைச்செல்வத்தைக் கட்டியெழுப்ப நூலகம் ஒன்றின் தேவை உணரப்பட்டது. K.M. செல்லப்பா என்பவர் நூலகங்கள் மீது கட்டற்ற பிரியங்கொண்டவர். தனது வீட்டில்கூட சிறிய நூலகத்தை நடத்திவந்தார். அவர் யாழ் மக்களுக்கான பொது நூலகம் ஒன்றின் தேவையை உணர்ந்து பொதுமக்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். நூலகம் ஒன்றினை உருவாகுக்குவதற்கான தேவையை வலியுறுத்திய கடிதம் அது. பத்திரிகைகளில் அக்கடிதம் வெளியாகியது. பொதுமக்களோடு அவை உரையாடப்பட்டன. தொடர்ச்சியாக நடத்தப்படும் பொது உரையாடல்கள் எப்போதும் பெரும் மக்கள் ஆதரவைப் பெறும். நூலகம் ஒன்றின் தேவையைப் புரிந்துகொண்ட மக்கள் நன்கொடைகள் கொடுக்க முன்வந்தார்கள். தங்களிடம் இருந்த புத்தகங்களை நூலகத்திற்குக் கொடுத்தார்கள். யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றில் நூலகம் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளோடு இயங்கத்தொடங்கியது. நிறைய வாசகர்கள் குவிந்துகொண்டிருந்தனர். வசதிப்போதாமைகளோடு அதிகரிக்கும் வாசகர் எண்ணிக்கையும் கட்டுக்கடங்காமல் எகிறியது. இதனால் நூலகத்தை விரிவாக்கம் செய்யவேண்டிய தேவை தினமும் வளர்ந்தது. ஆனால், நிதி நெருக்கடி ஒருபக்கம் சுமையாக அழுத்தியது. நூலக உருவாக்க சபை என்ற நிர்வாகம் நூலகத்தை நிர்வகித்து வந்தது. அந்த நிர்வாகம் 1935 சனவரி 1 ஆம் திகதி, நூலகத்தை யாழ்.மாநகர சபையிடம் கையளித்தது.
நூலகத்தை விரிவாக்கும் முயற்சிகளில் மாநகரசபை ஈடுபட்டது. வணக்கத்துக்குரிய லோங் அடிகள் தலைமையில் நூலகத்திற்கான நிதிதிரட்டும் நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டன. ஏராளமான கல்வியாளர்கள் கலைஞர்கள் நூலகம் விரிவாக்கம் செய்யப்படவேண்டிய தேவையை யாழ்ப்பாணம் முழுவதும் எடுத்துச் சென்றனர். நூலகத்தை புதிய நிலப்பரப்பில் அமைக்கத் தேவையான நிதி கிடைக்கப்பெற்றது.
கத்தோலிக்க திருச்சபைக்கும் யாழ்ப்பாண பொதுநூலகத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் எப்போதும் இருந்துவந்தன. யாழ்பாணத்திற்க்கு நூலகம் ஒன்றின் தேவை அறியப்பட்டபோது அதை எங்கே நிர்மாணிப்பது என்பதில் சர்ச்சை ஏற்பட்டது. தற்போது யாழ். பல்கலைக்கழகமாக உருமாறியிருக்கும் பரமேஸ்வரா கல்லூரி அருகிலுள்ள பிரதேசத்தில் அல்லது நல்லூர் அருகேயுள்ள பிரதேசத்தில் நூலகம் அமைக்கப்படவேண்டும் என்று சைவசமயத்தை அதிகம் விரும்பும் சிலரால் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது. கத்தோலிக்கர்கள் அதனை மறுத்தனர். மெலிதான உரசல் புகைத்துக்கொண்டிருந்தது.
இறுதியில் நூலகத்தை அமைக்க இந்தியாவில் இருந்து எஸ்.ஆர்.ரங்கநாதன் என்ற நூலகத்துறை அறிஞர் மாநகர சபையினரால் அழைக்கப்பட்டார். யாழ்ப்பாணம் வருகைதந்து யாழ்ப்பாண மக்களின் குடிப்பரம்பல் முறைக்கு ஏற்ப பொருத்தமான இடத்தை தேர்வு செய்தார். அவ்வாறு அவர் தேர்வு செய்த இடமே இன்றைய நூலகம் அமையப்பெற்றுள்ள யாழ் கோட்டை முற்றவெளியை அண்டிய மாநகர சபைக்குச் சொந்தமான பிரதேசம். தமிழகத்தைச் சேர்ந்த நரசிம்மனால் நூலகத்தின் கட்டட வரைபடம் திராவிட கட்டடக்கலை முறையில் உருவாக்கப்பட்டது. 1954 மார்ச் 29 ஆம் திகதி நூலகத்தின் அடிக்கல் கோலாகலமாக நாட்டப்பட்டு, நூலகம் விரைவிலே கட்டிமுடிக்கப்பட்டது. 1958 ஒக்டோபர் 18 ஆம் திகதி நூலகம் அப்போதைய யாழ்ப்பாண மேயர் திரு. துரையைப்பாவினால் திறந்துவைக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் சுயாதீனமாக இயங்கிவந்த அமெரிக்க நூலகம் யாழ் நூலகத்துடன் இணைந்துகொண்டது. மிகப்பெரிய புத்தக மையமாக யாழ் நூலகம் மிளிரத் தொடங்கியது. அடிப்படையான அறிவார்ந்த ரீதியிலான உரையாடல்கள் அதிகம் இடம்பெறும் இடமாகவும் யாழ்ப்பாண நூலகம் வீறுகொண்டு உருவெடுத்தது. தமிழ் மொழி மட்டுமன்றி லத்தின் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் யாழ்.நூலகத்தில் குவிந்திருந்தன.
யாழ்பாணத்தில் வசித்துவந்த பல்லின மக்களின் பாவனைக்கூடமாக யாழ்நூலகம் இயங்கத்தொடங்கியது. நூலக வாயில் அருகே தமிழ்த்தாய் சிலை நிர்மாணிக்கப்பட்டது. தமிழைப்பேசும் மக்கள் மதத்தைக் கடந்து மொழிமீது வைத்திருக்கின்ற பற்றினை அச்சிலை உணர்த்திநின்றது. நூலகத்தில் படித்து பல்கலைக்கழகத்துக்குத் தேர்வாகிய பெற்றோர்கள், தமிழ்த்தாய் சிலைக்கு முன் பொங்கல் பொங்கி, படைத்தது தம் அன்பையும் மொழிப்பற்றையும் வெளிக்காட்டினர்.
இறுதிக் குறிப்பு
நூலகம் எரிந்து முடிந்த செய்தி மெல்ல மெல்ல நாடுமுழுவதும் பரவியது. தமிழர்களுக்கு பெருத்த அவமானம் இழைத்துவிட்டதாகவும், அவர்களை தாம் ஒருவிதத்தில் அச்சுறுத்தியிருப்பதாகவும் இனவாதிகள் மகிழ்ந்த போதும் அரசாங்கம் கடுமையன நெருக்கடிகள் சிலவற்றை எதிர்கொள்ளவும் நேர்ந்தது. சர்வதேச அழுத்தங்களும் சில கேள்விகளும் எழுந்தபோதும் அவை மெல்ல மெல்ல நெகிழ்வாகக் கையாளப்பட்டு இலங்கை அரசு காப்பாற்றப்பட்டது. இவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண மக்கள் அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்டவற்றின் ஊடாக தம் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
தமிழர்களின் உரிமைப்போராட்டம் ஆயுதப் போராட்டம் என்கிற வடிவத்தை நோக்கி வேகமாக நகர்ந்த காலப்பகுதியாக இதே காலப்பகுதி அமைந்தது, தமிழர்களுக்கு எதிரான இடம்பெற்ற வன்முறைகள் ஆயுதப்போராட்டத்தை நோக்கி தமிழ் இளைஞர்களைத் தள்ளிக்கொண்டிருந்தது. பல ஆயுதக்குழுக்கள் தனிநாட்டுக் கனவுடன் போராடின. தொடர்ந்து ஜூலைக் கலவரம் நாட்டில் பற்றி எரிந்தது. தமிழர்களின் சொத்து இலங்கை முழுவதும் தீக்கிரையாக்கப்பட்டது.
அதன்பின் ஜூன் 4, 1984 இல் யாழ்நூலகம் மீண்டும் அதே கட்டிடத்தில் செயற்பட முனைந்தது. யாழ் மக்கள் தம் சொந்த சேகரிப்பில் வைத்திருந்த புத்தகங்களைக்கொடுத்து நூலகத்தை இயக்கிவைக்க முயன்றனர். ஆனால், தமிழ் ஆயுத குழுக்கள் வீரியமாக எழுந்து அரசாங்கத்துக்கு எதிராக போராடத் தொடங்கியிருந்தன. கோட்டையில் இருக்கும் இராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையிலான ஆயுதத் தாக்குதல்களால் கோட்டையை அண்டிய யாழ்.நூலகம் யுத்த வலயத்தில் சிக்கிக்கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டது. போராளிகள் நூலகத்தினைப் பாதுகாப்பு அரணாகப் பாவிக்கத்தொடங்கினர்.
ஆயுத மோதல் அதிகரிக்க இந்திய இராணுவம் அமைதிப்படையாக யாழ் வந்தது. அவர்களுடனான மோதலும், இடம்பெயர்வுகளும் யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப்போட்டது. இந்த நெருக்கடிக்காலத்தில் நூலகத்தைப்பற்றி எவராலும் முதன்மையாகக் கவலைப்பட முடியவில்லை. அமைதிப்படை வெளியேறியபின் இலங்கைப் படையினருடன் மோதல் வலுத்தது. யாழ்ப்பாணக் கோட்டை புலிகளால் கைப்பற்றப்பட்டாலும் கூட தொடர்ச்சியாக நிலவிய போர்ச்சூழலால் நூலகம் அவ்வாறே இயக்கமற்று இருந்தது. யாழ்ப்பாணம் முழுவதுமாக 1995-இல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தபின்னர் சிவில் நிர்வாகத்தை சீர்படுத்தும் முயற்சிகள் சிலவற்றில் அரசாங்கம் ஈடுபட்டது. அந்தக் காலப்பகுதியிலேயே யாழ் நூலகம் தற்காலிகமாக யாழ் YMCA கட்டடத்தில் இயங்கி பின் கச்சேரிக்கு முன்னுள்ள மாடிக்கட்டிடத்தில் இயங்கத் தொடங்கியிருந்தது. அதன் பின்னால் பழைய பூங்கா அமைந்திருந்தது. மகோகனி மரங்களின் இலைகளின் சத்தம் காற்றில் அசைய வரும் சிலுசிலுப்புச் சத்தத்துடன் அமைதியாக நூலகம் இயங்கியது. குறுகிய காலத்திலேயே ஏராளமான புதியவாசகர்கள் அங்கே வரத்தொடங்கினார்கள். இரவல் பகுதியில் புதிய புத்தகங்கள் குவிக்கப்பட்டன. ஆங்கில நாளேடுகள் உள்ளிட்ட வெளிநாட்டு சஞ்சிகைகள் பலவும் நூகலத்தில் தங்குதடையின்றுக் கிடைத்தன.
2002-இல் விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்கு இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை ஏற்படுத்தப்பட்டபோது, யாழ் நூலகம் மீண்டும் புதுப்பிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. நூலகம் எரிக்கப்பட்ட இடத்தில் அல்லாமல், வேறொரு இடத்தில புதிய நூலகமாக அமைப்பதையே அனேக யாழ்ப்பாணத்து மக்கள் விரும்பினர். ஆனால், அரசாங்கம் அந்த விருப்பினை ஏற்க மறுத்து பழைய எரிக்கப்பட்ட கட்டடத்தையே புதுப்பிக்க முனைந்தது. வரலாற்றில் நடந்த துன்பியல் நிகழ்வை மறக்கவேண்டும் என்றும் நல்லிணக்கத்தை வளர்க்க கடந்தகால கசப்பான அனுபவங்களை மறக்கவேண்டும் என்று அரசாங்கதால் தமிழர்களுக்குச் சொல்லப்பட்டது. நூலகம் புதுப்பிக்கப்பட கிடைத்த சர்வதேச நிதிகள் புதிதாக பெரிய நிலப்பரப்புடன் விசாலமான நூலகக் கட்டடம் ஒன்றினை அமைக்கப்போதுமானதாக இருந்தது. ஆனால், அரசாங்கம் பிடிவாதமாக மறுத்தது. கறைபடிந்த நூலக எரிப்புச் சம்பவத்திற்கு வெள்ளைச்சாயம் பூச முயன்றது.
பின்குறிப்பு
யாழ்ப்பாண நூலகம் புதுப்பிக்கப்படும்போது நூலக எரிப்பினை நினைவு கூர்ந்துகொள்வதற்காக அதன் எஞ்சிய பகுதிகளில் சிலதையாவது விட்டு வைக்குமாறு நூலகப் பணியாளர்கள் மற்றும் வாசகர்கள் கேட்டும் அரசாங்கத்தால் அவை மறுக்கப்பட்டன. ஆனால், தலதா மாளிகையின் மீது தமிழ் போராளிகள் மேற்கொண்ட தாக்குதலால் ஏற்பட்ட வடுக்களின் எச்சங்கள் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன. கிளிநொச்சியில் விழுந்திருக்கும் தண்ணீர்த் தாங்கி இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. எனவே “வரலாற்றில் நடந்த துன்பியல் நிகழ்வு” என்று சொல்லப்படுபவற்றில் ஒரு தரப்பானவை தடயங்கள் அழிக்கப்பட்டு மறைக்கப்பட்டு வருகின்ற அதேநேரம் இன்னொரு தரப்பானவை பேணப்பட்டும் மிகக்கவனமாகவும் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்திலும் காட்சிப்படுத்தப்படுகின்றன. மதங்களைக் கடந்து மொழியை முன்னிறுத்துவதாக முன்னர் இருந்த தமிழ்த்தாய் சிலை மீண்டும் யாழ்நூலகம் புதுப்பிக்கப்பட்டபோது காணமற்போய், சரஸ்வதி சிலை உதயமாகி இருக்கின்றது.
யாழ் நூலகத்தின் எரிப்பு தொடர்பாக சில புனைவுகள் உருவாக்கப்பட்டபோதும், சுஜாதா எழுதிய “ஒரு இலட்சம் புத்தகங்கள்” என்ற சிறுகதையே அதிகம் பேரால் சிலாகிக்கப்பட்டது. அந்தக் கதையை நான் புதுப்பிக்கப்பட்ட யாழ். நூலகத்திலேயே வாசித்தேன். என் நெஞ்சு ரயில் தண்டவாளம் போல் அதிர்ந்தது.
புதிய சொல் இதழ் மூன்றில் வெளியாகிய கட்டுரை.