1st April 2025
அறிமுகம்இலக்கியம்

தீக்குடுக்கை : கருத்துக்கள்

குறைந்த பக்கங்களில் ஓர் பெரிய நாவல்! – க.கலாமோகன்

தமிழ் இலக்கியத்தின் சிறுகதைப் பிறப்புகள் மிகவும் கவனத்திற்குரியன. எனது நீண்ட கால வாசிப்பில் தமிழ்ச் சிறுகதைகளை அதிகம் ரசித்துள்ளேன். ஒவ்வொரு தேசத்தில் வாழும் தமிழ் எழுத்தாளர்களும் தமது பாணியில் தமது வாழ்வுள் நுழைந்த பக்கங்களை அதிகம் எழுதுகின்றார்கள். இந்த எழுத்துகளில் பல உலக வாசிப்பிற்கு அவசியமானவை.

அனோஜன் இலங்கையில் பிறந்து லண்டனில் வாழ்பவர். போர்களும், கொலைகளும், புகலிடமும் இவரது விழிகளிற்குத் தெரியும். ஆனால் இவரது அவதானிப்புகள் எங்கும் செல்வன. இந்தச் வழிகளது நெறிகளே இவரது சொல்களது கலாசாரம் எனலாம். குளிரும், சூடும் உள்ளதுதான் இவர் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கும் எழுத்துப் பண்பு.

புகலிடம் பெரியது. எமது இலங்கைப் புகலிடம் சிறியது அல்ல. இந்த இடத்தின் இலக்கிய நுண்மைகளை எமக்குத் தருவோர் சிலர். இவர்களில் ஒருவர் அனோஜன்.

மனிதம் காப்பது அவசியம். மொழி காப்பதும் அவசியமே. மொழிகளைக் காப்பது என நான் சொல்ல வருவது மொழி மீதான வெறிகளைக் காப்பதல்ல. அனைத்து மொழிகளும் எமது மானிடத்தின் ஆன்மாக்கள், தெய்வங்கள்.

“தீக்குடுக்கை” போரின் நினைவுகளில் அலைந்து வேறு பல நினைவுகளைச் சுமக்கும் இலக்கிய உத்தியின் நாவல் என்பது வாசிப்பு ஓர் வழியில் அல்ல பல வழிகளிலும் தவழ்வதே எழுத்து இயக்க மேன்மை என்பது “பேரீச்சை” எனும் இனிய சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியரிற்கு மிகவும் நன்றாகவே தெரிந்துள்ளது.

தேசத்தின் போரின் பக்கங்களை புகலிட இருப்புடன் அழகிய மொழியில் எமக்குத் தருவது “தீக்குடுக்கை”.

கவனமாகக் கதைகள் சொல்வதில் உலக நாடுகளில் பலர் உள்ளனர். ஆனால் எமது மனித இருப்புகளது உடைப்புகள் மீது சொல்லும் சிலர்களில் எனக்கு விருப்பம் தருபவர்களில் ஒருவர் “தீக்குடுக்கை” தரும் எழுத்தாளர்.

எமக்குத் தியான விருப்பைத் தருவதே அனோஜன் தமிழிற்கு வழங்கும் இலக்கியம்.

௦௦௦

தீக்குடுக்கை – விரிந்து செல்லும் அடையாளப் பதற்றம் : சேனன்

உலகளாவிய புதிய அனுபவங்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் தனித்துவமான பங்கை ஈழ எழுத்துக்கள் செய்து வருகின்றன. யுத்தத்தையும், அகதி வாழ்வையும் எழுதாத ஈழ எழுத்தாளர் ஒருவரைக் காட்ட முடியாது. யுத்தத்தின் ஆரம்ப காலத்தல் புலம் பெயர்ந்த ஈழ எழுத்தாளர்கள் புலத்தில் வாழ்ந்த பொழுதும் தாய்நாட்டுக் கதைகளையே கற்பனை செய்து எழுதி வந்தனர். அந்த நிலை இன்று மாறி புலத்து வாழ்வும் ஈழ எழுத்தில் ஊடுருவி கலந்துவிடத் தொடங்கி உள்ளது. தமிழுக்கு இது ஒரு அகில உலகப் பரிமாணத்தை வழங்கி உள்ளது. பரந்த தளம் புதிய மொழி நடையையும் அவாவி நிற்கிறது. பல எழுத்தாளர்கள் இந்தப் பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அனோஜன் பாலகிருஷ்ணனின் முதலாவது நாவல் தீக்குடுக்கை இதன் இன்னொரு பரிமாணத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.

வெளிநாட்டில் பிறந்த தமிழரின் பார்வையில் நகரும் கதை, தற்கால ஈழ அரசியல் மற்றும் வாழ்வின் பல்வேறு முக்கிய முரண்களையும் தொட்டுச் செல்கிறது. அதே சமயம் யுத்தத்தின் பல கோர அனுபவங்களையும் பதிவு செய்கிறது. ஒரு குறு நாவலில் இத்தகைய சிக்கல்களை ஒன்றிணைப்பது-அதுவும் வாசிப்பவருக்கு சிரமமின்றி செய்வது தீக்குடுக்கை நாவலைக் கவனத்திற்கு உள்ளாக்குகிறது. நாட்டிற்குள் அகதி – நாடு தப்பிச் சென்ற அகதி – நாடு திரும்பும் அகதி என அகதியாகும் உலகத்தையும் அதற்குள் இருக்கும் அவலங்களையும் தொட்டுச் செல்கிறது நாவல்.

அனோஜன் நன்கறியப்பட்ட ஈழ எழுத்தாளர். அவரது பச்சை நரம்பு மிகவும் பேசப்பட்ட சிறுகதைத் தொகுப்பு. மௌனி போல் அகவய உணர்வுகள் சார்ந்து கதை சொல்லும் பாவனை கொண்டவர் என அறியப்பட்டவர் அனோஜன். தீக்குடுக்கை இதில் இருந்து முற்றிலும் மாறிய நடை கொண்டதாக இருக்கிறது. இது அவரது புதிய முயற்சி. புதிய முயற்சி என்பது இலகுவான ஒன்றல்ல. ஒரே பாவனையில் தொடர்ந்து எழுதி வருபவர்கள் மலிந்து இருக்கும் தமிழ் இலக்கியச் சூழலில் மீண்டும் புதிய முயற்சிகள் – புதிய வெளி – புதிய கதைக் கரு என நகர்பவர்கள் பெரும் சிரமம் எடுக்க வேண்டி உள்ளது. இது போலச் செய்தல் அல்ல. அதனால்தான் அவர்கள் புதிய மொழி – எழுத்து நடை – சொல்லும் முறை என நகர வேண்டி உள்ளது. இந்த வெளிச்சத்தில்தான் இந்த நாவலை அணுக வேண்டும்.

புலம்பெயர் அனுபவங்களையும், ஈழ யுத்த அனுபவங்களையும் காயங்களாக காவித் திரிபவர்களுக்கு இந்த நாவல் புதினமாக இருக்காமலும் போகலாம். ஆனால், ஆசிரியர் அவர்களைமட்டும் நோக்கி இந்தப் படைப்பை படைக்கவில்லை என்றே எண்ணுகிறேன். அதற்கும் அப்பால் பரந்து கிடக்கும் தமிழ் வெளிக்கு இந்த முரண்களையும், அனுபவங்களையும் பரப்பிச் செல்ல விரும்பும் அவா நாவலுக்கு இலாவகமும் எளிமையும் தந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

அதே சமயம் இந்தக் கதையை முற்றிலும் சாதாரணம் என ஒதுக்கி விட்டும் செல்ல முடியாது. டானியலின் கதைகளைச் சாதாரணம் என எவ்வளவு ஒதுக்கிய போதும், இன்றும் அவரது கதைகள் தமிழ்ப் பரப்பை ஆக்கிரமித்து இருப்பதை அறிவோம். சில கதைப்பரப்புகள் உள்ளங்களில் வளரும். அதற்கு நாட்கள் எடுக்கும். சில வார்த்தை அலங்கார நாவல்களைப் படிக்கும் பொழுது ஒரு அழகியல் உணர்வை எமக்குள் ஏற்படுத்தும். அதுவும் ஒரு திறமைதான். கவர்ச்சியை அற்புதம் என சிலாகிக்கும் வழமை உண்டுதானே. ஆனால் கதை சேராத முறையில் அது விரியும்பொழுது விரைவில் நாம் அந்த நாவலை மறந்து விடுகிறோம். சில சமயம் அத்தகைய எழுத்துக்கள் அலுத்துப் போய் விடுகின்றன. அந்த நாவலில் என்ன கதை இருந்தது என நம்மை யோசிக்க வைத்து விடுகின்றது. அனோஜனின் இந்த நாவல் அத்தகையதல்ல. மாறாக மனதில் பரப்பு விரிய வைக்கும் வகை.

அனோஜன் ஒரு நல்ல கதை சொல்லி. அவரது எழுத்து தொடர்ந்து செழுமைப்பட்டு வருகிறது. கூடவே அவரது எழுத்துக்களின் சமூக ஆழங்களும் வளர்ச்சி கண்டு வருவதை இந்த நாவலில் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

நன்றி தமிழ் இந்து

Related posts

கோட்டை – மு.தளையசிங்கம் – 05

அலைதலும் எழுத்தும்

அழகியலின் உள்ளடக்கம் – அனோஜன் பாலகிருஷ்ணன்.

Leave a Comment