சாம்ராஜின் புதினம் ‘கொடை மடம்’ அறுநூறு பங்கங்களில் பெருநாவலாக விரிந்துள்ளது. மதுரையின் வண்ணங்கள் படிந்த நிலத்தின் கதை; எனினும் இதுவரை நாம் கண்டிராத, அதிகம் கவனம் குவிக்காத மனிதர்களின் கதைகள் குறுக்கும் நெடுக்குமாகப் பரவியுள்ளன. ஜென்னி X முகுந்தன் என்ற இரண்டு கதை மாந்தர்களின் காதல் கதை ஓர் உணர்வுத் தளத்தில், தத்துவ முரண்களின் இடைவெளிகளை, நடைமுறை சிக்கல்களை ஊடுருவி விரிக்கிறது. முகுந்தனை பற்றியிழுக்கும் ஜென்னி மீதான காமம், கடும் தீயாக அவனைச் சுற்றி எரிக்கிறது. அவளது அத்தனை கோணல்கள் சிறுமைகள் மத்தியிலும், துன்புறுத்தல்கள் ஊடுருவி சிதைத்த போதும், அவளை விட்டு நீங்கிச் செல்ல இயலவில்லை; இருவரும் ஒருவரையொருவர் காலபோக்கில் மாற்றிவிடலாம் என்று நம்புகிறார்கள். இருந்தும் அது தங்களுக்கு தாங்கள் சொல்லிக்கொள்ளும் போலிச் சமாளிப்பு என்று தங்களுக்குள் அறிந்திருப்பார்கள். இந்த நுண்மையான உள் நாடகங்கள், இவர்களுக்கு இடையிலான உறவை இலக்கியம் ஆக்குகிறது.
இக்கதை வெறுமே காதல் கதையல்ல. ஒரு நூற்றாண்டின் பென்னம்பெரிய மானுடக்கனவு அடுத்த நூற்றாண்டில் சிதறி உடைந்துபோன பின்னர், எஞ்சிய நம்பிக்கையில் வாழ்க்கை முழுவதையும் பாட்டாளி மக்களின் விடுதலைக்காக ஒப்படைத்து, தமது அத்தனை சௌகரியங்களையும் துறந்தவர்களின் கதை. இன்னும் கூர்மையாகச் சொல்லப்போனால் அமைப்புக்கும் தனிமனிதர்களுக்கும் இடையில் இருக்கும் முரண்களின் தொகுப்பு என்று சொல்லலாம். இங்கே அமைப்பு அரசு, அரச எந்திரங்கள் மட்டுமல்ல, கதை மாந்தர்கள் சார்ந்து இயங்கும் மார்க்சிய அமைப்புகளையும் சேர்த்தே என்று அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.
இந்த நாவலை சுவாரஸ்யம் குன்றாமல் படிக்கவைக்க நாவல் முழுவதும் நிறைந்திருக்கும் அங்கத நடை உதவினாலும், அந்த அங்கதத்திற்கு அடியில் கசப்பான மெல்லிய சோகம் பரவியிருக்கிறது. நாம் காவியப்படுத்திய தியாகங்கள் ஒருவகை என்றால், அதற்கு அப்பால் மறையுண்டு இருக்கும் தியாகங்கள் ஏராளம். இந்த நாவலில் மறைபிரதியாக நிறைந்து இருப்பது அவ்வாறான தியாகங்களே. சாம்ராஜின் அங்கதச் சித்தரிப்பு, மனிதர்களின் அப்பாவித்தனம் (innocent) தூய்மையாக வெளிப்பட நீக்கமற உதவுகிறது.
ஜென்னி பாத்திரம் மீதான உறுதியான சித்தரிப்பு, பொருள்முதல்வாதம் கொடுக்கும் இடைவெளிகளை தன் கண்ணோட்டத்தில் இலக்கியங்கள் ஊடக நிரப்பி வாழும் முகுந்ததின் பார்த்திரச் சித்தரிப்போடு மிக அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது. மிகுதி மாந்தர்கள் அமைப்பில் இருந்து உதிர்ந்து விழும் ஒரு பழுத்த இலையாக, தங்கள் தனித்தனி குணாதிசயங்களுடன் பதிவாகியிருக்கிறார்கள். மதுரையில், காலங்களுடன் முன்னும் பின்னும் சென்று கரைந்து சஞ்சரிக்க வைத்த சாம்ராஜுக்கு வாழ்த்துகள்.
சந்தியா பதிப்பக வெளியீடு, பிசகு வெளியீடு, இணையத்தில் வாங்க
நன்றி : அகழ்