கலைமுகம் எழுபத்து மூன்றாவது இதழ் கிட்டியிருக்கிறது. இதில் அனோஜன் பாலகிருஷ்ணன் அவர்களினால் எழுதப்பட்ட ‘செவ்வந்திப்பூ’ சிறுகதையினை படித்தேன்.ஏற்கனவே அனோஜன் அவர்களின் கதைகள் பலவற்றை இணையம் மற்றும் இலக்கிய இதழ்களில் படித்திருக்கிறேன். அவர் நல்லதோர் கதைசொல்லி.அனேகமான அவரின் கதைகளில் வரும் மரமொன்றில் “சிக்மென்ட் ப்ராயிட்” பதுங்கியிருப்பார்.அவரை கண்டு பிடித்து விளையாடும் கள்ளன் -பொலிஸ் விளையாட்டுக்களாக இந்த கதைகள் இருக்கும்.
முதலில் அனோஜனுக்கு நன்றி சொல்லணும். இதுவரையில் நான் செவ்வந்தி என நினைத்தது நம்மவூர் செம்பரத்தை பூவினையே.ஆக அது வேறு ;இது வேறு.செவ்வந்திப்பூ எனப்படும் மலர் திருமணங்களில் சூடப்படும் ஒன்று. இந்த கதையும் கூட திருமணத்திற்கு தயாராகும் ஒரு பெண் குறித்த உசாவுதலே.
கதையின் நகர்வை ஒரு வரியில் கூறுவதாயின், நமது சமூகங்களில் ஐந்து வயதிற்கு மேல் தகப்பனின் மடியில் பெண்பிள்ளைகள் அமர்வது “ஒரு மாதிரி” என எழுதப்படாத சட்டம் ஒன்றுண்டு. இதனையே மறுதலையாக திருமண வயதிலான ஒரு பெண்ணின் மடியில் எட்டு வயது பையனை உட்கார்த்தி அதனை இந்த “நாலும் தெரிஞ்ச சமூகம்” எவ்வாறு நோக்குகிறது என்பதை தனக்கேயுரிய பாணியில் கதையாக கூறுகிறார் கதைசொல்லி.
ஆரம்பத்தில் யவனராணியாக சோழ இராச்சியத்தில் வந்திறங்கும் யசோதா அக்காவுக்கும் ஜீனு எனும் பெடிசுக்கும் பெரிதாக “பிசின்” ஒன்றுமேயில்லை. ஆனால் இவரின் விடயப்பொருள் வில்லங்கமொன்றில் மாட்டிய தினமொன்றிலேயே பலத்த உறவொன்றுக்கான அத்திவாரம் இடப்படுகிறது.
மூன்று விதமான ஊகங்களும் கேள்விகளும் இந்த சம்பவத்தின் பின்னணியில் வாசகனுக்கு எழுகின்றன.இந்த இடத்திலேயே “சிக்மென்ட் ப்ராயிட்” ஒளிந்திருப்பதாக நான் கருதுகிறேன்.
1.பாயில் படுக்க வைத்து “ஒண்ணுமில்லடா” என நெற்றியை தடவுகையில் அங்கே தாய்மையின் பரிவே ஓங்குகிறது.இதில் டவுட்டே கிடையாது.
2.வில்லங்கமாக அந்த பிரதேசத்தில் எண்ணெய் பூசி விட்ட பின்னர் யசோதா அக்காவிடம் தோன்றும் ஆசுவாசத்தை எங்ஙனம் பொருட்கோடல் செய்வது?அது தாயிடம் தோன்றும் ஆசுவாசமா அல்லது கன்னிப்பெண்ணிடம் தோன்றும் ஆற்றுப்படுத்துதலா.இந்த இடமொன்றிலேயே பாலுமகேந்திராவின் “வடிகால்” சிறுகதையில் வரும் புனிதத்தின் சாயல் யசோதா அக்காவிடத்தில் சிறிது இருப்பதாக வாசகன் உணர்கிறான்.
3.மேற்கூறிய இரண்டாவது பொயின்ரை நான் எழுதியிருக்க மாட்டேன் அனோஜன் அடுத்த சம்பவத்தை கூறியிராவிடின்.அதாகப்பட்டது அடுத்த நாள் அவரின் முகம் கடுகடுப்பாக இருப்பதாக அனோஜன் கூறுகிறார்.
இந்த கடுகடுப்பிற்கான காரணம் என்ன?இந்த இடத்திலேயே “செவ்வந்தி பூ”வாகிறார் யசோதா அக்கா.ஆக இந்த கடுகடுப்பு திருமணத்திற்கானதாக இருப்பதாக அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களை வைத்து கூற முடிகிறது.
இந்த சம்பவங்களின் பிறகு பிசினாக மாறிவிடும் இருவரின் உறவில் போரினால் பாதிக்கப்பட்ட இருவர் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் பரிவு என்பதும் பின்னிணைப்பாகிறது.இந்த சம்பவங்களின் பின்னர் நிகழ்பவை, நீராடுதல் யாவிலுமே அக்கா-தம்பி உறவை தவிர வேறேதுமில்லை.
திருமண ஏற்பாடுகளின் பின்னர் அக்கா மாறிப்போனது ஜீனுவுக்கான ஏமாற்றமே.ஜீனு அக்கா மீது கொள்வது நாம் சாதாரணமாக காணும் சின்னபையன் வகுப்பாசிரியை மீது கொள்ளும் ஒரு வித நேசமாக கடந்து செல்லலாம்.ஆனால் நீராடாத ஒரு நாளில் யசோதா அக்கா மீதான நேசத்தினால் விம்மி விம்மி அழுது அதனால் ஏற்படும் anxiety இனால் pneumonia வந்து ஐசீயூவுக்கு போதல் என்பது கொஞ்சம் இது வில்லத்தனமான நேசம் என்றே கூறலாம்.இதற்கான காரணம் ஜீனு ஒற்றை பிள்ளையாக இருப்பதாக கூட கருதலாம்.
இதில் சமூகத்தின் நோக்கினை இருவிதமாக கூறலாம்.
1.அவள் யாவற்றையும் இழந்த போதிலும் அவளுக்கான வாழ்க்கை ஒன்றினை அமைத்து தருவதில் அது நேராகவே சிந்திக்கிறது.
2.அந்த அமைப்பு ஒழுக்க விடயங்களில் எவ்வாறு இறுக்கமானதென தெரிந்தும் ஒரு முன்னாள் போராளியினையே சந்தேகிக்கும் அளவிற்கு “நாலும் தெரிந்ததாக” இந்த சமூகம் மாறிப்போனது காலத்தின் கோலம்.
“செவ்வந்திப்பூ” தேடிச்சூட வேண்டிய ஒன்று.