கு.அழகிரிசாமி தனக்குத் தோன்றும் கருக்களை நான்கைந்து வரிகளில் நாட்குறிப்பேட்டில் சுருக்கமாக எழுதி வைத்துவிட்டு நீண்ட நாட்களின் பின்னர் கதைகளாக விரித்து எழுதுவார். பேதமனமும், அபேதமனமும் பின்னிப்பிணைந்து கதைகளைச் சிருஷ்டிக்கத் தேவையான படைப்பாக்க நேரத்தை சேமிக்க நாட்டம் கொண்டவர். அந்த இயல்பினாலே குறைவாக எழுதியவர். பல கதைகளை எழுத அதிக நாட்கள் எடுத்துக் கொண்டவர்.

அழகிரிசாமி மனிதநேயத்தைத் தன் படைப்புகளில் அதிகம் எழுதியவர். ‘ராஜா வந்திருக்கிறார்’ கதையில் வரும் அன்னை தாயம்மாளுக்கும், பாலம்மாள் கதையில் வரும் பாலம்மாளுக்கும், அழகம்மாள் கதையில் வரும் அழகம்மாளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை; வெவ்வேறு சாயல்களில் அறவுணர்ச்சியுடன் (வெறுப்பு x பிரியம்) உரையாடுபவர்களாக வருகிறார்கள். தாயம்மாள் சிறுவன், ராஜா மீது பொழியும் கருணைக்கு நேர் எதிர்திசை கொண்டவர் அழகம்மாள்.
‘இரு சகோதரர்கள்’ கதையில் வரும் அண்ணன், தம்பியின் தகாத செயலை எதிர்கொள்ளும் முறைதான் அழகிரிசாமியின் படைப்புலகத்தின் அடிப்படை என்று சொல்ல முடியும். அதை ஒரு படிமமாக ஆக்கிப்பார்க்கலாம். வறுமையில் நைந்துபோன தன் குடும்பத்துக்காகத் திருமணத்தை விலக்கி பொருளாதரத்தைப் பலப்படுத்த உடனிருக்கும் இளைய சகோதரன், தனித்திருக்கும் தன் மனைவியைப் பலாத்காரப்படுத்த முயல்வதை தற்செயலாக நோக்க நேர்கிறது. பிற்பாடு அவனை அங்கிருந்து குடும்பத்தைவிட்டு தன்மையாக வெளியாகச் சொல்கிறார். இந்தத் தன்மை என்பதற்குள் வெறுப்பும், அன்பும் தம்பி மீது இருக்கிறது. இதனைப் பேசித் தீர்க்க முடியாது என்று அண்ணன் கருதுவதற்குள் அழகிரிசாமியின் படைப்புலகம் மையம் கொள்கிறது. பிடிக்காத கணவருடன் வாழும் நிர்பந்தத்தில் இருக்கும் அழகம்மாள் கணவரை நீங்காமல் இருப்பதோடு சில சமயம் அவருக்காக இரங்குவதற்குப் பின்னுள்ள காரணமும், இரு சகோதர்கள் கதையில் வரும் தம்பி பலாத்காரம் செய்யும் போது அதற்கு எந்த எதிர்ப்போ, ஆதரவோ செய்யாத அண்ணன் மனைவியின் எதிர்வினையும் பல்வேறு காரணங்களால் பிணையப்பட்டது. இங்கு எந்தச் சார்பையும் எடுக்காமல் மிகக்சிறிய இடைவெளிகள் ஊடாக கதைகளைச் சொல்லப்படுகிறது. இங்கு மனித மனதின் உரசல்கள் அறவுணர்ச்சிகளோடு உரையாடி மனிதநேயத்தோடு நிற்கிறது. அழகிரிசாமி இருளைத் தேடியதைவிட ஒளியைத் தேடியிருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

தீவிரமான கதைகளை எழுதிய அழகிரிசாமி, நகைச்சுவைக் கதைகளையும் எழுதியுள்ளார். அபார ஞாபகம், முகக்களை, கல்யாணகிருஷ்ணன், சாப்பிட்ட கடன் போன்றவை அவற்றில் சிறந்தவை. இவற்றில் கூட உறவுகளின் எல்லைகளை, பற்றை எழுதவே விரும்பியிருக்கிறார் என்று சொல்ல முடியும். இதற்குச் சிறந்த உதாரணம் ‘அபார ஞாபகம்’. பிள்ளைகளின் தொந்தரவால் நிம்மதியிழந்து தவிக்கும் அருணகிரிமுதலியார் இறக்கும் தருவாயில் சொல்லிவிட்டுச் சென்றது வெறும் வேடிக்கையைத் தாண்டியது. உறவுகளின் சிடுக்குகள் புரிந்துகொள்ளவே முடியாதவை என்ற புதிர் மீண்டும் மீண்டும் அவரது கதைகளில் வருகிறது. மனிதனின் சிறுமைகளை விலாவாரியாக எழுதுவதைக் குறைத்து அவற்றை சிறிய சம்பவங்கள் ஊடாக அதிகம் பாதிக்க வைப்பவர் அழகிரிசாமி. மீள மீள படிக்கப்பட வேண்டிய தலைசிறந்த படைப்பாளி.