உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’

அ. முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தை வாசிக்கும் போது அது நாவல் என்று கூறப்பட்டு இருந்தாலும் சுயபுனைவு என்றே புரிந்துகொள்ள முடிகிறது. தடுக்கிச் சரியும் ஒவ்வொரு அத்தியாயமும் அவரது பால்யத்தை எள்ளலுடன் புன்னகைக்கும் வகையில் சொல்லிச் சென்றிருக்கும். இந்தப் புன்னகைக்க வைக்கும் தன்மைதான் அப்புத்தகத்தின் வெற்றியோ என்று கூட தோன்ற வைக்கும். பால்யத்தை மீட்டிப் பார்க்கும் போது இனிமையான சம்பவங்கள் சட்டென்று முதலில் நினைவுக்கு வரும்; பின்னர் மெல்ல மெல்ல அந்த நினைவுகளைக் கடந்து கசப்பான நினைவுகள் சுற்றிப்பிடித்து விழுங்க ஆரம்பிக்கும். இதனைச் சமநிலை குலையாமல் எழுதும் போதே சுயபுனைவுக்கான வடிவம் கூடிவருகிறது. இவற்றை சுயசரிதையாக வெறுமே கருத முடிவதில்லை. ஊகங்களாகக் கடந்து செல்ல வேண்டியவற்றைக் கூட சம்பவங்களாக எழுதி ஆசிரியரால் இட்டு நிரப்படப்படுகிறது. புனைவுக்கான முடிச்சுகளுடன் கச்சிதமாக முடிக்கப்படுகின்றன.

இதே போல் ‘காலம்’ செல்வம் அவர்கள் எழுதிய “எழுதித் தீராப் பக்கங்கள்” புத்தகமும் சுய எள்ளல் கலந்த நகைச்சுவை நடையுடன் அகதி வாழ்க்கையின் கசப்பான பக்கங்களை எழுதிச் சென்றிருக்கும். கடந்து வந்த துயரை தள்ளி நின்று பார்க்கும் போது ஒருவித கிண்டல் கூடவே கைவந்து விடுகிறது. கசப்பின் மேல் பூசப்பட்ட தேன்சாற்றை விலக்கிவிட்டு சுவைக்க நுனிநாக்கு கசப்பது போல் அவற்றுக்குள் மடிந்திருக்கும் துயர் உயிர் வாழ்தலின் அவலத்தை சொல்வதை புரிந்து கொள்ள இயலுகிறது.

ஈழத் தமிழர்களின் வாழ்க்கை, ஆர்மினியர்களின் வாழ்க்கை போல் இனப்படுகொலையாலும், அகதி வாழ்க்கையாலும் நிறைந்த துயரால் நுரையாகத் ததும்புவது. இந்த நுரையை விலக்கி விட்டுப் பார்க்க அந்தந்த காலப்பகுதியில் வாழ்ந்த எழுத்தாளர்களின் சுய புனைவுப் புத்தகங்களே உதவக்கூடியன. அங்கிருக்கும் ஆசிரியனின் கோணம் கருத்தியல் நிலைபாடுகளைத் தாண்டி, தன் வாழ்க்கைக்குள் நுழைந்து தன் அலைக்கழிப்பை அந்த மண்ணுக்குள் தேடும். இதனாலே உணர்வுக்கு நெருக்கமாக அவை சென்று விடுகின்றன.

ஜேகே எழுதிய “கொல்லைப்புறத்துக் காதலிகள்” புத்தகமும் யாழ்ப்பாணத் தமிழர்களின் 95ம் ஆண்டு இடப்பெயர்வுக்கு முன்னரும் பின்னரும் உள்ள பதின் பருவத்திலுள்ள இளைஞர்களின் உள்ளத்தை பாசாங்கில்லாமல் பேசுவது. மின்வெட்டு, ஊரடங்கு, எறிகணை வீச்சு என்று புறவய உலகம் இருக்கும் போது, சைக்கிள் மிதித்து டைனமோவில் இளையராஜா பாடல் கேட்டு ரசிக்கும் இளைஞர்களின் இன்னுமோர் பக்கத்தை அசலாக பதிவு செய்திருக்கும் புத்தகம் அது.

காலவரிசையில் உண்மை கலந்த நாட்குறிப்புகள், எழுதித் தீராப் பக்கங்கள், கொல்லைப்புறத்துக் காதலிகள் என்று பார்க்கும் போது யுத்தம் அற்ற சூழல், யுத்தம் பிளக்க அகதிச் சூழல், புலிகள் வெளியேற்ற இராணுவத்திடம் சிக்காமல் யாழ்ப்பாணத்தை விட்டு அகலும் மக்களின் சூழல் என்று மாறும் ஓர் உலகத்தின் நுட்பமான மாறுதலை நோக்கலாம். அடிப்படையாக உயிர் வாழ்தலின் தேவையும் அதன் ஆதாரன விருப்பங்களும் இந்த அலைக்கழிப்பிலும் ஈழத் தமிழர்களிடம் எவ்வாறு இருந்தன என்பதை அடிநாதமாக ஒலிக்கக்கூடியவை.

உமாஜி எழுதிய ‘காக்கா கொத்திய காயம்’ ஓர் வாலிபனின் நிலம் மீதான நினைவுகளின் தொடர்ச்சி என்று கொள்ளலாம். ஈழப் போரின் இறுதிப் போர் ஆரம்பித்த பின்னர் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நிகழ்ந்த மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது. உமாஜி என்ற இளைஞனின் கண்ணோட்டத்தில் சம்பவங்களாக விரிபவை. ஒரு வகையில் ஆசிரியர் தன் வாழ்க்கையை வேடிக்கையாகப் பார்ப்பது போலத் தோன்றினாலும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆழமாகக் கீறப்பட்டிருக்கும் மனக் காயங்கள்தான் அவ்வாறு எழுத வைக்கின்றன என்பதை ஊகித்துக் கொள்ள இயலுகிறது.

பால்யத்தை நினைத்தவுடன் பிறந்து வளர்ந்த மண்ணும் அச்சூழலும் அயலில் வசித்தவர்களும் தான் நினைவுக்கு வருவார்கள். அந்த மண்ணுடனே மனதின் ஆழத்துள்ளே தொன்மங்களும் படிமங்களும் சென்று சேர்கின்றன. தனக்கும் அயலிலுள்ளவர்களுக்கும் இடையிலான பரஸ்பர சம்பவங்களே முதலில் கதைகளாக விரிகின்றன. சிறுவயதில் சந்தித்த மனிதர்கள், சந்தியில் ஒன்றாக நின்ற நண்பர்கள் என்று ஒவ்வொரு வயதிலும் நண்பர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். நிலையாக எவரும் இல்லை. இடப்பெயர்வுகள் முளைக்க முளைக்க வெவ்வேறு பிரதேசங்களுக்கு மாறிக்கொண்டே இருக்க நேர்கிறது. சுற்றி வாழும் மக்களும் மாறுகிறார்கள். ஒரு பதினைந்து வருடம் கடந்து இவர்களை பார்க்கும் போது பலர் இல்லை, பலர் அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார்கள்.

ஆனால் கண்டவுடன் உள்ளார்ந்து அடையாளம் கண்டு கொள்கிறார்கள். சிநேகமாக புன்னகைத்துக் கொள்கிறார்கள்; உடனே விட்ட இடத்திலிருந்து பேச ஆரம்பிக்கிறார்கள். இடையில் காணாமல் போன பல வருடங்களை வெறுமே இரண்டு வரியில் பேசிக் கடந்து செல்கிறார்கள். யானை விழுங்கிய வாழைப்பழம் போல் சட்டென்று ஒரு பத்து வருடத்தை தாண்டிச் செல்கிறார்கள். இரண்டு தலைமுறையின் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. எண்ணற்ற பள்ளிக்கூடங்களில் மாறி மாறிப் படித்து நினைவுச் சுழற்சிகளும் பால்யத்தின் ஈர வாசமும் மாறியவாறே இருந்தன. உங்கள் பால்யகால சிநேகிதர்கள் யார் என்று கேட்டால், யார் என்று உடனே சொல்ல முடிவதில்லை. சில சமயம் யாருமே இல்லை போல என்று கூட தோன்றக்கூடியது. ஆனால் , இருந்தார்கள், இருந்து அடையாளம் அற்றுப் போனவர்கள்.

ஓர் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ரயில் என்றாலே வடபகுதி மக்களுக்கு கனவுதான், அதுவும் சிறார்களுக்கு. ஏறக்குறைய இரண்டு தலைமுறை ரயில் என்றாலே என்னவென்று தெரியாமலே வளர்ந்திருக்கின்றது. வெறுமே சினிமாவில் மட்டுமே அந்தப் பாரிய வாகனத்தை பார்த்திருப்பார்கள். அநேகமாக தொண்ணூறுகளில் பிறந்த பலருக்கு ரயில் பயணம் என்பதே ஓர் ரகசியக் கனவாக இருந்தது என்பது உண்மைதான். பல நண்பர்களுக்கு அதெப்படி இத்தனை பெரியதாக ஓர் வானகம் இருக்கும் என்ற வியப்பு இறுதிவரை இருந்தது. எண்பதுகளின் பின்னர் புலிகளால் தண்டவாளங்கள் வடபகுதியில் அகற்றப்பட்ட பின்னர் வவுனியாவுடன் புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் வந்த தலைமுறைக்கு ரயில் என்பதே கனவுதான்.

உமாஜிக்கும் இந்த ரகசிய ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், எண்பதுகளில் பிறந்தவர்களின் நினைவுகள் ஊடாக அதனை நினைவு கொள்கிறார். முதன் முதலில் காங்கேசன் துறை வரை தண்டவாளங்கள் இடப்பட்டு ரயில் ஓடத் தொடங்கியபோது ரயில் எப்படி இருக்கும் என்ற விம்பம் அவர்களை ஆட்டுவிக்கிறது. மெல்ல மெல்ல அதன் மீதான ஆச்சர்யம் கரைகிறது. ஆனால், பயணம் செய்த அனுபவம் மட்டும் களையவில்லை. காரணம் பயணத்தில் சந்திக்கும் பயணிகள் மட்டுமல்ல, ஒவ்வொரு பிரதேசமும் மாறும் போது ரயிலில் விற்கப்படும் உணவுகள் தான். அதன் ருசியும் நினைவுகளும் இப்போதும் கிளர்ந்து வருகிறது. சிறாராக இருக்கும் போது அப்பாவிடம் அடம்பிடித்து வாங்கிதரச் சொல்லிக் கேட்பவற்றை இப்போது நிதானமாக இறைமீட்க முடிகிறது.

தமிழர்களின் கிராமங்கள் முடிவடைந்து சிங்கள மக்களின் கிராமங்கள் ஆரம்பிக்கும் வவுனியாவின் எல்லைப்புறத்திலிருந்து உணவின் தன்மைகள் மாற ஆரம்பிக்கும். மாலுபானும் மதவாச்சி இறால்வடையும் இன்று அப்பிரயாணங்களில் பிராபல்யமானது. சீவிய அன்னாசிப் பழங்களும் பெரிய ஆணைக் கொய்யா பழங்களும் உப்புத் தூள் தடவிக் கிடைக்கும். சிலசமயம் ரம்புட்டான் பழங்களும் கிடைக்கும். அதோடு கட்ட சம்பல் எனப்படும் உறைப்பான சம்பலுடன் ரொட்டியைத் தின்ன மிக ருசியாக இருக்கும். இதோடு தடினமான பால் கலக்கப்பட்ட கிரிக் கோப்பியும் குடித்தால் அந்தப் பயணம் பூரணம் அடைந்துவிடும்.

இரண்டாயிரத்தியாறில் இறுதியுத்தம் ஆரம்பித்த பின்னர் யாழ்ப்பாணமும் தெற்கும் மறுபடியும் துண்டிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டியது, இரண்டாயிரத்தி இரண்டில் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட் பின்னர் ஏற்படுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்தைத் தான். பேருந்துப் பயணம் ஆரம்பிக்க சிறிய பயணச் செலவில் யாழிலிருந்து கொழும்புக்குச் செல்ல முடிந்தது. அங்கு வேலை பார்த்தவர்கள் சனி ஞாயிறுகளில் யாழிலுள்ள வீடுகளுக்கு வருகிறார்கள். ஏறக்குறைய, எஸ்.பொ சடங்கில் காட்டிய யாழ்ப்பாண வாழ்கை. பிறகு மீண்டும் திடீரென்று தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் துண்டிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு யாழ்ப்பாணம் வந்து மீள கொழும்பு செல்ல முடியாதவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் ஒருவராக உமாஜியும் இருக்கிறார். கொழும்பிலுள்ள அலுவலகத்துக்குச் செல்ல இயலாத நிலை. வழமை போல வீட்டிலே யாழில் முடங்க நேர்கிறது.

இதில் இன்னும் சுவாரஸ்யமானது பாதை மூடிய சமயம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் உமாஜியும் பயணித்து இருக்கிறார். அந்த நேரத்தில் எல்லைகளுக்கு இடையிலான பதற்றம் எப்படி இருந்தது என்பதை சாமானியனின் பார்வையில் கடந்து செல்கிறார். முகமாலைக்கு அருகே சூனியப் பிரதேசம்; புலிகளும் சரி, இராணுவமும் சரி அங்கே நிலைகொள்ள முடியாது; சர்வதேச செஞ்சிலுவை சங்கம்தான் அதற்குப் பொறுப்பாக இருந்தது. அந்தப் பிரதேசத்தில் பல மணிநேரம் காத்து நிற்க நேர்கிறது. ஏதோ சிக்கல் என்று புரிய ஆரம்பிகிறது. கேற்றைத் திறந்துவிடும் புலி உறுப்பினர் கேற்றைத் திறக்க மறுக்கிறார். அதைக் கடந்து சென்றால் இராணுவத்தின் கட்டுப்பாடு பிரதேசத்துக்குச் சென்றுவிடலாம். பின்னர் போக்குவரத்துக்கு கிடைக்கும். எப்படி அதற்குள் செல்வது என்று பொறுமையை இழக்கிறார்கள். வந்திருந்த பயணிகள் கூட்டு மனநிலையில் கொஞ்சம் இளகி தங்களுக்குள் அரசியல் நாட்டு நடப்புகளை பேசிக்கொள்கிறார்கள்.

‘இப்ப ஷெல் அடிச்சால் இங்கதான் விழும்’ – யாரோ ஒருவர் பயத்தை சூழ்நிலைக்கு ஏற்ப கச்சிதமாகக் கிளப்புகிறார். இன்னுமொரு பெண்மணி இனிமேல் சண்டை வந்தால் கொழும்பில் தான் அடிவிழும் என்கிறார். உண்மையில் கொழும்பிலுள்ளவர்கள் அடிவாங்க வேண்டும் என்பது ரகசிய ஆசையாக வடக்குப் பகுதியில் வசிப்பவர்களுக்கு இருக்கிறது. எவ்வளவு நாட்கள்தான் நாம் மட்டும் இடப்பெயர்வுக்குள் அல்லல்படுவது; அவர்களும் வாங்கிப் பார்க்கட்டுமே என்ற ஆசைதான் அது. யாழ்ப்பாண சனத்துக்கு அடிச்சால் தான் அவர்களுக்கு புத்தி வரும் என்று கொழும்புத் தமிழர்கள் பேசுவதையும், கொழும்பு சனத்துக்கு அடி விழுந்தால்தான் அவர்களுக்கு தெரியும் என்று யாழ்ப்பாணத் தமிழர்கள் பேசுவதின் பின்னே இருக்கும் ஓர் அந்தரங்க மனக்கிளர்ச்சியை உமாஜி தொட்டு எடுத்து வேடிக்கையாகச் சம்பவங்கள் ஊடக சித்தரிக்கிறார்.

இறுதியில் புலி உறுப்பினர் கேற்றைத் திறந்துவிட, சூனியப்பிரதேசத்தை நடந்தே கடந்து செல்கிறார்கள். இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வேகமாக செக்கின் நடக்கும். இன்று இன்னும் விரைவாக நடக்கிறது. மறுபடியும் வேறொரு பேருந்தில் தொத்திக் கிளம்ப, அன்று மாலையே ஒரு பெரும் போர் வெடிக்கப் போகிறது என்பது தெரியாமல் ஏன் இத்தனை இராணுவம் வீதியின் இருபுறமும் குமிகிறது ஏதும் பயிற்சியோ என தனக்குள் எண்ணியபடி கடந்து செல்கிறார். வீடு வந்து துயில்கொண்ட பின்னர் நண்பர்களைப் பார்க்கச் செல்லும்போது, அவர்கள் இவரை ஆச்சரியமாகப் பார்த்து எப்படி வந்தாய் என்று கேட்கிறார்கள்.

அப்போது தான் யாழையும் தெற்கையும் இணைக்கும் ஏ-9 பாதை மூடப்பட்டது தெரிய வருகிறது. அது பிரச்சினை இல்லை, இரண்டு நாளில் திறந்து விடுவார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால், மாலை ஆறு மணி போல யாழ் கோட்டை பகுதியிலிருந்து பூத்திரி போல தீப்பிளம்புகள் கிளம்பிச் செல்கின்றன. மல்லரி பரல்கள் பூநகரியை நோக்கிப் பாய்க்கிறன. அன்று தான் நான்காவது ஈழப் போர் ஆரம்பித்த ஆவணி11 இரண்டாயிரத்தியாறு. அன்று பூட்டிய பாதை பிரபாகரன் இறந்த பின்ரே மீண்டும் திறந்தது.

மண் வாசம் என்று நினைத்தாலே அதன் வாசம் பலருக்கு மழை பெய்த பின்னர் எழும் நுகர்விலிருந்து வரலாம். ஆனால், ஈழத் தமிழர்கள் பலருக்கு பங்கர் நினைவுகளே உடனே வரும். விமானக் குண்டு வீச்சுக்கு பயந்து பங்கருக்குள் நெருக்கியடித்து பதுங்கியிருக்கும் போது அந்த வாசத்தை நுகர்ந்து இருப்பார்கள். உமாஜியின் மண் வாசம் அவ்வாறே ஆரம்பிக்கிறது. வெவ்வேறு வகையான விமானங்கள் குண்டு வீச ஆரம்பித்த காலம். சில விமானங்கள் மிகத் தாழ்வாகப் பறந்து வந்து பாரிய இரைச்சலுடன் குண்டு வீசிவிட்டு தப்பிச் செல்கின்றன. புலிகளின் ராடர்களில் இருந்து தப்பிக்கவே அந்த உத்தி என்று அறிகிறார்கள்.

ஆரம்பத்தில் சகடை என்ற பழைய சரக்கு விமானத்திலிருந்து மலத்தை பரலுக்கு டன் கணக்காக அடைத்து வெடிபொருட்களுடன் மக்களின் மீது வீசுகிறார்கள். யாழ்ப்பாணமே கொடிய நாற்றத்தில் பல நாட்கள் மிதந்தது. பலருக்கு தொற்று வியாதிகள் உட்பட பல தோல் வியாதிகளும் வந்தன. ஜேகேயும் தன் ‘கொல்லைப்புறத்து காதலிகள்’ புத்தகத்தில் இதனை ஆவணப்படுத்தி அதன் வடுக்களை குறிப்பிட்டு இருப்பார். இவையெல்லாம் இன்று ஓர் வேடிக்கையாக மாறி விட்டிருந்தாலும் கொடுத்த இழப்புகள் துயருக்குள் புதைக்கத்தக்கவை. யுத்தம் என்ற பெயரில் நகரம் முழுவதும் விமானத்தில் மலம் வீசிய அவமானத்தை அந்தத் தலைமுறை ஒருபோதும் மறக்காது. மறக்கவும் முடியாது.

பங்கர் வெட்டுவது கூட பெரிய சடங்காகவே இருக்கிறது. பங்கர் வெட்ட வேண்டுமா இல்லையா, இப்போது எங்கே சண்டை, விமானம் இங்கே வருமா என்று கலந்து ஆலோசித்து இறுதியில் தீர்வு எட்டப்படுகிறது. அதற்காக சில சிறப்பு திறனாய்வாளர்கள் இருக்கிறார்கள். அவர்களே எந்த வடிவத்தில் பங்கர் வெட்ட வேண்டும் எத்தகைய வாசல் வைக்க வேண்டும் என்றெல்லாம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ற வகையில் முடிவு எடுக்கிறார்கள். பின்னர் பங்கர் வெட்டப்படுவது திருவிழாவாகவே நிகழ்கிறது. சில தன்னார்வ இளைஞர்கள் கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு தேநீர் பலகாரம் வழங்குதல், கிண்டல், சிரிப்பு என்று அந்தச் சடங்கு இனிதே நிறைவேறுகிறது. ஜாம் போர்தலில் விளக்குச் செய்து பாதுகாப்புக்கு உள்ளே வைக்கிறார்கள்.

பெரியவர்களுக்கு எப்படியோ, இப்படியெல்லாம் அளவெடுத்து கட்டப்பட்ட பங்கரில் எப்போது சென்று தங்க நேரும் என்ற கவலை உமாஜி வயதிலுள்ள சிறுவர்களுக்கு வருகிறது. அதற்கு ரகசியமாக ஏங்கவும் செய்கிறார்கள். இறுதியில் அந்தத் ‘திரில்’ அனுபவம் கிடைக்கிறது. இவையெல்லாம் எளிமையான நகைச்சுவை நடையால் சொல்லப்பட்டு இருந்தாலும் இதற்குப் பின் இருக்கும் நுட்பமான அவதானங்களும் சொல்முறையும் சிறந்த புனைவு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய ஆற்றலை ஒப்புவிக்கிறது. எத்தனை தாக்குதல்கள், உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் அவையெல்லாம் சாதரண பொதுசனங்களுக்கு ஏற்பட்ட இழப்பாகவே இருகின்றன. அரசாங்க வானொலிகள் தாக்குதல்களில் இறந்தவர்களை பொத்தம் பொதுவாக புலிப் பயங்கரவாதிகள் என்று தங்கள் தரப்பில் சொல்கின்றன.

ஆனால், அதற்குள்ளிருந்தவன் என்கிற முறையில் உமாஜி சொல்கிறார், விமானக் குண்டு வீச்சில்லிருந்து சேதாரம் துளியுமில்லாமல் தப்ப ஒரேயொரு முறைதான் உள்ளது, ‘அருகிலுள்ள புலிகளின் காவலரண்களுக்கு சென்று விடுவதுதான். அதைத் தவிர மிச்ச எல்லா இடங்களிலும் இராணுவம் குண்டு போடுவார்கள்.’ குறிபார்த்து அடிப்பதில் இராணுவத்தினர் அவ்வளவு கெட்டிக்காரர்கள் என்பது தான் அது. வேடிக்கையாக இருந்தாலும் கசப்பான உண்மை தான். விமானத் தாக்குதலில் உயிரிழந்த புலிகள் என்று சொல்வதற்கு அநேகமாக பலர் இருப்பதில்லை. குத்துமதிப்பான தாக்குதல்களால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பொதுசனம் தான். இன்று அவயங்கள் இன்றி இருப்பவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் சொல்லும் பதில் விமானத் தாக்குதல் என்பது.

தொலைக்காட்சி என்றாலே வடபகுதி யுவன் யுவதிகளுக்கு உடனே நினைவுக்கு வருவது தூர்தர்ஷன். தூர்தஷன் பார்த்து வளர்ந்த தலைமுறை நாம். தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு எது எப்படியோ, நமக்கு தூர்தர்ஷன் பெரிய வரமாக இருந்தது. காரணம் அதுவொன்றே தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொலைக்காட்சியாக இருந்தது. அடிக்கடி ஹிந்தி மொழிக்கு மாறி இம்சையும் கொடுக்கும். இருந்த போதிலும் சக்திமான் போன்ற தொடர்கள் மிகப் பிரபலமாக இருந்தன. கிடைக்கும் சொற்ப கால மின்சார நேரத்தில் இவற்றைப் பார்ப்பதே பெரிய இலட்சியம். உமாஜிக்கு மகாபாரதம் பார்ப்பதிலிருந்து இந்த நினைவுகள் ஆரம்பிக்கின்றன.

அப்போதிருந்த இந்திய இராணுவமும் இவர்களுடன் சேர்ந்து மகாபாரதம் பார்த்துவிட்டு சப்பாத்தியும் சமைத்து சாப்பிட்டு விட்டுச் சென்ற அனுபவத்திலிருந்து நீள்கிறது ஞாபக அடுக்கு. யுத்த காலத்தில் ஜெனரேட்டர் வைத்து மின்சாரம் பெற்று தொலைக்காட்சியை இயக்கி திரைப்படங்கள் பார்ப்பது அலாதியான அனுபவம். ஜெனரேட்டர் சத்தம் வெளியே கேட்டு விடக்கூடாது என்று கிடங்குவெட்டி அதற்குள் புதைத்து இயக்கி, படம் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். சைக்கிளை தலைகீழாகக் கிடத்திவிட்டு படலைச் சுற்றி சைக்கிள் டைனமோவை இயக்கி வானொலிப் பெட்டியில் பாடல்கள் கேட்பது மிகப்பெரிய உத்தியாக இருந்தது.

ஜேகே தன் புத்தகத்தில் இவற்றையும் எழுதியிருப்பார். கொடிகாமத்தில் இடம் பெயர்ந்திருந்த போது, கூட இருந்த அண்ணாமார்கள் இவ்வாறான அதிரடிக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி, தங்கள் பதின்ம வயதைக் கொண்டாடிக் கொண்டிருந்ததை இன்று மீட்டிப் பார்க்க முடிகிறது. யுத்த அவலத்துக்குள் இருந்த சின்னச் சின்ன மீட்புகள் இவ்வாறே இருந்திருக்கின்றன. இன்று தொலைக்காட்சி பார்ப்பதின் மீதான ஆர்வம் குன்றி இணையத்தில் தேவையானதை தேவையான பொழுது பார்த்துவிட முடிகிறது. இருந்தும், அன்றைய நாட்கள் கசப்பின் மீதான கரும்புச்சாற்றாக இனிக்கிறது உமாஜிக்கு. ஓர் தலைமுறையின் ஞாபகச் சித்திரங்கள் அவை.

ஊரடங்குக்குள் சிக்கி அவதிப்படாதவர்கள் வடக்குப் பகுதி மக்கள் என்று சொல்லிக் கொள்ளவே முடியாது. எப்படியும் ஊரடங்குக்குள் சிக்குண்டே இருக்க வேண்டும் என்பது விதிக்கபட்ட வரம். ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு வகையான ஊரடங்கு அனுபவங்கள் வாய்க்கும். ஆனால், இரண்டாயிரத்தியாறாமாண்டு ஒக்டோபர் மாதத்தின் பின்னர் ஏற்பட்ட ஊரடங்கு என்பது மிக வித்தியாசமானது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் பலர் தேடித் தேடி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மாவீரர் தினத்துக்கு கொடி கட்டியவர்கள், நோடீஸ் ஒட்டியவர்கள், வாகனம் ஓட்டியவர்கள் என்று பலர் கொல்லப்பட்டார்கள். புதிதாக பிஸ்டல் கலாச்சாரம் முளைத்திருந்தது. மோட்டார் சைக்கிளில் நிதானமாக வந்து மண்டை அருகிலேயே துப்பாக்கியை வைத்து நிதானமாகச் சுட்டார்கள். சுட்டவர்களும் அருகில் நிற்பவர்களிடம் “தம்பி இங்கால நிக்காத பேசாமல் போ”என்று தமிழிலே பேசினார்கள். தினமும் உடல்கள் வீதியெங்கும் நிறைந்திருந்தன.

வெள்ளை வேன்கள் நடு இரவில் ஊரடங்கு நேரம் வீடுகளுக்குள் புகுந்து இளைஞர்களைக் கடத்தியது. மறு நாள் கழுத்துடன் துண்டிக்கப்பட்டு வளவுகளுக்குள் சடலமாக துண்டு துண்டாக வீசப்பட்டார்கள். அவற்றை உமாஜி இவ்வாறு எழுதுகிறார். “மயான அமைதியில் ஊரே உறைந்திருக்க, தூரத்தில் கேட்கும் நாய்க்குரைப்பும், மிக மெல்லிய லாம்பு வெளிச்சத்தில் அச்சத்தோடு கடந்து போகும் கலவர ராத்திரிகளைக் கொண்ட இந்திய இராணுவ கால ஊரடங்கு உங்களுக்கு இன்னும் ஞாபகமிருக்கலாம். கொக்குவில், பிரம்படியில் வீதியில் வரிசையாகப் பலரைப் படுக்கவைத்து யுத்த டாங்கியினால் ஏற்றிக் கொல்லப்பட்ட அன்றைய ஊரடங்கை நீங்கள் கடந்திருக்கலாம். வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்திருந்த மகனை ஒரு இராணுவ வீரன் நெஞ்சில் கத்தி சொருகி அடிவயிறு வரை இழுக்க, சகோதரர்கள் கதற கண்முன்னால் துடித்து அடங்கிய அவன் உடலை வீட்டு முற்றத்திலேயே எரித்துவிட்டுக் கோவிலில் சென்று கழித்த ஊரடங்கு இரவைப் பற்றி எங்களுக்கு யாரேனும் விவரித்திருக்கலாம். கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் வடக்கு பக்கமாக இருக்கும் வேப்ப மரத்திற்கு கீழ் ஐம்பதிற்கு மேற்பட்ட உடல்களை புதைத்த அந்த ஊரடங்கு இரவை நீங்கள் இன்னும் மறக்காதிருக்கலாம். அந்த மாதிரியான ஊரடங்கு போலிருக்கவில்லை அது.”

இந்த ஊரடங்கும் இறப்புகளும் கொலைகளும் நிகழ்ந்த காலப்பகுதியைச் சுற்றியே என்னுடைய படைப்புலகமும் இயங்குகிறதாக நினைக்கிறேன். அன்று பார்த்த கொலைகள் இன்றும் தூக்கத்தை கெடுக்கத்தான் செய்கின்றன. உமாஜி இந்த ஊரடங்கு காலத்தில் நிகழந்த துன்பத்தை மெலிதான நகைச்சுவை ஊர்ந்து பரவிச் செல்வதன் மொழியில் சொல்கிறார்.

ஊரடங்கு நேரத்தில் வீட்டுக்குள்ளே முடங்கியிருக்க வேண்டும். எவ்வளவு நேரம் தான் இதனைச் செய்ய இயலும்? அதனால் இளைஞர்கள் மெல்ல மெல்ல வெளியே வருகிறார்கள். இராணுவம் இல்லை என்று ஊர்ஜினப்படுத்திவிட்டு கதைக்க ஆரம்பிக்கிறார்கள். பின் தயக்கம் பயம் கலைய பரஸ்பரம் தினமும் சந்தித்து அரட்டையடிக்க ஆரம்பிக்கிறார்கள். சந்தியில் நிக்கும் இராணுவத்திற்கு இதெல்லாம் தெரியாது என்று நினைக்கிறார்கள். ஆனால் சிப்பாயொருவர் “நேற்று இரவு பத்துமணிக்கு இதே டி ஷேர்ட்டோட ரோட் க்ரொஸ் பண்ணிப் போறே என்ன? நான் அங்கயிருந்து பாத்துக் கொண்டிருந்தனான்” என்கிறார். எல்லாம் இராணுவத்துக்குத் தெரிந்து தான் இருக்கிறது. இராணுவம் நினைத்தால் எந்தக் கேள்வியும் இன்றிச் சுடவே முடியும்.

ஆனாலும், தெரிந்த பொடியன்கள் பிரச்சினை இல்லை என்று கனிவும் காட்டுகிறார்கள். இந்தக் கனிவை பயன்படுத்தி ஊரங்கு நேரத்தில் குமிந்த யுவன்கள் பேணிப்பந்தும் விளையாடுகிறார்கள். இராணுவம் ஒன்றும் செய்யவில்லை என்று அறிய மேலும் மேலும் கூட்டம் கூடுகிறது. வெவ்வேறு ஏரியா யுவன்களும் குதூகலத்துடன் வந்து விடுகிறார்கள். திடீரென்று இராணுவம் வருகிறது. எல்லோரும் உறைந்து நிக்கிறார்கள். அவர்கள் பேசாமல் கடந்து செல்கிறார்கள். பின்னர் இராணுவ லீடர் சொல்கிறார்  “நாங்க ஒண்ணும் செய்ய மாட்டம்… கேஃபியூ டைம்ல வேற ஆமி வந்தா.. ஃபீல்ட் பைக் ஆளுங்க வந்தா சுடும். நாங்க ஒண்டும் செய்ய ஏலாது”.

‘ஃபீல்ட் பைக்’ இராணுவ குழுமம் மிகவும் பெயர் பெற்றது. பச்சை யமகா மோட்டார் சைக்கிளில் மிக வேகமாக கும்பலாக ரோந்து வருவார்கள். ஊரடங்கு நேரத்தில் எவராவது வெளியே நின்றால் அடி பின்னி எடுத்துவிட்டுச் செல்வார்கள். அவர்களிடம் மிச்ச இராணுவத்தினர் பயன்படுத்தும் ஏகே–47 துப்பாக்கி இருப்பதில்லை. பைக் ஓடுவதற்கு வசதியான எம்-16 துப்பாக்கியை வைத்திருப்பார்கள். அது இன்னும் கவர்ச்சிகரமாக இருக்கும். மடிந்திருக்கும் அதன் கைப்பிடியை விரிக்கும்போது பிரத்தியேகமான ‘கிளிக்’ என்ற ஒலி கேட்கும். அந்த ஒலியே எல்லாவற்றையும் நிறுத்தி விடக்கூடியது. உமாஜியும் நண்பர்களும் வீட்டு முற்றத்தில் நின்று ஊரடங்கு நேரதில் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது ‘ஃபீல்ட் பைக்’ குரூப் வந்துவிடுகிறது அரண்டு வீட்டுக்குள் பாய அதற்குள் துப்பாக்கியுடன் சுற்றி வளைத்து எல்லோரையும் பிடித்துவிடுகிறார்கள். பயத்தில் உறைந்து ‘சுடப் போகிறார்களா? அடிக்கப் போகிறார்களா?’ என்ற வினா கொல்கிறது. இந்த இரண்டு தெரிவையும் விட வேறு தெரிவுகள் இல்லை என்பது சர்வ நிச்சயம்.

ஆனால் மிக மெதுவாக ஃபீல்ட் பைக் டீம் லீடர், ‘ஊரடங்கு நேரத்தில் இனி வெளியே உங்களைக் காணக்கூடாது’ என ஆங்கிலத்தில் சொல்கிறார். பின்பு எல்லோரும் போய்விட்டார்கள். தமக்கு எந்த சேதாரமும் நடக்கவில்லை என்பதை நம்ம முடியாமல் பார்க்கிறார்கள். உமாஜி இந்த ரணகளத்தை எழுதியிருக்கும் சித்தரிப்புகள் காட்சி பூர்வம் என்பதைத் தாண்டி உணர்வுகளை தட்டி எழுப்பக் கூடியது. ஒவ்வொரு சம்பவத்தையும் நண்பர்களின் அசைவையும் வேடிக்கையாகச் சொல்கிறார். புன்னகை முகிழாமல் வாசிக்க முடியவில்லை. அது எப்படி நம்மை அடிக்காமல் விட்டார்கள் என்று கேள்விக்கான விடையை இறுதியில் கண்டு பிடிக்கிறார்கள். சற்று முன்னர் தான் இன்னுமொரு இளைஞர்கள் குழாமை நொறுக்கி எடுத்துவிட்டு களைத்துப் போய் ஃபீல்ட் பைக் குரூப் வந்திருக்கிறது.

உமாஜி இப்புத்தகத்தில் சித்தரிக்கும் வாழ்க்கை என்பது நடுத்தர வர்க்கத்துக்கு உரிய ஆண்களின் அகவுலகத்தை பாங்கு இல்லாமல் சொல்வது. “தம்பி அந்தப்பக்கம் அடி விழுதோ?” சைக்கிளில் செல்லும்போது எதிரே வருபவரை இப்படி நலம் விசாரிப்பது போல் கேட்கும் புதியதொரு பழக்கம் அன்றைய நாட்களில் பரவியிருந்தது. ஆரம்ப நாட்களில் வீதியில் சென்று கொண்டிருப்போம். எங்கேயாவது வெடிகுண்டுச் சத்தம் கேட்கும். சத்தம் வந்த திசையில் ஆமிப் பொயிண்ட் இருந்தால் தவிர்த்துச் செல்ல வேண்டும் அல்லது வாங்கிக் கட்டிக் கொள்ள நேரிடும். பின்பு அதுவே பழகிப் போய் எந்தச் சத்தமும் கேட்கவில்லை என்பதே அமைதியே அசாதரணமான ஒரு பயத்தைக் கொடுத்தது” என்று குறிப்பிடும் உமாஜி உலகத்தில் நானும் இருந்திருக்கிறேன். இன்று நினைத்துப் பார்த்தால் ஒரு நீள் மூச்சுதான் வெளியேறுகிறது. இப்போதுதான் யுத்தம் முடிவடைந்தது போல் உள்ளது. ஆனால் ஏறக்குறைய ஒரு தசாப்தம் ஆகப்போகிறது. இப்போதும் தெருவையும் மதவடிகளையும் பார்க்கும் போது பழைய நினைவுகள் சுட்டெரிக்கின்றன.

உமாஜியின் எழுத்து முறை என்பது கூர்மையான சுய எள்ளலுடன் எல்லாவற்றையும் அணுகிச் செல்வது. தன்னையும் தாழ்த்தி எல்லா தர்க்கங்களையும் உடைத்து நையாண்டி செய்யும் எழுத்து முறை. இந்தப் பாணியை வாசிக்கும்போது நம்மையும் ஒருவராக அதற்குள் இனங்காணச் செய்கிறது. அதிகம் அலங்காரம் இன்றி எழுதப்பட்ட நடை. வர்ணனைகள் குறைவாகவே வருகின்றன. வீட்டில் அம்மாவுடன் சண்டை வரும் போது ஓவென்று ஒப்பாரி வைத்து பக்கத்து வீட்டு அக்காமார்களை துணைக்கு அழைப்பது உமாஜிக்கு வழமையான செயலாக இருக்கிறது. அதை இப்படி வர்ணிக்கிறார் ‘ஒப்பிரேஷன் லிபரேஷன் நடவடிக்கையில் திடீரென ஒரு நாள் ‘மிராஜ்’ வந்ததே அதுபோலப் பறந்து வருவார்கள்’; அக்காமார்களை மிராஜ் விமானத்துடன் ஒப்பிட்ட உவமையை வாசித்த போது அசந்துவிட்டேன். அதற்குப் பின்னே இருக்கும் கூர்மையான அரசியல் கிண்டல். இப்படி ரசிக்கத்தக்க வரிகள் ஏராளம். பொதுவாக ஈழத்து எழுத்தாளர்களுக்கும் சரி ஈழத்து வாசகர்களுக்கும் சரி நகைச்சுவை அவ்வளவாக கைகூடி வருவதில்லை. கூர்மையான கிண்டல்கள் புரிவதில்லை. உமாஜியின் இப்புத்தகத்தை விளங்கிக்கொள்ள கொஞ்சம் நகைச்சுவை உணர்வு வேண்டும் தான்.

‘காக்கா கொத்திய காயம்’ புத்தகத்தை வாசித்து முடித்த பின்னர் ஒரு இளைஞனின் டயரியை திருட்டுத்தனமாகப் படித்ததுபோல அந்தரங்கமாக உணர முடிகிறது. “சிறுவயதில் உடம்பில் ஏற்பட்ட காயங்கள் மட்டும் அப்படியே தழும்புகளாக நிரந்தர அடையாளங்களாக மாறிவிடுவது ஆச்சரியம் தான். ஒருவேளை வளர வளர அவதானமாக இருக்கப் பழகிவிடுவதால் காயங்கள் மனதில் மட்டுமே அதிகமாக ஏற்படுகின்றன. யாருக்கும் தெரியாத, யாருமே கவனிக்காத, எந்தக் கேள்வியும் கேட்காத மனதின் காயங்களை நாமே கேள்வி கேட்டு, அறவிடாது அப்படியே புதிதாகப் பேணிக் கொள்கிறோம். ஏதோவொரு சமயத்தில் அந்த வலியையும், அதன் வீரியத்தையும் முதன்முறையாக ஏற்படுவது போன்றே உணர்ந்து கொள்கிறோம்” என்று எழுதிச்செல்லும் உமாஜி, இது காக்கா கொத்திய காயம் என்று சிறுபிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு தழும்பைக் காட்டி கதைவிட்டாலும் அதன் பின்னே இருக்கும் உண்மையும் வலியும் பாரியது என்பதை குறிப்புணர்த்துகிறார். எல்லாவற்றையும் சொல்ல முடிவதில்லை, சிலவற்றை மட்டுமே சொல்ல முடிகிறது.

வெளியீடு : 4தமிழ்மீடியா

விலை : 500 ரூபாய் (இலங்கை), 300 ரூபாய் (இந்தியா), யூரோ 10.00 (ஐரோப்பா)

தமிழினி இதழில் வெளியாகிய கட்டுரை-

One thought on “உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’

  1. LETCHUMANAN DURAISAMY

    மிக நீண்ட கட்டுரை. அருமையான எழுத்து நடை. வாய்ப்பு அமையும் போது இப் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும். கட்டுரை மனதைக் கொத்தி விட்டது. சிறப்பு.

    நமது வலைத்தளம் : கூகுள் குரோம் தேடல் முடிவுகளை எப்போதும் புதிய திரையில் (Tab) திறக்கச் செய்வது எப்படி?
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் – #சிகரம்

    https://newsigaram.blogspot.com/

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *