நான் உனைச் சந்தித்தது ஒரு குளிர்காலப் பொழுதில். மரங்கள் இலைகளை உதிர்த்து அலுமினியக் கம்பிகள் போல் விறைப்பாக சலனம் அற்று நின்றிருந்தன. என் அறை ஜன்னலுக்கால் எட்டிப்பார்க்க துமிக்கும் பனித்துளிகள் பருத்திப் பஞ்சுபோல் வீழ்ந்து கொண்டிருந்தன. சோர்வுடன் தலையை போர்வைக்குள் உள்ளீர்த்து அமிழ்ந்தேன். அப்போது தான் உன் வருகைக்கான சத்தம் கேட்டது. பீடித்திருந்த தூக்கம் கலைந்து கொண்டிருந்த பொழுதுகள் அவை. சோம்பலோடு கைகளை உதறி ஜன்னலுக்கால் வெளியே பார்த்தேன். வெண்ணொளி என் கண்களை கூசச் செய்தது. தடுமாறி எழுந்து கதவை இழுத்துத் திறந்தேன். காலுக்குள் நேற்று இரவு அருந்திய ஹனிக்கேன் பியர் டின்கள் இடறியது. என் முன்னே நீ நீண்ட சூக்கேசோடு நின்றிருந்தாய். நீரில் அலையும் தாமரை இலையின் சலனம் போல் உன் உதடு புன்னகையால் அசைந்தது. ஒரு கணம் திகைத்து பின் சுதாகரித்து யார் நீ என்பது போல் விழியசைத்து உன்னைப் பார்த்தேன்.
நான் தங்கியிருக்கும் வீட்டில் நீயும் தங்க வந்திருந்தாய் பக்கத்து அறையில். இங்கிலாந்துக்கு வந்த பொழுது உள்ளத்தில் ஒரு குதூகலம் ஓய்ந்து சோர்வு என்னையறியாமல் பீடித்திருந்தது. தனிமை என்பதைவிட வெறுமை என்றே சொல்லலாம். இசையாலும் மதுவாலும் என்னை நிரப்பிக்கொண்டிருந்தேன். பல்கலைக்கழகம் மூன்று நாட்கள் மட்டும்தான். மிகுதி நேரங்களை நூலகத்திலும், வளாகம் அருகேயிருக்கும் வாவியில் நீச்சல் அடிக்கும் நாரைகளைப் பார்த்துக்கொண்டிருப்பதோடும் பொழுதுகளை செலவளித்தேன். உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு நண்பர்கள் குறைவு என்பதைவிட நண்பர்களை பிடித்துக்கொள்வது சவாலாக இருந்தது. நெருங்கிப்பழகுவதில் தயக்கமே கொழுந்துவிட்டு எரிந்தது. மீண்டும் யோசித்துப்பார்க்க தாழ்வு மனப்பான்மையோ என்று தோன்றினாலும் அதை புரிந்துகொள்வதில் கடினமே இருந்தது.
உடலோடு ஒட்டிய பாம்பின் வழுவழுப்பான தோல்கள் போன்ற நீண்ட கருப்பு நீள்சட்டையும், அதே நிறத்தில் முழுநீள மேல்சட்டையும் மணிக்கட்டுவரை அன்று அணிந்திருந்தாய். ஒற்றைப் பின்னல் முதுகுவரை செந்நிறத்தில் அசைந்தது. சீனப் பெண்ணொருவரை ஒற்றைப் பின்னலுடன் கண்டது இதுவே முதல் முறையாக இருந்தது. எங்கள் ஊரில் பெரும்பாலான பெண்கள் ஒற்றைப் பின்னலோடு திரிவார்கள்.
நீ உன்னை “கிஜூகி மின்” என்று என்னிடம் அறிமுகப்படுத்திவிட்டு இங்கு தங்கவந்திருப்பதைப் பற்றிச் சொன்னாய். பக்கத்து அறையில் ஒருவர் தங்க வருவதாக முன்னமே உரிமையாளர் சொல்லியிருந்தார். அதுவொரு பெண்ணாக அதுவும் சீனப்பெண்ணாக இருக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. உன்னுடைய பொருட்கள் வாசலில் இருந்தன. உன் அறையில் எடுத்து வைப்பதற்கு உதவி செய்தேன். நீ எளிதில் தீராத புன்னகையை சுடராக ஏந்திக்கொண்டு என் முன்னம் நின்றாய். என்னைப்பற்றி நான் சொல்லாதபோதும் ஒவ்வொரு பொருட்களாக தூக்கி தூக்கி உன் அறையில் அடுக்க நீ என்னிடம் என்னைப்பற்றி வினவிக்கொண்டிருந்தாய். என்னைப்பற்றிச் சொல்ல அதிகம் ஒன்றுமில்லை. ஸ்ரீலங்காவில் இருந்து வந்திருக்கிறேன் என்ற போது, நீ புருவங்களை நெளித்து வளைத்து அது எங்கே இருக்கிறது என்று தெரியாமல் விழித்தாய். இந்தியாவிற்குக் கீழே இந்து சமுத்திரத்தில் சிறிய தீவாக மாம்பழ வடிவில் இருக்கும் என்று சொன்னபோது, உன் தயக்கங்களை கலைந்து தெரியும் தெரியும் என்று சொன்னாய். நான் பொறியியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கிறேன் என்றபோது நீ கட்டடக்கலை என்றாய். அவ்வாறு தான் நம் முதல் சந்திப்பு நிகழ்ந்தது.
இருவருக்கும் ஒரே பொதுக் குளியலறை. அதைப்பற்றி உனக்கு எந்தவித கவலையும் இல்லை. குறைந்தவிலையில் வாடகை வீடு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றுதான் சொல்லியிருந்தாய்.
புத்தகங்கள் எதையாவது படிக்கும்போது மட்டும் கண்டாடி அணிவாய். அகண்ட நீள்சதுரக் கண்டாடி. உன் முகத்துக்கு மிக எடுப்பாகவே இருந்தது. எப்போதும் புத்தகம் கையுமாகவே இருப்பாய். நான் வீட்டில் பார்க்கும்போது இறுக்கமான காற்சட்டை அணிந்து உன் தொடைகளும் கால்களும் வெளியே தெரியும் வண்ணம் மிகச்சுதந்திரமாக இருப்பாய். முதலில் நான் சங்கடப்பட்டாலும், வெகுவிரைவில் அது சகஜமாகியது. பொது வரவேற்பறையில் நீ சகஜமாக காலைத்தூக்கிப் போட்டுவிட்டு காதில் நீலநிற இயர்போனை மாட்டிக்கொண்டு புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பாய்.
ஒருமுறை என் அறையில் புகையிலையை எடுத்து அதற்குரிய மெல்லிய வெள்ளைப் பேப்பரில் பில்டரை வைத்து சுருட்டிக்கொண்டிருந்தபோது, அறைக்கதவைத் தட்டினாய். என்னவென்று கதவைத்திறந்து கேட்டபோது அறையினுள்ளே எட்டிப்பார்த்து “உள்ளே வரலாமா?” என்று கேட்டுக்கொண்டே என் பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே வந்தாய். படுக்கையில் என் உடைகள் குதம்பலாகக் கலைந்திருந்தன. குடித்து முடித்த தேநீர் கோப்பைகள் கழுவாமல் இருந்தன. நீ அவற்றைப் பொருட்படுத்தாமல் மேசையில் சுருட்டிய சிகரட்டை எடுத்துப் பார்த்தாய்.
“இதை எப்படிச் செய்வது” என்று கேட்டுக்கொண்டே என் படுக்கையில் அமர்ந்தாய். உன் கேசங்கள் உயிருள்ள குட்டிப்பாம்புகள் போல் நெற்றியில் புரண்டுகொண்டிருந்தன. நான் புன்னகைத்துவிட்டு என் மேசையின் முன்னிருந்த நாட்காலியில் அமர்ந்து புகையிலையை பேப்பரில் வைத்து ஒரு சிகரெட்டைச் சுருட்டிக்காட்டினேன். நீயும் ஒன்றைச் சுருட்ட முயன்று தோற்றாய். மறுபடி மறுபடி சொல்லித்தந்தேன். இறுதியில் ஒன்றை சீராகச் சுருட்டி முடித்தாய்.
நான் ஜன்னலைத் திறந்துவிட்டு வெளியே புகை போகும்வண்ணம் புகைக்க ஆரம்பித்தேன். நீ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாய். நான் உன்னிடம் திரும்பி ”இங்கே வீட்டில் புகைக்க அனுமதியில்லை தெரியுமா? என்றேன்.
நீ தெரியும் என்றும் இதை வீட்டு உரிமையாளரிடம் சொல்ல மாட்டேன் என்றும் சொல்லிச் சிரித்தாய். உன் கண்கள் மிகச்சிறியன. ஈசல்களின் இறக்கைகள் போன்று சிறிய அரைவட்டமானவை. சிரிக்கும்போது இன்னும் உன் கண்கள் சுருங்கும். முழுச்சந்திரனை விழுங்கிய பூமியின் நிழல்போல் உன் நெற்றியை விழுங்கும் உன் முன் கேசம் துள்ளித் துள்ளி அடங்கியது.
“நீ ஏன் எப்போதும் அமைதி, என்னுடன் பேசுவதேயில்லை?” என்றாய். உண்மையில் அந்தக் கேள்வி என்னை நிலைகுலைய வைத்தது. அது ஏனோ என்னால் வலிந்து பேசவே முடிவதில்லை. நான் “அப்படியல்ல..” என்று பொதுவாகச் சிரித்தேன். “உனக்கு எல்லாத்துக்கும் சிரிப்பு” என்று என் பிரடி மண்டையை செல்லமாக தட்டினாய். என் மிக அருகிலே நீ இருந்தாய். உன் முழங்கால் என் கால்களை தட்டியது. என் சிகரெட் ஒன்றை வாங்கி நீயும் புகைக்க ஆரம்பித்தாய். முதல் இழுப்பில் கடுமையாக இருமினாய். இருந்தும் அனுபவம் உண்டு என்று என் மறுப்பையும் மீறி தொடந்து புகைத்தாய். உன் நீண்ட விரல்களுக்குள் கடினப்பட்டு சிகிரெட் அமர்ந்திருந்தது. இருவரும் திறந்திருந்த ஜன்னலுக்கால் தலையை வெளியே விட்டுக்கொண்டு படுக்கையில் அமர்ந்தவாறு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசினோம். வானம் டோவ் பறவையின் விரிந்த இறக்கையின் சாம்பல் நிறத்தில் மிக அமைதியாகவிருந்தது. ஒரு முழுநீளச் சிகரெட்டை புகைத்து முடித்திருந்தாய். அதற்குப் பிறகு நீ கேட்டதுதான் ஆச்சர்யமாக இருந்தது.
“Weed இருக்கிறதா?”
“என்ன weedடா… இல்லை; அதெல்லாம் நீ உபயோகிப்பியா?” ஆச்சரியம் துகிலுரித்த விழிகளுடன் நேர்பார்வை கொண்டு கேட்டேன்.
உன் கன்னம் உள்ளே ஒடுங்கி புன்னகையாக மலர்ந்தது. நெற்றியில் புரண்ட முடிக்கற்றையைக் கோதி கீழுதட்டைக்கவ்வி “ம்ம்… ஒரேயொரு தடவை; உன்னால் முடிந்தா எடு. இருவருமாகப் புகைப்போம்” என்று சொல்லிக்கொண்டு சிரித்துக்கொண்டே என் அறையைவிட்டு நீங்கினாய். ததும்பும் நீர்ச்சுனைபோல் என் உணர்வுகள் மெலிதாக பொங்கிவிட்டு அணைந்தது. என் அறையின் மின் குமிழைப் பார்த்தேன். மிகப்பிரகாசமாக ஒளிர்ந்தது.
அதற்குப்பின் என் அறைக்கு நீ வருவதேயில்லை. உன்னைக் காண்பதும் அபூர்வமாக இருந்தது. பனிபடர்ந்த தெருக்களில் நடந்து செல்ல எதிர்ப்படும் அனைத்து சீன முகங்களும் உன் நினைவையே கிளர்ந்தின. நூலகத்தில் புத்தக மட்டையை திறக்க உன் முகம் ஆழமாக விரிந்து எனக்குள் நீந்திச் சென்று எங்கையோ தொலைந்தது. மீண்டும் அதைக் கண்டுபிடிக்க தூண்டில்விட்டு அலைந்தேன்.
உன் அறை சாத்தியே இருக்கும். நீ இருப்பதும் தெரியாது, பல்கலைக்கழகம் முடிந்து வந்ததும் தெரியாது. நீண்ட நாட்களுக்குப்பின் வரவேற்பறையில் உன்னைக் கண்டேன். குஷன் சோபாவில் காலிரண்டையும் நீட்டிப்படுத்து கைப்பிடியில் தலையை சாய்த்து தன்னிலை மறந்து மூழ்கி புத்தகத்தைப் படித்து படித்துக்கொண்டிருந்தாய். என் சப்பாத்துச் சத்தம் கேட்டு தலையை கீழாகத் தொங்கப்போட்டு என்னைப் பார்த்தாய். தலைகீழாகத் தெரிந்த உன் முகத்தில் புன்னகை வளர நித்தியகல்யாணிப் பூக்கள் கிளையில் ஆடியசைந்தது போல் இருந்தது.
“weed கிடைச்சுதா?” என்று முதல் கேள்வியிலே கேட்டாய். விளையாட்டாக நீ கேட்கிறாய் என்று நினைத்திருந்தேன். அது அப்படியல்ல என்று புரிய ஒரு கணம் எடுத்தது.
“இல்லை, கிடைக்கவில்லை; விரைவில் முயல்கிறேன்” என்றேன். ஒரு புன்னகையை சாய்வாக விட்டெறிந்துவிட்டு மீண்டும் புத்தகத்துக்குள் மூழ்கினாய். உன் கால்கள் வெள்ளை வெளிறென்று இருந்தது. ஏதோவொரு வித்தியாசத்தை ஒரு கணத்தில் உன்னில் ஆழமாக உணர்ந்தேன்.
இரண்டாவது வாரத்திலே இருபது பவுண்ட் கொடுத்து நண்பனின் நண்பன் மூலம் கஞ்சா பொதியைப் பெற்றேன். நான் நினைத்த அளவுக்கு அது அத்தனை கடினமாக இருக்கவில்லை. பொழுத்தின் கவரில் சுற்றப்பட்ட கஞ்சா துகள்களை என்னுடன் வைத்திருப்பது ஓவ்வொரு கணத்திலும் என்னைப் பலவீனப்படுத்திக் கொண்டிருந்தது. இளகி இளகி மெழுகாக வீழ்ந்துகொண்டிருந்தேன்.
மூன்று நாட்களாக உன்னைத் தேடினேன். கண்டுகொள்ளவே இயலவில்லை. வாட்ஸப்பில் குறுஞ்செய்திகள் அனுப்பியபோதும் பதில்களில்லை. உன்னுடைய பதில்களுக்காகவே ஏங்க ஆரம்பித்தேன். அதை எண்ணிப்பார்க்க எனக்குள்ளே எரிச்சல் வெந்து புறப்பட்டது. நான்காவது நாள் சமயலறையில் உன்னைக் கண்டேன். கோப்பி தயாரித்துக் கொண்டிருந்தாய். ஒரு கையை இடுப்பில் வைத்து தலையை ஒருபக்கம் சாய்த்து எதையோ தீவிரமாக எண்ணி அதிலே திளைத்து மிக மெதுவாக கரண்டியால் கலக்கிக்கொண்டிருந்தாய். முற்றிலும் அமைதியில் நீ ஆழமாக வீழ்ந்தது போல் இருந்தது.
“ஹேய்” என்றேன். நீ என்னை திரும்பிப்பார்த்தாய். முதல் இரண்டு கணம் சிரிக்கவில்லை. மூன்றாவது கணம் வழமையாக நீ சிரிக்கும் தாமரைச் சிரிப்பை மெலிதாக என் மீது திறந்தாய்.
“நீ நலமா, என்னாச்சு உனக்கு?” என்றேன்.
“யா… நான் நலம், கோப்பி உனக்கும் வேணுமா?” என்றாய்.
இல்லை என்றுவிட்டு உன்னை கூர்ந்து பார்த்துவிட்டு “weed இருக்கு, புகைப்போமா?” என்றேன்.
நீ சலனப்படாமல் புருவங்களை நெளித்து யோசித்துவிட்டு மெதுவாகச் “சரி” என்றாய். உன்னிடம் இருந்து நீண்ட குதூகலம் வெடித்து எழும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மாறாக ஏமாற்றமே எரிச்சலுடன் என்னுள் எஞ்சியது. நீ உன்னுடயை கோப்பியோடு என் அறைக்கு வந்தாய்.
வழமையாக சிகிரெட் சுருட்டும் அதே பேப்பரில் புகையிலைக்குப் பதிலாக கஞ்சா துகள்களை வைத்து சுருட்டத் தொடங்கினேன். இடைமறித்து கஞ்சா துகளை எடுத்து முகர்ந்தாய். உன் முகத்தில் நித்திய அமைதி தோன்றியது போல் எனக்குள் எண்ணம் எழுந்தது. என் தோள்மூட்டை இருகையால் பிடித்து அழுத்தினாய்.
என் உதட்டில் பொருத்தி லைட்டரால் எரியூட்டி நிதானமாக உள்ளே இழுத்தேன். நடுக்கத்தை மறைத்தேன். இதற்கு முன் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது கேரளா கஞ்சா இரண்டு முறை பயன்படுத்தியதுண்டு. அன்றல்லாத பதற்றம் இன்று முழுமையாச் சூழ்ந்திருந்தது. முழுக்க முழுக்க சட்டவிரோதம். கைதுசெய்தால் என்ன ஆகும் என்று தெரிந்தே இருந்தது. “டோன்ட் வொரி” இதை பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள் என்று வாங்கித்தந்த நண்பன் சொல்லியிருந்தான். எனக்கு இதைப் புகைக்கும் எண்ணம் இருந்ததேயில்லை. உனக்காகத்தான். இதற்காக நான் செய்த பிராயச்சித்தத்தை மிகையூட்டி விபரீத சாகாமாகச் சித்தரித்து உனக்கே சொல்லிக்காட்ட வேண்டும், குற்றவுணர்சியில் தூண்ட வேண்டும் என்று ஆழமாக விரும்ப ஆரம்பித்தேன்.
மூன்று இழுப்புக்குப் பின் உனக்குத் தந்தேன். மிக அலட்சியமாக வேண்டி கட்டிலில் அமர்ந்து சுவற்றில் முதுகைச் சாய்த்து நிதானமாகப் புகைக்க ஆரம்பித்தாய். பூக்களின் நறுமணம் உன்னைச்சுற்றிப் படர்ந்தது. உன் கன்னங்கள் மெல்ல மெல்ல ஊதி சிவந்து மங்குஸ்தான் பழம் போல் ஆனதாக உணர்ந்தேன். இனிமையான இசையில் ஏறிப்பயணிப்பது போல ஒன்றின் மீது வழுக்கிக்கொண்டிருந்தேன். ஆனால், வழமைக்கு அதிகமாகன நிதானத்தில் இருந்தேன்.
நீ அமைதியாக இருந்தது என்னை கடுமையாக உறுத்தியது. எதுவுமே பேசாமல் குறைந்த பட்சம் என்னைப் பொருட்படுத்தாமல் இருந்தது என்னைக் கடுமையாக எரிச்சல்படுத்தியது. எங்கோ ஓர் இடத்தில் ஆழமாக விறாண்டியது போல் அகங்காரத்தில் தேய ஆரம்பித்தேன்.
“உனக்கு என்ன பிரச்சினை? ஆர் யூ ஆல்ரைட்?” உன் முழங்கால் தொடையைத் தொட்டுக் கேட்டேன். நீ நிதானமாக என்னிடம் திரும்பி “ எட் ஷீரனின் பாடல்கள் இருக்கிறதா?” என்று கேட்டுக் கொண்டே திறந்திருந்த என் மடிக்கணனியை நோக்கிச் சென்று யூடியூப்பில் பாடல்களைத் தேடினாய். கொஞ்சம் அளவாக சத்தத்தை கூட்டி ஒலிக்கவிட்டு கட்டிலில் வந்தமர்ந்து “அடுத்த சுற்றை சுருட்டச் சொன்னாய்..” நான் ஆச்சரியமாக உன்னை நிமிர்ந்து பார்த்தேன்.
மீண்டும் இரண்டு சுற்றுகளைச் சுருட்டினேன். நாம் புகைத்தோம் புகைத்தோம். நீண்ட நேரம் புகைத்தோம். என் மடியில் நீ வீழ்ந்தாய். உன் விழிகளால் என்னை ஊடுருவிக்கொண்டு சட்டென்று இமைகளை மூடினாய். நான் அசையாமால் அப்படியே இருந்தேன். பதினைந்து நிமிடம் கடந்திருக்கும் என் தொடை இரத்தோட்டம் குன்றி விறைக்கத் தொடங்கியது. நீயே எதையோ உணர்ந்ததுபோல் திடுக்கிட்டு எழுந்தாய். உன் கண்களின் நரம்புகள் பின்னிப்பிணைந்த சிவந்த பாம்பாகக் கடுமையாக உறைந்திருந்தன. என் டீஷேர்ட் காலரைப் பிடித்து குளியல் அறைக்குள் இழுத்துச் சென்றாய். ஷவரை திறந்துவிட்டு என் தோள்மூட்டை பிடித்துக்கொண்டு அப்படியே கீழே அமர்ந்தாய். நீர் எம் மீது சீறிச் சாரலாக வடிந்தது. நீ அழுதது போல் தோன்றியது. நீருக்குள் உன் கண்ணீரைப் பிரித்தறிய முடியாமல் இருந்தது. என் தோள்மூட்டில் சாய்ந்தே இருந்தாய். ஒரு சொல்லைக் கூட நாம் இருவரும் பேசவேயில்லை.
உன் தலையை துவட்டி, முடிந்தவரை உன் ஆடையில் ஊறிய ஈரங்களை ஒற்றி எடுத்து உன் அறைப் படுக்கையில் படுக்கவைத்தேன். கசிந்த நீர் மெத்தையை கொஞ்சம் ஈரமாக்கியது. மிகுந்த தெளிவுடன் உன் முகம் உறக்கத்திலிருந்தது. உதட்டில் ஒரு புன்னகை ஓரமாகப் பூரித்துவைத்திருந்தாய். மூன்றுநிமிடம் அறை வாசலில் நின்று உன்னையே பார்த்தேன். உன் கால்கள் மாசற்று, உரித்த பனங்கிழங்கு போல் நீண்டிருந்தன. கைகள் பிடிப்பற்று இறுக்கம் தளர்ந்து முறிந்துவீழ்ந்த கைவிடப்பட்ட மரக்கிளையாகத் தனிமையில் இருந்தன.
என் ஒற்றை பக்கத் தலை கடுமையாக வலித்தது. ஆடைகளை மாற்றிவிட்டு என் படுகையில் வீழ்ந்தேன். வரமறுத்த நித்திரை மெல்ல மெல்ல சதையில் நுழையும் கூரிய கத்தியாக என்னைத் துளைத்து இறங்கியது. மூளை நரம்புகள் கடுமையாக நொந்தன.
தூங்கி எழுந்து தேநீர் தயாரிக்க சமையலறைக்குச் செல்லும்போது உன்னை வரவேற்பறையில் கண்டேன். வழமையாக இருக்கும் அதே பாணியில் அமர்ந்திருந்தாய். “நலமாக இருக்கிறீயா?” என்று கேட்டேன். உன்னிடமிருந்து எந்தப்பதிலும் வரவில்லை. குறைந்த பட்சம் உன்னிடமிருந்து ஒரு நன்றிகூட கிடைக்கவில்லை என்பது என்னைச் சீண்டியது. அதைப் புறந்தள்ளிக் கொண்டு தேநீர் தயாரிக்கச் சென்றேன்.
மின்கேத்தலில் தண்ணீரை கொதிக்கவைக்கும்போது விசும்பல் ஒலிகளை விட்டுவிட்டுக் கேட்டேன். உன்னிடம் இருந்துதான் அவை எழுகின்றனவோ என்ற ஐயத்துடன் எட்டிப்பார்த்தேன். உன்னிடமிருந்துதான், உன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. உன்னிடம் வந்து பேசுவோமா வேண்டாமா என்ற சில கணம் யோசித்துவிட்டு விலகிச்சென்றேன். உனக்கும் சேர்த்து கோப்பியை தயாரித்துக்கொண்டு வந்தேன். நீ உன் அறைக்குள் சென்று அமர்ந்திருந்தாய். வழமையாக நீ அமர்ந்திருக்கும் இருக்கை உன் இருத்தல் இல்லாமல் தனிமையில் அமைதியிழந்திருந்தது.
என் அறைக்குள் செல்ல எத்தனிக்கும்போது அந்த முடிவை ஒரு கணத்தில் எடுத்தேன். உன் அறைக்கதவை அனுமதியில்லாமலே திறந்தேன். என் இரண்டு கைகளிலும் கோப்பி நிறைந்த கோப்பைகள் இருந்தன. தடுமாற்றத்துடன் உள்ளே நுழைந்தேன். படுக்கையில் கால்களுக்கிடையே தலையாணியை வைத்து அதற்குள் முகத்தைப்புதைத்து உறைந்திருந்தாய். மேசையில் கோப்பைகளை சத்தம் வராமல் மென்மையாக வைத்துவிட்டு, உன் அருகே வந்து முதுகைத் தொட்டு “மின்” என்று உன்னை அழைக்க விழைய உடல் குலுங்கி திடுக்கிடலுடன் என்னை நிமிர்ந்து பார்த்தாய். உன் உடல் ஒருமுறை உதறியது. உன் கண்கள் ஆழமான வெறுப்பை என் மீது கக்கியதை உணர்ந்தேன். நான் என் கைகளை உன் முதுகிலிருந்து விளத்த எத்தனிக்க நீ பலம்கொண்டு தட்டிவிட்டாய். நான் என் செயல்திறன் குன்றி இயலாமையை அடைந்து தாழ்வில் தவிக்க, நீ எழுந்து என் கன்னத்தில் ஓங்கி அறைந்தாய். நான் தடுக்கவில்லை, இரண்டாம் மூன்றாம் அடிகள் மாறி மாறி கன்னத்தில் விழ நான் பின்னால் நகர என்னையே தாக்கிக்கொண்டு முன் நகர்ந்தாய். வரவேற்பறையின் நடுவரை வந்தோம். வலி பொறுக்க முடியாமல், சமநிலை குழைந்து நான் “ஹேய்” என்று சுதாகரிக்க என் தோள் மூட்டைப் பிடித்துத் தள்ளிவிட்டாய். நிலைதடுமாறி சுவரில் சாய்ந்து பிடிமானம் ஏதும் கிடைக்காமல் தத்தளித்து பின்னால் வீழ்ந்தேன். என் இடுப்பில் இரண்டு உதை உதைந்தாய். மிக கூர்மையான அடிகள் அவை. உச்சக்கட்ட வலியை ஏற்படுத்தியது. மூச்சு எடுப்பதில் சிரமம் படர்ந்த்தது. வலி உடம்பு முழுவதும் மின்சாரமாக குறைவழுத்தத்தில் ஓடி என்னை அதிரச்செய்தது.
“எங்கள் பூர்வீகம் சீனா என்றாலும், நான் பிறந்து வளர்ந்தது ஹோங்கொங்கில்” என்றாய்.
“ஹ்ம்ம்”
“எனக்கு ஒரு சகோதரன் இருக்கிறான்…” என்றுவிட்டு நீ உன் அறைக்குள் சென்றாய். நான் புரியாமல் அப்படியே கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தேன். வீரிட்டு உன் அறையிலிருந்து படபடக்கும் புறாபோல் மீண்டும் என் முன்னே வந்து “எனக்கு மாதவிடாய் முடிந்த பிற்பாடு மூன்றாவது நாள் நானும் அவனும் உடலுறவு கொள்வோம். விளையாட்டாக பதின்மூன்று வயதில் தொடங்கிய இந்த பழக்கம் மூன்று வருடங்கள் தொடர்ந்தது… எப்போதும் அல்ல வருடத்துக்கு மூன்று நான்கு முறை இவ்வாறு செய்துள்ளோம்” என்றாய்.
நான் உன்னையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதைச் சொல்லிவிட்டு அழுவது போல் என்னைப் பார்த்தாய். உன் கண்கள் பழுப்பு நிறத்திலிருந்தன. இப்போது என்ன பதிலைச் சொல்வது என்று தடுமாறினேன். ஏதோவொரு ஆறுதலை என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறாய் என்று புரிந்தது. புண்படுத்தவே விரும்பி அமைதியாக இருந்தேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய். நான் உன் கண்களையே பார்த்தேன். அப்படியே பின்னால் நகர்ந்து காற்றில் வீழும் ரிப்பன் துண்டுபோல் மென்மையாக உன் அறைக்கதவுக்குள் சென்று வீழ்ந்தாய்.
குளியலறையின் பெரிய நிலைக்கண்ணாடியில் என் முகத்தைப்பார்த்தேன். வீங்கி சிவந்திருந்தது. சுடுதண்ணியால் ஒத்தடம் கொடுத்தேன். என் அறைக்கு வந்து டிஷேர்டை நீக்கிவிட்டு கழுத்தின் பின்புறத்தைத் தடவிக்கொண்டு மௌனமாகச் சற்றுநேரம் இருந்தேன். சிறிது நேரத்தில் நீ என் அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்தாய். பதற்றம் எழுந்த சுடரின் தவிப்புடன் அலைக்களிந்து உன்னைப் பார்த்தேன். என்னை வாரிக்கட்டிக்கொண்டாய். உன் மார்புத் துடிப்பு தெளிவாக எனக்குக் கேட்டது போல் இருந்தது. குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாய். என் கழுத்தில் உன் கண்ணீர் ஓட்டிப் பிசுபிசுத்தது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து சட்டென்று என் சாய்வுகளை உதறி உன் கேசத்தை ஆதரவாக தடவினேன். நீ இன்னும் என்னைத் தழுவி இறுக்கமாக அழத் தொடங்கினாய்.
உன்னை சமநிலைப்படுத்தி இருக்கச்செய்தேன். ஏதோ சொல்ல எடுப்பதும், தவிப்பதுமாக உனக்குள்ளே மூழ்கி மூழ்கி எழுந்து நிலையிழந்து சரிந்துகொண்டிருந்தாய். கஞ்சாவை சுற்ற ஆரம்பித்தேன். நாவறண்டிருந்த உனக்கு குடிக்க தண்ணீர் தந்துவிட்டு, கஞ்சாவை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு உனக்குத் தந்தேன். வாங்கும்போது உன் கைகள் தடுமாறிச் சரிந்தாலும் நிதானமாக புகைக்க ஆரம்பித்தாய். உன் கண்களில் வழிந்த கண்ணீர் உறைந்து நின்றது. மூக்கிலிருந்து வடிந்த நீரை துடைக்க பேப்பர் துண்டு தந்தேன்.
சிறிதுநேரத்தில் நீயாகவே பேச ஆரம்பித்தாய்.
“நானும் அவனும் சேர்ந்து கஞ்சா புகைப்போம்; என் பதினெட்டாவது வயதில் கஞ்சா அப்படிப் புகைக்க ஆரம்பித்தோம்…” என்றாய். அந்த அவன் யார் என்று எனக்குப் புரியவில்லை. அது உன் அண்ணனாக இருக்கும் என்று ஊகித்தேன்.
“ஆனால் நாங்கள் ஒருபோதும் அதைக்குறித்து பேசியதில்லை” என்றாய். எதை என்று என்னுளே கேட்டுப்பார்த்தேன். நீயே என் புரிதல் இன்மையைப் பார்த்து “எனக்கும் என் அண்ணனுக்கும் இருந்த அந்த ஆரம்பகால உறவை” என்றாய்.
நான் அதைக்குறித்து ஆழமாக சிந்திக்கவில்லை. நினைக்கும்போது அதன் வீரியம் என்னைத் தாக்கியது. கொஞ்சம் தடுமாறி “ம்ம்..” என்றேன். மூன்று இழுப்புகள் இழுத்திருந்தாய். நான்காவது இழுப்புக்கு தயாராகிவிட்டு என்னிடமே மிகுதியைத் தந்தாய். இப்போது எனக்குத் தேவையாக இருந்தது. வாங்கி ஆழமாக உள்ளே மூச்சுக்காற்றோடு இழுத்தேன்.
“என் அப்பா மிகப்பெரிய வியாபாரி; பிலிப்பைன்சில் ஏகப்பட்ட வாழைத்தோட்டங்கள் இருந்தன, கொலம்பியாவில் கோப்பி தோட்டங்களும் இருந்தன. எப்போதும் விமானத்தில் பறந்து கொண்டிருப்பார். நானும் அண்ணாவுமாகவே வளர்ந்தோம். எங்கள் அன்னை சிறுவயதிலே தவறிவிட்டார். எங்களைப் பார்த்துக்கொள்ள நிறையவே பணியாட்கள் இருந்தார்கள்” நீ சொல்வதை புகைத்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தேன். உன் மெல்லிய குரல் மிகக்கூர்மையாக உக்கிரம்கொண்டு என்னுளே இறங்கிக்கொண்டிருந்தது.
“எனக்கும் அண்ணாவுக்கும் அந்த உறவு உருவாகி சிறிதுகாலத்திலே ஓய்ந்தது; நாங்கள் அதைப்பற்றி பேசிக்கொள்வதில்லை. அதுவொரு விளையாட்டாக இருக்கவேண்டும் என்று எனக்குள்ளே விரும்ப ஆரம்பித்தேன். நாங்கள் வளர்ந்த பின் அண்ணா காதிலித்து ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டான். அப்பாவுக்கு அந்த திருமணத்தில் பெரிய விருப்பம் இல்லை. இருத்தும் மறுப்பேதும் சொல்லவில்லை. இரண்டு வருடங்கள் அண்ணா நன்றாகத்தான் இருந்தான். தனியாகவே வியாபரம் செய்தான். கொஞ்ச நாளில் அவனுக்கும் அவன் துணைவிக்கும் இடையில் பிரச்சினை ஆரம்பமாகியது. அவள் வேறோர் ஆணுடன் சென்றுவிட்டாள்”
நீ சொன்னவை எனக்குள் எந்தவித அதிர்ச்சியையும் உருவாக்கவில்லை. ஒரு திரைப்பிரதியை மீட்டுப்பார்ப்பது போல, காட்சித் துண்டங்களாக ஓட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன்.
“அவன் அதனால் மிகநொந்து நூலாகினான். மிக விரத்தியில் புண்பட்டு இருந்தான். அவனுக்கு ஆறுதல் அளிக்க அப்பா என்னை அனுப்பிவைத்தார் அவன் இடத்துக்கு. முடிந்த வரை பேசி அவனை இயல்புக்கு கொண்டுவர முயன்றேன். பெண்கள் மீது கடும் வெறுப்பில் இருந்தான். என்னை போ போ என்று சீறிக்கொண்டிருந்தான். இருந்தாலும் பொறுமையாக அவனுடன் இருந்தேன். ஒரு முறை நான் எதிர்பார்க்காத நேரத்தில் என்னை உறவுக்கு அழைத்தான். மறுத்தேன். மறுபடி மறுபடி அவன் அழைக்க சண்டையாகியது. அவனின் இடுப்பில் இரண்டு உதை உதைந்துவிட்டு அன்றே புறப்பட்டு வந்தேன்…” இப்போது எனக்கு நீ என் இடுப்பில் உதைந்தது நினைவுக்கு வர தேகம் விறைத்துப் பதறியது. புகைத்த கஞ்சா எந்த மாற்றத்தையும் உள்ளே விதைக்காதது போல் இருந்தது. ஆழமாக இழுத்தேன்.
“அதன் பின் அவனுடன் பேசுவதில்லை; முற்றிலும் அந்நியமான சூழல் வேண்டும் என்பதற்காக இங்கிலாந்தை தேர்வு செய்து படிக்கவந்தேன்” என்றாய்.
“சரி இப்போது என்ன பிரச்சினை?” என்றேன்.
“அவன் நம் சிறுவயது உடலுறவு நினைவுகள் இருக்கிறதா என்று கேட்டு மின்னஞ்சல் செய்திருந்தான். நான் பதில் எதுவும் கொடுக்கவில்லை. இப்போது அதை வர்ணித்து, என் யோனிவாசல் வேண்டும் என்று மின்னஞ்சல் செய்துகொண்டிருக்கிறான்” என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டு மேலே பார்த்தாய்.
“இப்போது இதிலிருந்து வெளிவர எனக்கு ஒரே வழிதான் உண்டு” மேலும் நீ தொடர்ந்தாய். எனக்கு பெரிதாக புரிதல்கள் வராமல் நெளி நெளியாக குழம்பிக் கொண்டிருந்தது.
“என்ன?” என்றேன். உன்னில் மௌனம் கொடியாகப் பரவிவிரிந்து சென்று கொண்டிருந்தது. கண்களைத்திறந்து என்னை உற்றுப்பார்த்தாய். உன் விழிகளில் நீர்த்திரை வடிந்து ஓய்ந்து கனிவு சுரந்தது. எழுந்து என்னருகில் வந்து என் தோள்மூட்டை இறுகிப் பற்றி என்னை இறுக்கமாக அணைத்தாய். உன் உடலின் மென் சூடு எனக்குள் ஊடுருவியது. நானும் ஆதரவாக உன்னைத் தழுவி ஆறுதல் வார்த்தை ஏதும்சொல்ல எனக்குள் துழாவினேன். வார்த்தைகள் சிக்காமல் தடுமாறி சிதறினேன். உன் உடலின் மென்மை என்னைத் தீண்டி விரிந்தது.
கொஞ்சம் தடுமாறி சாய்வாக மனதை சரித்துக்கொண்டேன்.
உன் உதட்டால் எட்டி என் உதட்டின் விளிம்புகளைக் கவ்வினாய். வாழப்பழத்தின் தோலை உள்பக்கமாகக் கவ்வியது போல் என் உதடு உணர்ந்து மூர்க்கம் கொண்டது. நாக்குகள் பிணைந்து தீண்டி உக்கிரமாகியது. முத்தங்கள் தீயாக வருடி தேகம் எங்கும் பெய்தது. நிலைதடுமாறி சரிய ஓர் நிதானம் படகாக எனக்குள் நீந்தி வந்தது.
அன்றைய பொழுது ஓய நிர்வாணமாக ஆடி இருவரும் ஓய்ந்திருந்தோம். இன்பம் தேய்ந்து சுரந்து மறுபடியும் அடங்கியிருந்தது. படுக்கையில் வீழ்ந்திருந்திருந்தவாறே என்னைப் பார்த்து “கஞ்சா வேண்டும்” என்றாய். அசதியுடன் நழுவும் ஆடைகளை சரிபடுத்திக்கொண்டு பேப்பரை எடுத்து விரிந்து நிதானமாகச் சுற்றத் தொடங்கினேன். கண்களை மூடி தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தாய். நான் உன்னை நோக்குவதை உள்ளுணர்வில் அறிந்தோ என்னவோ கண்களை விழித்து என் கண்களையே பார்த்தாய். உன் கண்களில் அமைதி செந்நிறமாகத் தெரிந்தது. மீண்டும் புகைத்தோம். இந்தமுறை புகைத்து முடிய என் மார்பில் நீ புதைந்தாய். உன் கேசத்தை வருடிக்கொண்டு மிகுதியை புகைத்து முடிந்தேன். அதன் பின்பும் கலவி புரவி வேகத்தில் எழுந்து திமிறியது.
மறுநாள் பல்கலைக்கழகம் முடிந்த பிற்பாடு உடை மாற்றிவிட்டு என் அறைக்குள் வந்து என்னை தள்ளி வீழ்த்தி என்மேல் ஏறி அமர்ந்து நாக்கால் என் முகத்தை வருடினாய். அன்றும் கலவி கொண்டோம். மிக உக்கிரமாக என்னை புரட்டி எடுத்தாய். புன்னகைத்துக்கொண்டே இருந்தோம்.
தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வந்தது. இருள் வடியும் அன்றைய பின்னேரப் பொழுதிலே நீ உன் நண்பர்களுடன் ஸ்காட்லாந்துக்கு விடுமுறையை கழிக்கச் சென்றாய். நீல நிற அங்கியுடன் நீ புறப்பட்டுச் சென்றதை விழியசையாமல் பார்த்தவாறிருந்தேன். எனக்கு ஆய்வு வேலைகள் குமிந்திருந்தன. இந்த நான்கு நாட்களில் அதனை முடிப்பதாக தீர்க்கமாக முடிவெடுத்திருந்தேன்.
நீயற்ற வெறுமை எனக்குள் முளைக்க, உன் மீதான தங்குதலை உணர்ந்து என்னையே வெறுத்து உன் மீதான நினைவுச் சுழிப்புகளை உடைக்கத் தொடங்கினேன். கலவியை விட அதன் மீதான நினைவுகள் எத்தனை உக்கிரம் கொண்டவை. அதன் இன்பத்துக்குள் வீழ்ந்து திகைத்து தட்டுத்தடுமாறி என் ஆய்வு வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்ய ஆரம்பித்தேன்.
நீயொரு சீனப் பாடலை உற்சாகமாக முணுமுணுத்துக்கொண்டு வீட்டின் கதவைத்திறந்து ஐந்தாம் நாள் விடுமுறையை முடித்துக்கொண்டு உள்ளே வந்தாய். உன் முகம் பூரிப்பால் அலைவுற்றவாறிருந்தது. என்னைப் பார்த்து தாமரைச் சிரிப்பை எறிந்துகொண்டு உன் அறைக்குள் சென்று வீழ்ந்தாய்.
அதன் பின் உன்னைக் காண்பதே மறுபடியும் அபூர்வமாகத் தொடங்கியது. உன் அறையை விட்டு நீ வெளியாகுவதே இல்லை. சமையலறையிலும், வரவேற்பறையிலும் உன் வருகைக்காக காத்திருந்து தேய்ந்தேன். உன் அறைக்குள் நுழைய அச்சம் விம்மியது. வெறுமை என்னைச் சூழ, தத்தளிப்புக்குள் வீழ்ந்து நொறுங்கினேன். உன் அடர் வாசம் என் நாசிக்கால் நுழைந்து என்னைப் படுத்தி நண்டு கால்களால் எண் திசையிலும் கீறியது. நீண்ட தடுமாற்றத்திற்குப்பின் உனக்கு வாட்ஸப்பில் குறுஞ்செய்தி அனுப்பத் தொடங்கினேன். உன் புறக்கணிப்புகள் எனக்குள் சீற்றம் பெற “”உன்னோடு உடலுறவு கொள்ள வேண்டும் வா” என்று செய்தி அனுப்பினேன்.
தூக்கத்திலிருக்கும் போது என் அறையின் கவதை தடாலாகத் திறந்து உள்ள வந்தாய். நான் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுப் போர்வையை விலத்தி எழுந்து பார்த்தேன். உன் கேசம் தீ நாக்குகளாக அலைந்தது. மௌனமாக என்னைப் பார்த்தாய். அந்த மௌனம் என்னைச் சாய்த்தது. எதுவும் சொல்லாமல் என் அறையை விட்டு நீங்கினாய். உடனே எழுந்து வாசலுக்கு வந்து உன் கைகளை எட்டிப்பிடித்து இழுத்தேன். நீ திமிறினாய். அந்தத் திமிறலுக்குள் என் மீதான உன் சாய்வைக் கண்டேன். என் மார்புக்குள் நீ சாய்ந்தாய். எனக்கு அழுகை வெடித்துக் கசிய கண்ணீர் வடிந்து உன் கேசத்தில் கோடுகள் வரைந்தன.
“நாயே என்னை நிம்மதியாக இருக்க விடமாட்டியா?”
என் இடிப்பில் எட்டி வலிமை தெறிக்க உதைந்தாய். அதை எதிர்பார்த்தவன் போல் வாங்கிக் கொண்டேன்.
“எல்லாத்தையும் மறக்கப் பயணம் போய் வந்தேன்; இப்போதுதான் மகிழ்ச்சி துமித்தது. நீ மீண்டும் நினைவுபடுத்தி ஆரம்பிக்கிறாய்”
இடுப்பு மிக வலிக்க, இன்னும் மிகை உணர்ச்சியைக்கூட்டி மௌனமாகத் தரையில் அமர்ந்தேன்.
“நடிக்காத நாயே” என்றாய் உக்கிரம் தீயாகப்பாய. அமைதியாகவே இருந்தேன். என்னை இழுத்து எழுப்பினாய், பின் என் முகத்தை எட்டி உதட்டில் முத்தம் இட்டாய், “நாயே என்ன இத்தனை மெசேஜ்? அண்ணன் போல் இப்படி அனுப்பியிருக்கிறாய்” என்று விட்டு என்னை இறுக்கி அணைத்தாய்.
இருவருமாக மொட்டை மாடிக்குச் சென்று வான் நோக்கி முகம் பார்க்க நட்சத்திரங்களைப் அவதானித்தவாறு கஞ்சா புகைத்தோம். குளிர் காற்று வீசித் தீண்ட, கைகளை இறுக்கி என்னை இன்னும் நெருக்கமாக அணைத்தாய். உன் மூச்சுக்காற்று என்னுள் ஊர்ந்தது. இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அமைதியை கீறும் வண்ணம் “அண்ணாவை எனக்கு மிகப்பிடிக்கும்” என்றாய் சட்டென்று யோசனையிலிருந்து விடுபட்ட அம்பாக.
“தெரியும்” என்றேன்.
என் மார்பில் கைகளை ஊன்றி எழுந்து என் முகம் பார்த்து “எப்படி என்றாய்?” நான் வெறுமே புன்னகைத்தேன். எனக்குள் ஓர் அதிர்வு கிளர்ந்து வளர்ந்து சரிந்தது.
“குற்றவுணர்வை கடப்பது என்பது எத்தனை கடினம்” என்றாய் ஒரு பெருமூச்சு வெளிப்பட.
“அதை யார் மீதாவது சாய்த்துவிட்டு கடப்பது தான் இருக்கும் வழி” என்றேன்.
நீ உடல் அசைய என்னை ஊடுருவிப்பார்த்தாய். நானும் உன் முகத்தை ஊடுருவி உன் விழிகளை ஊடுருவிப் பார்த்தேன் என் முகம் கலங்கலாக உன் சிறிய விழிகளில் தெரிந்தது, அந்த மென் ஒளியிலும்.
அன்றைய பொழுதில் மீண்டும் நிர்வாணமாக ஆடி இருவரும் ஓய்ந்திருந்தோம். காலையில் எழுந்து உன் வருகையிலிருந்து எனக்குள் நடந்ததை சொல்லிப்பார்த்துக் கொண்டே இருந்தேன்.
என்னைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே அன்றைய தின வகுப்புக்கு நீ புறப்பட்டுச் சென்றாய். உன் அண்ணாவின் பெயரை இதுவரை நான் கேட்டதில்லை, நீயும் சொன்னதில்லை. என் பெயரை எனக்குள் நானே சொல்லிப் பார்த்தேன்.
முற்றும்
அம்ருதா மார்ச் 2018 இல் பிரசுரமாகிய சிறுகதை.