“ஒரு கோப்பை காபி” சிறுகதை விகடன் இதழில் வாசித்தேன். இந்த வருடம் முடியும் தருவாயில் ஏதோவொரு மூலையில் சோர்வுகள் ஆட்கொள்ளச் சுருங்கியிருந்த சமயம் இக்கதை மிகப்பெரிய மனத் திறப்பைத் தந்தது. இக்கதை பற்றியே நாள் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன்.
மிக நேரடியாகக் கதை ஆரம்பிக்கிறது. எளிமையான சித்தரிப்பு. ஒரு வேகமான வாசிப்பில் ஒரு கோப்பியை ஆறவிடமுன் குடிப்பதுபோல சடாறென்று முடித்துவிடலாம். ஆனால், இதன் ஆழம் மிகமிக அதிகமானது. பல்வேறு சுழிப்புகளும் சிடுக்குகளும் கொண்டது.
தன்னை வலிமையானவனாக நினைத்துக்கொள்ளும் ஆண் அகந்தையை வளர்த்துக்கொள்கிறான். அது மீறப்படும் இடங்களில் மிகவும் புண்படுகிறான். வதைப்பதில் அவனுக்குக் கிட்டும் இன்பம் அளப்பெரியது.
‘மகா’ தன் தந்தை அன்னையை வதைப்பதைப் பார்த்துவளர்ந்தவன். அன்னையின் புண்படுதலுக்காக மிகவும் வருந்தியிருக்கலாம். மார்த்தாவை மணமுடித்த போது தந்தையின் அகங்காரம் அடிவாங்குகிறது. தனக்குக் கீழ் உள்ளவன் அதை மீறிச்செல்ல அனுமதிக்கவே முடிவதில்லை.
தந்தையின் இறப்பிலிருந்து அவனின் அன்னை மீண்டுவர அவனுக்குள் இருக்கும் அகங்காரம் அடிவாங்குகிறது. அவன் எப்போதும் தன்னைப்பற்றி அக்கறைகொள்பவன். தன் அகங்காரம் வீழ்ந்து நொறுங்கத் துடிக்கிறான். அம்மாவின் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒரு சுயம் அதை விரும்பினாலும், அவனுக்குள் புதைந்திருக்கும் மற்றொரு சுயம் அதை விழுங்கி “நீ தோற்றுப்போய்விட்டாய்” என்று அலறுகின்றது. வதைப்பதில் இருக்கும் இன்பம் கிடைக்காமல் போக வீழ்ந்து சுருளும் இடம் அது. தற்போதைய மனைவி ஜானகியால் அவனின் அவஸ்தையைப் புரிந்து கொள்ளவே இயலவில்லை. பெரும்பாலான இயல்பான பெண்களுக்கு ஆண்களைப் புரிந்துகொள்வதில் எப்போம் சிக்கலே.
மார்த்தாவினால் எளிமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. மகாவுடன் ஒரு காலத்தில் வாழ்ந்தவள் அவள். அவர்களுக்கான பிரிவுக்கான காரணம் கதையில் இல்லை. ஆனால், உள்ளது. தன் பலவீனங்களை இயல்பாகக் கண்டுகொள்ளும் பெண்களை ஆண்களுக்குப் பொதுவாக பிடிப்பதே இல்லை. மீண்டும் மீண்டும் அகங்காரம் அவர்களிடம் வீழ்வதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதன் நாடகத்தை, இறுமாப்பை வீழ்த்திவிடுகிறார்கள். இதான் நீ என்று நேரவே காட்டிவிடுகிறார்கள். அதன் உண்மைத்தன்மை சுட்டெரிக்கும். மார்த்தா மகாவினால் ஒரு போதும் வெல்ல முடியாத பெண். அவன் அகங்காரம் தோற்றுப்போகும் இடம். அதனாலேயே அவர்களிடம் மணவிலக்கு ஏற்பட்டிருக்கும்.
அம்மாவிடம் தோற்றுப்போக, அதை வென்றுசெல்ல மார்த்தாவிடம் வருகிறான் மகா. அவளால் ஒரு அசைவில் அனைத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு கோப்பியைக் கொடுத்து அவனை ஆசுவாசப்படுத்துகிறாள். இங்கே கோப்பி பெண்ணின் வலிமையோ என்று யோசிக்கத் தோன்றுகின்றது. அது அவளின் பதில்கள். ஆணின் அகங்காரம் வீழ்ந்து செல்ல ஒரு பக்கம் பெண்ணின் சமப்படுத்தல் தேவையாக இருக்கிறது. அந்த சமப்படுத்தல் தன்னையும் மீறிச்செல்லும் இடங்களில் மீண்டும் அடிவாங்குகிறான். இதுவொரு சுழல் விளையாட்டு.
தன்னால் வெல்ல முடியாத பெண்ணை வெல்ல மற்றொரு பெண்ணின் முன் மண்டியிடுருகிறான். அதன் அகங்காரத்தை வெல்ல வழிசொல்லு என்று இறைஞ்சுகிறான். இங்கே அவன் தோற்றுப்போவதை அறியவே முடிவதில்லை அவனால்.
மகா மார்த்தாவிடன் கேட்கும் மன்னிப்பு மிகமுக்கியமான இடம். வதைப்பதில் இருக்கும் இன்பத்தைப் பெறவும், அதன் அகங்கார ருசியைக் குற்றவுணர்வு இல்லாமல் அனுபவிக்க ஆணின் தீமை காற்றில் அலையும் தீ நாக்குபோல் மாறி மாறிச் சுழன்று அணையாமல் அசைந்துகொண்டேயிருக்கிறது. அதுவே இக்கதையின் தரிசனத்தனை நோக்கி இட்டுச்செல்கிறது.
ஜெயமோகன் இக்கதையை ஒரு குறுநாவலாக எழுதியிருக்கலாம். அதற்கான உச்சங்கள் எக்கச்சக்கமாக உண்டு. விரிந்திருந்தால், மற்றொரு கோணத்தில் ஆணின் தீமையை உரையாடும் கன்னியாகுமரி நாவல் போல் வந்திருக்கும்.
இக்கதை மிக நேரடியாக எழுதப்பட்ட கதை. அதுவே பொருத்தமாக இருக்கின்றது. வெகுஜன இதழில் இக்கதையைப் படித்து தீண்டப்படுபவன் எப்படியோ தடுமாறி இலக்கியத்திற்கு வந்து சேருவான் என்றே நம்புகிறேன்.
அன்பின் அனோஜன்,
ஆம், இதை ஒட்டிய கருவில் அவர் ஒரு கிரு நாவலும் எழுதியுள்ளார்,
வாசிதிருபீர்கள் என்று நினைக்கிறேன்.
கன்யாகுமரி
குறு நாவல்
ஆம் வாசித்திருக்கிறேன். இக்கட்டுரையிலும் அதைக் குறிபிட்டுள்ளேன். //விரிந்திருந்தால், மற்றொரு கோணத்தில் ஆணின் தீமையை உரையாடும் கன்னியாகுமரி நாவல் போல் வந்திருக்கும்.//