அனோஜன் பாலகிஷ்ணனின் “அவள் அப்படித்தான் திரைப் படமும் பெண்களின் மீதான கழிவிரக்கமும்” என்கின்ற முகநூல் பதிவின் மீதான விமர்சனக் குறிப்பு.
பெண்ணுக்கும் ஆணுக்குமிடையிலான வேறுபாடுகள் பால் ரீதியானதே.மாதவிடாய் மகற்பேறு போன்ற விடயங்கள் பெண்களின் உயிரியில் ரீதியான ஒரு செயற்பாடாக இருக்கின்றது. பெண்கள் இவ்விடயங்களைச் சாதாரணமாகக் கடந்து செல்லாமல் வெளிப்படுத்துவதும் எழுத்தில் பதிவிடுவதும் இவ் விடயங்களைப் பெரிதுபடுத்தி கழிவிரக்கம் உண்டுபண்ணி சலுகைகளை பெற்றுக்கொள்ள விளைவதாகும். இவ்வாறான செயல்கள் பெண்களை மேலும் ஒடுக்கும் நிலையிலேயே வைத்திருக்கும். பிரசவத்தின்போது பெண்கள் ஆண் துணையின் ஆதரவை எதிர்பார்ப்பதும் கழிவிரக்கம் பெற்றுக்கொள்தற்காகவே. பிரசவத்தின்போது துணைவர் அருகிருப்பதும் ஆதரவுகொடுப்பதும் தனிப்பட விருப்பமேயன்றி இதில் ஆணாதிக்கம் இல்லை என்பதுதான் இப் பதிவு முன்வைக்கும் வாதங்களாகும்.
மேற்குறிப்பிட்ட வாதங்களை ஆராய்வதற்கு முன்னர் இங்கு பாவிக்கப்பட்டிருக்கும் சொல் தவறானது என்பதனைச் சுட்டிக்காட்டவேண்டியிருக்கின்றது. கழிவிரக்கம் (repentance. remorse) என்பது “செய்த தவற்றிற்கு வருந்துவது”. என்கின்ற அர்த்தத்தினைக் கொண்டிருக்கிறது. மாதவிடாய் மகற்பேறு உயிரியல் செயற்பாடுகள்தான் என்றால் அவற்றினால் ஏற்படும் வலிகளுக்குப் பெண்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்? யார் இங்கு தவறிழைத்தவர்கள்? பாதிக்கபட்ட நிலையில் வாழும் பெண்கள் தமது துன்பங்களை வெளிப்படுத்துவது எப்படிக் “கழிவிரக்கமாகலாம்?”
ஆணுக்கும் பெண்ணுக்கு இடையில் வெறும் பால் வேறுபாடுதான் உண்டு என்பதை இன்றை ஆணாதிக்க கட்டமைப்பில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆயினும். இந்த விவாதத்தைப் பின் தள்ளி முதலில் இவர் கூறும் பால் வேறுபாடுதான் என்று வைத்துக்கொண்டு இங்கே முன்வைக்கப்பட்டிருக்கும் வாதங்களைப் பார்ப்போம்.
பெண்களின் பெரும்பகுதிக் காலத்தினை மாதவிடாயும் மகற்பேறும் ஆட்கொண்டிருக்கின்றது. பெண்களின் வாழ்வில் தினமும் கூடவே பயணக்கும் ஆண்கள் (அப்பா சகோதரன், துணைவன், காதலன்) இவ் விடயங்களை எவ்வாறு புரிந்துக்கொண்டிருக்கின்றனர்?
பெண்கள் மாதாந்தம் அனுபவிக்கும் மாதவிடாய் மூலம் ஏற்படும் இரத்தப்போக்கு மூன்று நாட்கள் தொடருவதும் சிறிது வலிப்பதும் என்று மட்டுமே பலர் தெரிந்துகொண்டிருக்கின்றார்கள். வலிகள் ஏதும் இல்லாமலும் மூன்று நாட்கள் மட்டும் மாதவிடாயைக் சில பெண்கள் கடந்துசென்றாலும் ஏனைய பெண்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பது பெரும்பாலான ஆண்கள் தெரிந்து கொள்ள முயல்வதில்லை என்பதுதான் உண்மை.
பெண்களின் வாழ்வில் சக மனிதர்ளாக இருக்கும் ஆண்கள்(யாராக இருப்பினும்) தமது சக தோழிகள், உறவுகள் தொடர்சியாகப் பாதிக்கப்படும்போது துணை நிற்பது இவர்களது பொறுப்பில்லையா?
தமக்கும் இவற்றிற்கும் சம்மந்தமே இல்லாதது போன்று நடந்துகொள்வது எந்த வகையில் நியாயமானது?
மாதவிடாய் மகற்பேறு இரண்டுமே எமது சமூகத்தின் மனித மறு உற்பத்தியோடு தொடர்புடையது என்பதால் ஆண்களும் சரிபாதி பொறுப்பை எடுத்துக்கொள்வது அவசியமில்லையா?
மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம். இரத்தப்போக்கும்(சிலருக்கு 15 நாள் வரையில் தொடரும்) உடலை மிகவும் பலயீனமடையச் செய்வதுடன் பல்வேறு வகையாக சிக்கல்களைக் கொடுக்கின்றது. மாதவிடயாய், கர்ப்பம், மகப்பேறு போன்றவற்றால் பல பெண்கள் இரும்புச் சத்து குறைந்து பாதிக்கப்பட்டுள்ளனர். எத்தனை பெண்கள் உளவியல் சார்ந்த சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்? இந் நிலையில் குடும்பங்களில் போதிய ஆதரவும் அரவணைப்புகள் கிடைக்கின்றனவா? என்றால் இல்லை.
பெண்கள் தங்கள் உடல் உளச் சிக்கல்களை சமாழித்தவாறு வழமையாக வீட்டுக் கடமைகளை நிறைவேற்றி வருவதனால் மாதவிடாயை “சாதாரணம்: என்றே குடும்பங்களில் ஆண்கள் கருதுகின்றனர். எந்த வலிகளையும் புரிந்துகொள்வதற்கான முயற்சியும் எடுப்பதிலும் அக்கறை கொள்வதில்லை. இதற்காக பிரதான காரணங்கள்:
1. புரிந்துகொள்ளாமல் இருப்பது தப்பித்தலாகும். தாம் பொறுப்புக்களை பகிர்ந்துகொள்ளவேண்டியிருக்கும் என்பதனால் புரிந்துகொள்ள முயல்வதில்லை.
2. பெண்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளற்றவர்களாக, ஆண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டியவர்களாக, ஆண்களின் சொத்துடமையாகக் கருதப்படுதல்
எவ்வகையான சிக்கல்கள் இருப்பினும் பெண்கள் தங்களை வருத்தியேனும் ஆண்களுக்குத் தனிப்படவும் குடும்பத்தில் ஏனையவர்களுக்கும் கடமைகளைச் செய்ய வேண்டியவர்கள் என்கின்ற ஆணாதிக்க மனநிலையிலிருந்து பெண்ககளின் துன்பங்களைக் கணக்கிலெடுப்பதில்லை.
உடல் வலிகள், உளச் சிக்கல்களுடனும் குழந்தைகளுக்கும் முழுக் குடும்பத்திற்மான அனைத்துத் தேவைகளையும் நிவர்த்திசெய்யவெண்டிய நிலையில் இருக்கும். பெண்களுடன் கூடவே வாழும் ஆண்கள் குறிப்பிட்ட இந்தக் காலத்திலாவது பெண்களுக்கு உடல் உள ஆதரவுகளை வழங்குகிறார்களா என்றால் இல்லை.
குறிப்பிட்டளவு நேரம் மட்டுமே வெளியில் வேலைக்கும் செல்லும் ஆண் வீட்டிற்கு வந்ததும் பெண்களால் பணிவிடை செய்யப்பட்டு ஓய்வெடுக் முடிகின்றது. வீட்டில் இருப்பவர்கள் ஓய்வேதுமின்றி மாதவிடாய் கர்ப்ப காலங்களிலும் தொடர்சியாக உடல் உழைப்பை வழங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இவ்வாறன காலங்களிலும் ஓய்வு கிடைக்கின்றதா? இல்லையே. ஆணக்கும் பெண்ணுக்குமாக இடங்கள் இங்கே ஒதுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான விடயங்கள் ஆண் நலனை மையங்கொண்டே நடைபெறுகின்றன.
இவர் முன்வைக்கும் இன்னொரு கருத்து பிரசவவேளையில் ஆண்கள் தமது துணைவிமாருக்கு ஆதரவாக இருப்பது ஒவ்வொருத்தருடைய தனிப்பட்ட விருப்பம் என்பதாகும் இருவர் மனமொத்து குழந்தைபெறுவதற்காக முடிவை எடுக்கின்றபோது அதற்கான முழுப் பொறுப்பும் இருவருக்குமானது. பெண்; தனது உடல், மனம், உயிர், நேரம் அனைத்தையும் முதலாகக்கொண்டு சமூகத்திற்கு அவசியமான மனித மறு உற்பத்திக்காகவும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்குமாகவே பிள்ளையச் சுமந்து பெற்றெடுக்கின்றாள். இதற்காக முழு ஆதரவையும் ஆண்கள் குடும்பத்தில் ஒருவராகவும் சமூகத்தின் சக மனிதராகவும் செய்ய வேண்டடியது கடமையல்லவா?
இது ஒவ்வொருவரருடைய உறவு நிலை சார்ந்தது அல்லது அன்பு சார்ந்தது என்று கூறுவது பொறுப்புகளிலிருந்து தப்பித்துகொள்வதாகும். ஒரு ஆணுக்கு குடும்பத்தில் சாதாரண சுகயீனம் ஏற்படும்போது முழுக் குடும்பமும் அதனைக் கவனத்தில் எடுத்து ஆதரவு கொடுக்கின்றபோது பெண்களின் கர்ப்பம் எவ்வளவு தீவிரமான விடயமாக இருக்கின்றது. குறைந்த பட்சம் மனிதாபிமானத்துடனாவது நடந்துகொள்ளலாமே. இவ்வாறான நிலமைகளில்தான் பெண்களுக்கு கூடுதலான ஆறுதல் தேவை எ;னபதைப் இனியாவது புரிந்துகொள்வார்களா?
மேலும் அனோஜன் எடுத்திருக்கும் உதாரணங்கள் பொருத்தமற்றவை. அவர் ஒரு எதிர்ப்பால் உறவையும்(heterosexual relationship) ஓரினச் சேர்க்கையாளர்களினது உறவையும்(homosexual relationship). ஒப்பிட்டுள்ளார். இவ்விரு உறவுகளையும் ஒப்பிடுவதே தவறு. இந்த இரண்டு வகையான உறவுகளுமே வேவ்வேறு மதிப்பீடுகளையும், சமத்துவமற்ற பால்நிலைகளையும், அதிகாரப் பகிர்வுகளையும், உரிமைகளையும் கொண்டிருக்கின்றன.
எதிர்ப்பாலார் உறவில் ஆண் தனது விந்திலிருந்து உருவாகும் பிள்ளை என்பதால் தனது சொத்துரிமை கொண்டாடும் மனநிலையுடன் அணுகுகின்றான். ஆனால் ஒரே பால் உறவில்(பெண்-பெண்) விந்து வெளியில் இருந்து பெறப்படுகின்றது. இது இரு வேறு சொத்துரிமை பற்றிய மனநிலைகளையும் கொண்டிருக்கின்றது.
எதிர்ப்பால் உறவைப் பொறுத்தவரையில் ஆண் தனது எதிர்காலச் சந்ததியை உருவாக்கி பிள்ளையைப் பெற்றுத் தரும் இயந்திரமாகவே பெண்ணைக் கருதுவதாலும், அடிப்படையில் ஏற்கனவே நிலவும் ஏற்றத் தாழ்வுகள் காரணமாகவும் கர்ப்பம் தரித்திருக்கும் காலங்களிலும் பிள்ளை பெற்றெடுக்கும் சர்தர்ப்பங்களிலும் தனக்கும் இவற்றிற்கும் சம்மந்தமற்றதுபோன்று நடந்துகொள்கிறான். ஆனால் தனது துணைவியை இந்த வகையாக அணுகாமல் சக உயிராகக் கருதி அவள் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிப்பார்களாயின் இவ்வாறான கேள்விக்கே இடமிருக்காது. எமது யாதார்த்த வாழ்வனுபவங்களில் லெஸ்பியன் தம்பதிகள் இவ்விடயத்தில் எதிர்ப்பாலாரைவிட மிகவும் புரிந்துணர்வுடன் நடந்துகொள்கின்றனர் என்பது எமக்குத் தெரிந்தது. இதற்குக் காரணம் ஒரு பெண்ணின் வலியையும் பிரச்சினைகளையும் இன்னொரு பெண்னால் இலகுவில் புரிந்துகொள்ள முடிகின்றது என்றே கருதுகின்றேன்.
பெண்கள் ஏன் இத்தகைய துன்பங்களை வெளிப்படுத்த வேண்டும்? எழுதவேண்டும்?
ஆண் அடக்குமுறை பற்றி அல்லது பெண் விடுதலை வேண்டுமென்று உரையாடுகையில் ”பெண்களுக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது?” “உங்களுக்கு ஏன் விடுதலை?” என்று தமது ஆண் நலன்களிலிருந்து சிறிதும் பெண்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளாமல் கேட்கப்படுகின்றது. அதே வேளை தாம் பெண்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்கின்றோம் என்று கூறி தாங்கள் பெண்விடுதலை பற்றி பெண்களுக்கு வகுப்பெடுப்பதும் புத்தி சொல்வதும் ஆணாதிக்க மனநிலைகளன்றி வேறென்ன? இந்த இரண்டு வகையினரும் பெரிதளவில் முரணான கருத்துக்களை சொல்லவில்லை. ஏதோ ஒரு வகையில் பெண்விடுதலைக்கு எதிராகவே இயங்குகின்றனர்.
பெண்கள் மாதவிடாயினால் ஏற்படும் வலிகளை ஏன் வெளிப்படுத்த வேணடும்? என்பதுவும் இதைப் போன்றதுதான்.
எமது சமூகத்தில் தமது உணர்வுகளை வெளிப்படுத்த ஆண்களுக்கு முழுச் சுதந்திரமும் இருக்கின்றது அவர்களால் காமம் காதல் கோபம் பற்றி குடும்பங்களிலும் பொதுவெளியிலும் எழுதவும் பேசவும் அனுமதியுண்டு. ஆனால் பெண்களில் குரல் வளைகள் நசுக்கப்பட்டேயிருக்கின்றன. இலக்கியத்திலும் பொது வெளியிலும் பெண்ணுடலை தமது விருப்பங்களுக்கும் இரசனைக்கும் ஏற்ப சித்தரிக்கவும் தாழ்த்தவும் துன்புறுத்தவும் முடிகின்றது. இவை பற்றி பெணகளால் கேள்வியெழுப்பப்படுகின்றபோது அது தங்களின் உரிமை என்றும் பெண்களின் மீதே குற்றம் சுமத்தப்பட்டும்(உடை சரியாக அணியவில்லை, திமிராகப் பேசினாள்) என்று நியாயப்படுத்த முடிகின்றது. எமக்குச் சொந்தமான எமதுடலை நாம் உரிமை கொண்டாட முடியாதா? எமது வலிகளை நாம் சொல்லாமல் யார் சொல்வதாம்.
பெண்கள் தமது வலிகளைச் சொல்வதனால்தான் சலுகைகைளை அல்ல தமக்கான உரிமையையே எடுத்துக்கொள்கின்றனர். எழுதுவதனாலாவது எமது துன்பங்களைப் புரிந்துகொள்வார்கள் என்பதுதான் பெண்களின் ஆதங்கம். எழுதுவதால் சிறிது மன விடுதலையும் கிடைக்கின்றது.
இலக்கியத்திலும் பொது வெளியிலும் நிலைகொண்டிருக்கும் தமது அதிகாரம் இல்லாமற் போய்விடுமோ என்கின்ற அச்சத்தாலேயே இவ்வாறாக கருத்துகளை முன்வைத்து பெண்கள் பிரச்சினைகளைத் திசைதிருப்ப முனைகின்றனர்.
பெண்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வாதாக பாவனை செய்துகொண்டு பெண்களின் பிரச்சினைகளைக் குறைத்து மதிப்பிடுவதும், பெண்களின் உரிமைகளை மறுப்பதற்கும் மாறாக, ஆணாதிக்கத்தைப் புரிந்துகொள்வதிலும், நீண்ட காலங்களாக அனுபவித்துவரும் நலன்களிலிந்து விடுபடுவதற்கும், சலுகைகளை விட்டுக்கொடுப்பதிலும், சக மனிதர்களாக ஏற்றுக்கொள்வதிலும்,, அதிக முயற்சி எடுப்பது பயனுள்ளதாக அமையும்.
நிரூபா ஆயிலியதின் விமர்சனக் குறிப்புக்கான என் எதிர்வினை
நன்றி நிரூபா ஆயிலியம் உங்கள் நீண்ட எதிர்வினை பதிவுக்கு,
கழிவிரக்கம் என்ற சொல்லின் பின்னான அர்த்தத்தை “செய்த தவற்றுக்கு வருந்துவது” என்ற பொருள்பட எடுத்துக்கொள்வதில் சிக்கலே இருக்கிறது. அதாவது குற்றவுணர்வு(guilty) அல்ல. எனினும் இங்கு நான் விழிக்க விழைவது இருத்தல் சார்ந்த அடையாளத்தை மற்றொருவருக்கு அனுதாபம் கொள்ளத்தக்க வகையில் முன்வைத்தல் என்பதாகும். அதாவது தனக்கு இருக்கக்கூடிய பிரச்சினையை மற்றொருவர் அவதானிக்கும் போது பச்சாத்தாபத்தைத் தூண்டும் வகையில் அதனை முன்மொழிதல் ஆகும். இங்கு உருவாகும் இரக்கம் என்பது வலிந்து உருவாக்கப்பட்டதாக இருக்கும்.
மதாவிடாய், பிள்ளைப்பேறு போன்றவற்றில் பெண்களுக்கு இருக்கக்கூடிய உடலியல், உளவியல் நெருக்கடிகளைக் கஷ்டங்களைப் புரிந்துகொள்வதில் எந்தச் சிக்கல்களும் இல்லை. இது பெண் இனத்தின் இருத்தல் சார்ந்த உடலியல் வடிவமைப்பு. மனிதக் குலத்துக்கு மட்டுமன்று இந்த உடலியல் வேறுபாடுகளும், பெண் பாலுக்கான நெருக்கடிகளும் அணைத்து உயிரினங்களுக்குத் தொடர்கின்றன. நீங்கள் குறிப்பிட்டதுபோல், ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு வகையில் இதன் வலிகளின் அளவுகள் மாறுபடலாம். இக்காலத்தில் கண்டிப்பாக மற்றொருவர் உதவவேண்டும் என்று தன் இருத்தல் சார்ந்த நிலைமைகளை முன்வைத்துக்கொண்டு ஏங்குவது அவர்கள் தனிப்பட்ட விருப்புகளாக இருக்கலாம். எனினும் இதனைப் பொதுப்படுத்த இயலாது. தன் உடலியல் இருப்பை (அது எவ்வித வலிகளாக இருப்பினும்) ஏன் குறிப்பிட்ட சில பெண்கள் கழிவிரக்கத்தின் (குற்றவுணர்வு அல்ல) ஊடாக எதிர்பார்க்கிறார்கள் என்பதே எனது கேள்வியாக இருக்கிறது.
//பெண்களின் வாழ்வில் சக மனிதர்களாக இருக்கும் ஆண்கள் (யாராக இருப்பினும்) தமது சக தோழிகள், உறவுகள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்படும்போது துணை நிற்பது இவர்களது பொறுப்பில்லையா?
தமக்கும் இவற்றிற்கும் சம்பந்தமே இல்லாதது போன்று நடந்துகொள்வது எந்த வகையில் நியாயமானது?
மாதவிடாய் மகற்பேறு இரண்டுமே எமது சமூகத்தின் மனித மறு உற்பத்தியோடு தொடர்புடையது என்பதால் ஆண்களும் சரிபாதி பொறுப்பை எடுத்துக்கொள்வது அவசியமில்லையா?//
இங்கு எழுப்பப்படும் கேள்விகளை நான் இவ்வாறு நோக்குகிறேன். இங்குப் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளின் போது துணை நிற்பது, அவர்களைச் சார்ந்து இருக்கும் நபர்களின் அன்பு நிலை சார்ந்தது. இதனை ஒரு கடமையாக (Responsibility) முன்வைக்க இயலாது. அது அவர்களுக்கு இடையிலான உரையாடல் மூலம் வளர்த்தெடுத்த பரஸ்பரம் சார்ந்த புரிதலாகவே இருக்கும். இதனைக் கடமையாக முன்வைப்பதன் மூலம் அதிகார மையமாக இயங்குகின்ற குடும்ப அமைப்பே மீண்டும் பழமையான சிந்தனையமைப்பின் மூலம் வலுப்படுத்துகின்றது.
//பெண்; தனது உடல், மனம், உயிர், நேரம் அனைத்தையும் முதலாகக்கொண்டு சமூகத்திற்கு அவசியமான மனித மறு உற்பத்திக்காகவும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்குமாகவே பிள்ளையைச் சுமந்து பெற்றெடுக்கின்றாள். இதற்காக முழு ஆதரவையும் ஆண்கள் குடும்பத்தில் ஒருவராகவும் சமூகத்தின் சக மனிதராகவும் செய்ய வேண்டியது கடமையல்லவா?.//
குடும்பத்தின் மகிழ்ச்சிக்காகத்தான் பெண் குழந்தை பெறுகிறாள் என்பதைப் பொதுப்படுத்தவும் இயலாது. அவள் தனக்காகவும், தன்னுடைய மகிழ்ச்சி,இருத்தல் என்பவற்றுக்காகவும் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். பெண்கள் பிள்ளைபெறும் கருவியா குடும்பத்தில் இருப்பதாகவும், அதற்குக் கடமை ரீதியில் ஆதரவு கொடுத்து அதனை ஊக்குவிக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்றே இவ்வாறான கருத்துகள் நிறுவ முயலுகிறது. இது அபாயகரமானது.
//ஒரு ஆணுக்குக் குடும்பத்தில் சாதாரணச் சுகயீனம் ஏற்படும்போது முழுக் குடும்பமும் அதனைக் கவனத்தில் எடுத்து ஆதரவு கொடுக்கின்றபோது பெண்களின் கர்ப்பம் எவ்வளவு தீவிரமான விடயமாக இருக்கின்றது. குறைந்த பட்சம் மனிதாபிமானத்துடனாவது நடந்துகொள்ளலாமே. இவ்வாறான நிலமைகளில்தான் பெண்களுக்குக் கூடுதலான ஆறுதல் தேவை என்பதைப் இனியாவது புரிந்துகொள்வார்களா?//
இங்கு ஆண்கள் சுகயீனம் அடையும்போது, அதனைக் கவனிப்பவர்கள் கடமை சார்ந்து இயங்கத் தேவையில்லை. அது அவர்களின் மேல் இருக்கும் அன்பு நிலையில் தங்கியிருக்கும் ஒன்றாகவே இருக்கவேண்டும். அதேபோல் பெண்களின் சுகயீன, கர்ப காலங்களில் கவனம் எடுத்துக்கொள்ளல் அவர்களின் அன்பு நிலை சார்ந்ததுதான். நிர்ப்பந்திக்க முடியாது. கர்ப்ப காலங்களில் அனைத்துப் பெண்களும் இன்றைய உலகமயமாதல் சூழலில் கூடுதலான ஆறுதல் தேவை என்று ஏங்குவதாகச் சொல்வது புதுப்பிக்கப்படதாத சிந்தனை என்றே சொல்வேன் .(இன்று தன் உடல் மீது குடும்பம் என்கிற அதிகாரம் நிகழ்த்தும் நிர்ப்பந்திக்கப்பட்ட கடமைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, தன் இருத்தலை ஏற்றுக்கொண்டு கம்பீரமாக வாழும் பெண்கள் பலர் இருக்கிறார்கள்) அதேபோல் மனதளவில் அந்த நேரங்களில் அரவணைப்பை விரும்பும் பெண்களும் இருப்பார்கள். அந்த வெற்றிடத்தை நிரப்புவது, அவர்களின் இணையின் தெரிவும், பரஸ்பர அன்பும் சார்ந்ததுமே.
//எதிர்ப்பாலார் உறவில் ஆண் தனது விந்திலிருந்து உருவாகும் பிள்ளை என்பதால் தனது சொத்துரிமை கொண்டாடும் மனநிலையுடன் அணுகுகிறான்.//
இவ்வாறாகப் புரிந்து வைத்திருப்பதும், அதனை வெளிப்படுத்துவதும் சிக்கலுக்கு உரியதே. இங்குச் சொத்துரிமையைக் கொண்டாடும் நோக்கில்தான் ஆண் குழந்தை பெறுகிறான் என்பதெல்லாம் மிக மேலோட்டமான ஒற்றைபடப் புரிதல். ஆணின் மகிழ்ச்சியும், சுய திருப்தியும் அதிலிருக்கலாம். அது தனிப்பட்ட குணநலன், விருப்புச் சார்ந்தது.
//எமது யதார்த்த வாழ்வனுபவங்களில் லெஸ்பியன் தம்பதிகள் இவ்விடயத்தில் எதிர்ப்பாலாரைவிட மிகவும் புரிந்துணர்வுடன் நடந்துகொள்கின்றனர் என்பது எமக்குத் தெரிந்தது. இதற்குக் காரணம் ஒரு பெண்ணின் வலியையும் பிரச்சினைகளையும் இன்னொரு பெண்ணால் இலகுவில் புரிந்துகொள்ள முடிகின்றது என்றே கருதுகின்றேன்//
பெண்களால் பெண்களின் பிரச்சினைகளை இலகுவில் புரிந்துகொள்ள முடியும். ஆண்களால் அவ்வாறு புரிந்துகொள்ள முடியாது என்று சொல்வது எல்லாம் வெறுமே சமூகத்தில் உலாவும் பொதுக்கருத்து. இங்கு எவரையும் எவரும் முற்றிலும் புரிந்துகொள்ள இயலாது என்பதே உண்மையாக இருக்கிறது. பெண்களின் மனதைப் பெண்கள்தான் புரிந்துகொள்ளலாம் என்று எல்லாம் கிடையாது. கட்டற்ற அன்பும், பரஸ்பர உரையாடலும் அதனைத் தீர்க்கும். இங்குக் காதல்தான் எல்லாம். லெஸ்பியன் உறவில் எத்தனையோ முறிவுகள் வந்திருக்கின்றன. எல்லா லெஸ்பியன் உறவும் வெற்றியும் இல்லை. இணையில் அதிகாரப் பிரயோகம் என்பது பால் நிலை சார்ந்ததும் இல்லை. ஒருபால் உறவில்கூட ஒருவர் அதிகாரம் செலுத்தும் நிலையே இருக்கிறது. (Blue is the warmest colour திரைப்படம் பார்க்க. இவ்வாறான சித்தனையை வலுப்படுத்த உதவும்). இக் கருத்தை ஆண் ஓரினச்சேர்க்கை உறவோடும் சேர்த்து யோசிப்பதன் மூலம் அதன் தர்க்க பிழைகளை ஆராயலாம்.
//எமது சமூகத்தில் தமது உணர்வுகளை வெளிப்படுத்த ஆண்களுக்கு முழுச் சுதந்திரமும் இருக்கின்றது அவர்களால் காமம் காதல் கோபம் பற்றிக் குடும்பங்களிலும் பொதுவெளியிலும் எழுதவும் பேசவும் அனுமதியுண்டு. ஆனால் பெண்களில் குரல் வளைகள் நசுக்கப்பட்டேயிருக்கின்றன.//
உண்மைதான். இதை உடைத்துக்கொண்டு பெண்களே வரவேண்டும். பெரும்பாலான பெண்கள் சமூகம் கட்டுவித்த அமைப்பின் உள்ளே இருந்துகொண்டே அதன் அடக்கு முறைகளுக்கு எதிராகப் பேச வருகிறார்கள். செயலில் அவை இருப்பதில்லை. உடனே செயலில் இறங்குவதற்கான கஷ்டம் பற்றிப் பாடம் எடுக்கப் பலர் வருவார்கள். உண்மையில் எமது காலச்சரம் கொடுத்த சொகுசுத்தனத்தில் இருந்துகொண்டு பேசுவது எளிது. அனைத்துக்கும் சமூகக் கட்டமைப்பைச் சாடிவிட்டு இருக்கலாம். பெண்கள் அதிகாரம் செலுத்தும் குடும்ப அமைப்பை உதறவேண்டும். அந்த அமைப்புக்குள் இருந்து கொண்டு, அங்கு நிகழும் ஒடுக்குமுறையின் துன்பங்களை அனுபவித்துக்கொண்டு, அந்த துன்பத்திற்கு ஆதரவு திரட்டும் கழிவிரக்க உற்பத்தியை நிறுத்திவிட்டு எழுந்து வரவேண்டும்.
//எமக்குச் சொந்தமான எமதுடலை நாம் உரிமை கொண்டாட முடியாதா? எமது வலிகளை நாம் சொல்லாமல் யார் சொல்வதாம்.//
நிச்சயம் முடியும். யார் வலிகளையும் யாரும் சொல்லலாம். ஆனால் அதனை முன் வைக்கும் விதம் மீண்டும் குடும்ப அமைப்பை வலியுறுத்தும் வண்ணமும், அடைக்கலத்துக்கு ஏங்கும் விதமுமாக இருப்பதையே அசூசையாக நோக்க வேண்டி இருக்கிறது. இந்த ஏங்குதலுக்கு ஆறுதல் அளிக்க வருபவர்கள் செலுத்தும் அதிகாரம் இன்னும் ஒடுக்குமுறையைக் கூட்டும் வகையிலே இருக்கிறது. பெண்களை மென்மையின் வடிவாகச் சித்தரித்தல், பெண்களைப் பொத்திப் பொத்தி வைத்தல் என்பதை அது நியாயப்படுத்துகிறது. கழிவிரக்கம் கோரும் படைப்புகளும் அவ்வாறான சித்தரிப்புகளை நியாயப்படுத்தி, அதற்கான அடைக்கலத்தை கோருகிறது. ஒருவகையில் அவ்வாறான text களின் பாடுபொருளும் அதையே விழிக்கிறது. இந்தச் சிந்தனை முறையில் மாற்றம் வேண்டும் என்பதே என் கோரிக்கையாக இருக்கிறது. பெண்கள் அவர்களுக்கே என்று தனித்த இயல்புகளும் தடைகளும் உடல் ரீதியான வேறுபாடுகளும் கொண்டவர்களாகவும் அதேநேரம் சமத்துவமும் சுயமரியாதையும் கொண்டவர்களாக அணுகப்பட்ட வேண்டியவர்கள்.
//பெண்கள் தமது வலிகளைச் சொல்வதனால்தான் சலுகைகளை அல்ல தமக்கான உரிமையையே எடுத்துக்கொள்கின்றனர். எழுதுவதானாலாவது எமது துன்பங்களைப் புரிந்துகொள்வார்கள் என்பதுதான் பெண்களின் ஆதங்கம். எழுதுவதால் சிறிது மன விடுதலையும் கிடைக்கின்றது.//
மனவிடுதலைக்காக எழுதுகிறேன் என்பதெல்லாம் சால்ஜாப்பு. இலக்கியம் என்பது மன விடுதலைக்காக எழுதும் ஒன்றல்ல என்பதே என் புரிதலாக இருக்கிறது. இலக்கியம் என்பது கற்பனை இன்பத்தை அளித்து, அதில் ஒரு உள்ளக கண்டடைதலை நிகழ்த்துவது. விடுதலை மனநிலையில் எழுதுபவர்களால் இந்தத் தரத்தை அடைய முடிவதில்லை என்பது என் அவதானமாக இருக்கிறது.
இப்பதிவின் ஒட்டுமொத்த எதிர்வினை, குடும்ப அமைப்பையும் அதன் அதிகாரங்களைக் கடமை மூலம் பலப்படுத்த வேண்டும் என்ற தொனியிலே உள்ளது. இதுவரையுள்ள குடும்ப அமைப்பில் அவரவர் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கொடுக்கப்படுவதில்லை. முக்கியமாக பெண்களுக்கு. இங்கு நான் சுட்டும் “கடமை” என்ற சொற்பதத்துக்கு பொறுப்புகள் என்ற சொல்லைக்கொண்டும் அர்த்தப்படுத்தலாம். எனினும் பொறுப்புகள் அதிகாரங்களை உருவாகும். அது மீண்டும் சுழற்சி முறையிலான அடக்குமுறையை உண்டுபண்ணும். இது ஆணாதிக்கச் சிந்தனையின் தொடர்ச்சியே. பெண்கள் இதற்குள் சிக்குண்டாமல் எழுந்து வரவேண்டும். மிகத்தைரியமாகத் தன் இருப்பை ஏற்றுக்கொண்டு.
இறுதியாக, பெண்கள் தமது வலிகளைச் சொல்வதனால்தான் சலுகைகளை உருவாகிக் கொள்கிறார்கள் என்ற முடிவுக்கு வரத் தேவையில்லை. வலிகளை பாடும் விதத்தில் ஏன் தங்களைத் தாழ்த்தி கலாச்சார, அதிகார குடும்ப அமைப்பின் அடக்குமுறையினை கழிவிரக்கத்தின் ஊடக கோரவேண்டும்? அதனை உடைத்துக்கொண்டு தன் இருப்பை முன்வைத்து ஆணாதிக்க மனநிலையை கட்டுடைக்க வேண்டும். அதுவே என் அவள் அப்படிதான் திரைப்படம் மீதான என் கட்டுரையின் சாரமாக இருகின்றது.