உடல் உறவுடன் சேர்ந்து வாழ்தல் என்பது ஆண்-பெண் என்ற இரு பாலினத்திற்கு உரித்தான ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்தாலும், இன்று உடலுறவுடன் சேர்ந்து வாழ்தல் என்பது பால் நிலை கடந்ததாகவே பார்க்கப்படுகின்றது. அதாவது உடல் உறவு சார்ந்த உறவு என்பது பால் நிலை(Gender) கடந்ததாகவுள்ளது. ஆணோ அல்லது பெண்ணோ தனக்குப் பிடித்த ஆணுடனோ, பெண்ணுடனோ, திருநங்கையுடனோ,திருநம்பியுடனோ உடலுறவு வைத்துக் கொள்வதுடன் சேர்ந்தும் வாழலாம். அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை மேலைத்தேய நாடுகளில் உருவாகிவருவதுடன், அதனை ஒட்டிய விவாதங்கள் கீழைத்தேய நாட்டில் விவாதிக்கப்படவும் செய்கின்றன. பாலின சமத்துவம் குறித்த உரையாடலுடன் sex சார்ந்த உரையாடலும் சிறிய வட்டங்களில் விரிவாக்கப்படுகின்றன.
“Blue Is the Warmest Color” என்கிற பிரெஞ்சு திரைப்படம் பெண்ணுக்கு மற்றொரு பெண்ணின் மீது உருவாகும் காதலையும் அவர்களின் உடல் உறவு சார்ந்த அந்தரங்கத் தேடலையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். சுருக்கமாக லெஸ்பியன் உறவு நிலைச் சிக்கலை பேசும் திரைப்படமாகக் குறிப்பிடலாம்.
அடேல் என்கிற பெண், நீல நிற தலைச்சாயம் பூசிய இமா என்கிற பெண்ணைச் சந்திக்கும்போது அவளின் வாழ்வு முற்றிலும் மாறுகின்றது. அவர்களுக்கு இடையில் அன்பும் காதலும் விரித்து சரீர உறவும் உருவாகிறது.
இமா, ஓவியர். கலையின் மீது தீராத தாகம் கொண்டவள். அடேல் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு சிறார்களுக்குக் கல்வி புகட்டும் பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரிய பிரியப்பட்டு, அவ்வாறான பாடசாலை ஒன்றில் பணிபுரிய ஆரம்பிக்கிறாள்.
அடேலுக்கு ஏற்கனவே ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கம் இருந்தாலும் அந்த உறவு அவர்களுக்குள் செழுமையடையாமல் பாதியிலே அறுந்துவிடுகின்றது. அந்தத் தொடர்பு முடிய இமா மீது அடலேலுக்கு ஈர்ப்பு வலுக்கின்றது. அந்த ஈர்ப்பு முதலில் உடல் சார்ந்த கவர்ச்சியாகவே இருக்கின்றது. நீல நிற கேசமும், இமாவின் உடல் மொழியும் அவளைக் கவர்ந்து இழுக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர்கள் குமிழும் மதுபான விடுதியில் நண்பன் ஒருவனுடன் செல்லும்போது இமாவுடன் நெருங்கும் வாய்ப்பு அடேலுக்கு உருவாகிறது. அதன் பின் நட்பாகி இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழத் தீர்மானிக்கும் வரை அவர்கள் உறவு செல்கிறது. உடல் உறவில் அன்பையும் காதலையும் மாறி மாறிப் பகிர்ந்து உடல் களைத்து ஓயும் வரை தெகிட்டாமல் உடலுறவு கொள்கிறார்கள்.
இமாவின் தோற்றமும் உடல் மொழியும் ஆதிக்கம் செலுத்தும் தன்மை வாய்ந்தாதகச் சித்தரிக்கப்படுகின்றது. ஏறக்குறை பொதுப்படையான ஒரு ஆணின் பொதுவிம்பம் போல.
ஒரு இணையில் ஒருவர் அதிகாரத்தை அதிகம் பயன்படுத்தும் ஒருவராகவே இருக்க நேர்கிறது. ஆண்-பெண் உறவு நிலையிலும் சரி, ஒத்த பால் உறவு நிலையிலும் சரி ஒருவர் அதிகம் அதிகாரத்தைக் கையாள நேர்கிறது. இப்படத்தில் பாலினம் ஒன்றாக இருப்பினும் ஆளுமைத்திறன் என்பது தனிநபர் சார்ந்த ஒன்றாகவே உள்ளது. எதிர்காலச் சங்கதியின் குடும்ப அமைப்பு முறை, உறவு முறை என்பன மாறத்தான் போகிறது. தற்பால் உறவு உள்ள இணைகளின் குடும்ப எண்ணிக்கை சாதாரணமாக அதிகரிக்கும். அக்குடும்பகங்களிலும் அதிகார, ஒடுக்கு முறைகள் தோன்றும்; இங்கே அதிகாரத்தைப் பிரயோகிப்பது அதே ஒத்த பாலாகவே இருக்கும். எனவே குடும்ப உறவில் இருக்கும் அதிகார பிரயோகமும் பால் நிலை கடந்ததாகவே யோசிக்க வேண்டியுள்ளது.
ஓவியரான இமா அதிக நேரம் தன்னுடைய கலை வேலைகளிலும், சந்திப்புகளிலும் மூழ்கிவிட, தனிமை அடேலிடம் உருவாகிறது. இந்தத் தனிமை பாடசாலையில் அவளுடன் வேலை செய்யும் ஆண் நண்பருடன் சினேகிதத்தை வளர்க உதவுகின்றது. அங்கு உருவாகும் அன்பும் சரீர உறவுவரை கொண்டு செல்கிறது. இதைத் தெரிந்து கொள்ளும் இமா கடும் விரத்திக்கு உள்ளாகி அடேலை தன்னிடம் இருந்து விலத்தச் சொல்கிறாள். அவர்களின் உறவு முடிவுக்கு வருகின்றது.
அன்பு செலுத்தும் அதிகாரமும், அகங்கார எழுச்சியும் புரிந்துகொள்ளக் கடினமானவை. இலக்கியமும் கலையும் மீண்டும் மீண்டும் அந்த முரண் புள்ளிகளைத் தொட்டே உசாவுகின்றன. ஒருவரின் அன்பு விதைக்கும் அதிகாரத்திற்குள்(domination) கட்டுண்டு இருப்பது மற்றைய இணையின் நேசம், அன்பு சார்ந்தது. அதனை ரசித்து அதற்குள் கட்டுண்டு இருக்கும்போது காதலும் அன்பும் இன்னும் அவர்களுக்குள் விரீயமாகலாம், அது அவர்கள் சுதந்திரம் சார்ந்தது. சகிக்க இயலாமலோ பொறுக்க இயலாமலோ ரசிக்கும் மனநிலை உடைந்தால் எப்படியும் அந்த உறவு சிதைவடையும். பொங்கிய கடல் அலைகள் நுரைத்துவிட்டு ஓய்வதுபோல அடங்கிவிடும். இங்கு அன்பின் அதிகாரம் பற்றி நிறையவே யோசிக்க வேண்டியுள்ளது. அதிகாரம் செலுத்தாத அன்பும் இருக்கிறது; அந்த உறவுகள் வேறுவகையாக இருக்கும். அங்கிருந்து பல உரையாடல்களை நாம் ஆரம்பிக்கலாம்.
இங்கு அடேல் வேறொருவருடன் தற்காலிக உறவில் இருக்கும்போது, இமாவின் அதிகாரத்தை மீறுகிறாள். இது அவள் விரும்பி நிகழ்த்தும் ஒன்றல்ல, எனினும் தன் நலன் சார்ந்து அதைச் செய்கிறாள். பின் அதற்கு வருந்தி இமாவிடம் மன்னிப்பு கேட்ட போதும் இமாவினால் மீண்டும் அடேலை ஏற்க முடியவில்லை. இமாவின் மனம் நிறையவே புண்பட்டுவிடுகின்றது.
இங்கே கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்பது கேள்விக்கு உற்படுத்தப்படுகின்றது. ஒருவருடன் உறவில் இருக்கும் போது, நமக்கு விரும்பிய ஒருவருடன் உடல் உறவு வைக்க வேண்டிய தேவை அல்லது விரும்பம் ஏற்பட்டாலோ நினைத்த வகையில் ஈடுபட முடியாத தடைகள் இருக்கின்றன. இவற்றை ஆதிக்கம் என்று புரிந்து கொள்ளாமல், மற்றைய இணையின் அன்பு சார்ந்த ஒன்றாகவே பார்க்க வேண்டியுள்ளது. சரீர உறவில் புக விரும்பும்போது மற்றைய இணை புண்பட மாட்டார் எனின் அது சகஜமாக நிகழும். இல்லையெனில் கடுமையான புண்படுத்தலையே தரும். இந்த அன்புக்கு மதிப்பளிக்கும் போதே இணைத்திருத்தல் சாத்தியமாகிறது. இது தற்பால் உறவு விரும்பிகளுக்கும் பொருத்திப்போகிறது. பால்,இன,காலாசார வித்தியாசம் அற்ற அடிப்படை மனித இயல்பாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.
லெஸ்பியன் உறவில் இருக்கும் பெண்கள், தனியே பெண்களிடம் மட்டும்தான் கவரப்படுவதாக இல்லை என்பதைத் தெளிவாக இப்படம் சித்தரிக்கின்றது. குறிப்பிட்ட ஒரு பெண்ணிடம் மிதமிஞ்சிய காதல்,அன்பு வரும்போது அவ்வாறு ஆகின்றது. அதே சமயம் ஒரு ஆணிடம் கூட உறவு வைத்துக்கொள்ள அவள் தயாராகலாம். இங்கு ஏற்படும் உறவுகள் என்பது சக பால் கடந்த அன்பையும் காமத்தையும் ஈடு செய்யும் மனித உறவுச் சங்கிலியாகவே இருக்கின்றது.
தற்பால் உறவில் இருப்பவர்கள் மேல் பொதுவாகக் கீழ்மையான பார்வைகள் நமது சமூகத்தில் இருப்பதுண்டு. அவர்களின் கல்வித்தரம், இயங்கு வெளி தொடர்பாகக் கொச்சையான மனநிலை வளர்த்து வைக்கப்பட்டிருப்பது அதற்குக் காரணம். தற்பால் உறவு விரும்பிகள் பற்றித் தமிழ் வெகுஜன சினிமா உருவாக்கித் தந்திருக்கும் சித்திரம் அத்தகையது. இப்படத்தில் மிகுந்த யதார்த்தமாக அவர்களின் கல்வித்தரம், சிந்தனை அமைப்பு(integration) பற்றி உசத்தியான அபிப்பிராயத்தைத் தருகின்றது. சிலர் முனைவர் பட்டத்திற்குப் படிக்கிறார்கள், கலைஞர்களாக இருக்கிறார்கள். அடேல் சிறந்த ஆசிரியராக இருக்கிறார். அவர்களின் பொதுவெளி உலகம் ஆரோக்கியமான ஒன்றாகவே இருக்கின்றது.
தற்பால் உறவு விரும்பிகள் குழுநிலையாகத் தங்களுக்குள் ஓர் அமைப்பை உருவாக்கி ஒரு பெரிய குடும்பமாகவே இயங்குகிறார்கள். வார இறுதியில் சந்திக்கிறார்கள். அன்பைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.
எமது சமூகத்தில் தற்பால் விரும்பிகள் மறைந்து வாழவே நேர்கிறது. தமது விருப்பத்தை வெளியே சொல்ல இயலாத நிலையே இருக்கிறது. அவ்வாறானவர்கள் தமக்கிடையே ஒரு அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியத்தையும் சேர்ந்தே இந்த இடத்தில் யோசிக்க வேண்டியுள்ளது.
செக்ஸ் பால் நிலை கடந்த செயல்பாடாக மாறிவருவதைப் பேசுவதோடு, உறவுச் சிக்கல்களையும் விளிம்பு நிலை உரையாடல்களைப் பொதுவெளியில் இழுத்துப் பிராதனப்படுத்திப் பெரும் விவாதத்தை இப்படமும் செய்திருக்கின்றது.