ஒரு பகற்பொழுது – நந்தினி சேவியர் – 11

உணவு,உடை,உறையுள் மூன்றும்தான் மனித வாழ்க்கையின் தொடர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கின்றது. இது தனியே மனிதர்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றில்லை, மிருகங்களுக்கும் இதே உணவு,உறையுள் தான் உயிர்வாழத் தேவைப்படுகின்றன. அப்போது மனிதர்களுக்கும், மிருகத்துக்கும் என்ன வேறுபாடு என்ற சந்தேகம் வரும் அல்லவா; மனிதர்கள் இதிலிருந்து நுண்மையாக வேறுபடுகிறார்கள். அன்பும் கருணையும், அறிதலும் தான் மிருகங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுகின்றது. உயிர்வாழ்வதையும் தாண்டி ஏதோவொன்று வாழ்கையில் இருக்கின்றது அல்லவா.

                                          நந்தினி சேவியர்

நந்தினி சேவியர் எழுதிய சிறுகதையில் ஒன்று ‘ஒரு பகற்பொழுது’. அக்கதை எழுதப்பட்ட சூழலான 1974-ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்த பொருளாதாரச் சூழல் மிக மோசமான நிலையில் இருந்தது.

மிக வறுமையான சூழல் நாடு முழுவதும் பரவியிருக்கும் காலப்பகுதி; தினக்கூலியாக  வேலை செய்து வாழ்ந்து வருபவர்களுக்கு இன்னும் சிக்கலான காலப்பகுதி; பசி பசி! எங்கும் அவல ஓலமே பெருகிவருகின்றது. இந்தச் சூழலில் ஆண்கள் வேலைக்குச் சென்றிட, அவர்கள் தரும் சொற்ப ஊதியத்தில் குடும்பத்தை நடாத்த வீட்டுப் பெண்கள் பல்வேறு துன்பங்களுக்கும், அவமானங்களுக்கும் உள்ளாக நேர்கின்றது. வியாபாரிகளின், கடன்காரர்களின் தொல்லை ஒருபக்கம், பிள்ளைகளின் பசியைப் போக்கிக்கொண்டு, வளர்ப்பு பிராணிகளின் பசியையும் களைய வேண்டும்.

‘ஒரு பகற்பொழுது’ சிறுகதையில் குடும்பத் தலைவனாக இருக்கும் மாணிக்கம் கூலி வேலை செய்து தன் மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் பார்த்துவருகிறான். ஆனால், அவனுக்குத் தினமும் வேலை கிடைப்பதே அரிதாக இருக்கின்றது. ஒரு இறாத்தல் பாண் உண்பதற்குக் கிடைக்கும்போது, ஒன்பது வயதேயான மூத்த மகன் விட்டுக்கொடுத்து உண்கிறான்.

கடையில் வாங்கிய பொருட்களுக்குப் பணம் செலுத்த முடியாத நிலைமை, கடனுக்குப் பொருட்கள் வாங்கிச் சமாளிக்க, ஒரு கட்டத்தில் கடை உரிமையாளன் உரிய நேரத்தில் பணம் தரவில்லை என்று அவர்கள் வீடு வந்து மோசமாகப் பேசிவிட்டுச் செல்ல, அவமானம் தாங்க முடியாமல் தன் தோட்டை விற்றுக் கடனை அடைக்க முயல்கிறாள் மாணிக்கத்தின் மனைவி. கிடைக்கும் பணத்தில் கடனை அடைப்பதோடு, வீட்டுக்குத் தேவையான பல்வேறு பொருட்களை வாங்கத் திட்டமிடுகிறாள். ஆனால், அவளது தோட்டை நகைக்கடைக்காரன் அறாவிலைக்கு, 65 ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளுகின்றான். அதில் ரூ 64.83 கடைக்கடனுக்குப் போக 17 சதம் காசுடன் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றாள்.

அப்போது வீட்டில் இருந்த ஒரு இறாத்தல் பாணையும் நாய் தூக்கிக் கொண்டு போக, பிள்ளைகளுக்கு உண்பதற்கு உணவு கொடுக்க ஏதும் இல்லாமல் திகைத்து, விக்கிதுப்போய் நிற்கிறாள். அழுகையும் வெறுப்பும் அவளைச் சூழ்ந்து பீடிக்கிறது. பக்கத்து வீட்டு வள்ளியாச்சி ஒரு மரவள்ளிக் கிழங்கினைக் கொடுத்துப் பிள்ளைகளுக்கு உண்ணக் கொடுக்கிறாள். அங்கே அன்பும் கருணையும் விட்டுக்கொடுப்பும் எஞ்சுகிறது. அதுதான் மனித வாழ்க்கையின் ஆதார சுழற்சி என்று எண்ண வைகின்றது. அடுத்தக் கட்ட நகர்வு அதன் மூலமே தூக்கி நிறுத்தப்படுகின்றது. ஒரு சிறு உரசலில் இதனை உணர்த்திவிட்டு அக்கதை முடியும். பெண்ணின் பார்வையில் இக்கதை மென்மையான சோகத்துடன் நகர்கிறது. ஆனால், மிகையுணர்ச்சி இல்லை.

அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைச் சிறுகதைகள் ஊடகச் சித்தரிப்பதில் முக்கியமானவர் ‘நந்தினி சேவியர்’. புதுமைப்பித்தன் எழுதிய கதைகளில் இருக்கும் மனித வாழ்க்கையின் நெருக்கடி, அபத்தங்கள் போன்றே நந்தினி சேவியரின் படைப்புலகத்தில் இருக்கும் மனிதர்களின் பிரச்சினைகளையும் நோக்க இயலும். ஆனால், முற்போக்குத்தனமான முடிவுகளை அவர் தனது பல கதைகளில் செயற்கையாக நுழைத்திருப்பார். அவை பல கதைகளில் ஆயாசத்தைத் தரும். ஆனால், ஒரு பகற்பொழுது என்கிற இச்சிறுகதை கட்சிதமாகச் சிறுகதைக்குரிய கூர்மையுடன் வந்திருக்கும்.

பின் குறிப்பு

நந்தினி சேவியர்’ பற்றி மேலும் தெரிந்து கொள்ள அருண்மொழிவர்மன் எழுதிய இக்கட்டுரையை வாசிக்கலாம்.
‘ஒரு பகற்பொழுது’ சிறுகதை ‘அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ தொகுப்பில் உள்ளது. நூலகம் நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள அப்புத்தகத்தை தரவிறக்கிக்கொள்ள இங்கே அழுத்தவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *