பொரிக்காத முட்டை – பவானி – 07

வெவ்வேறு நேர இக்கட்டுகளில், சமநிலை குலைந்திருக்கும் சமயத்தில் ஏற்படும் அழுத்தத்தில் எழும் பயங்கள் மிக எளிமையான காரணங்களில் உருவாகியவைகாய இருக்கும், அவ்வாறான அழுத்தங்கள் கரைந்து போனபின் இப்படியெல்லாம் சிந்தித்து பயந்தோமா என்று நகைச்சுவையாகவே திரும்பத் தோன்றலாம். இருந்தும் அழுத்தங்கள் உருவாகும் தருணங்களில் நாம் முற்றிலும் பிறிதொருவராகவே தோன்றுவோம். அழுத்த அலைகள் ஓயும் போதே சமநிலையும் யதார்த்தமும் எஞ்சும்.

பெண்களின் உள்ளம் கர்ப்பகாலத்தில் எப்போதுமே பிறக்கப்போகும் குழந்தை பற்றிய கனவுகளில் மிதக்கும். அச்சூழலில் அவர்களின் மனம் பல்வேறு அழுத்தங்களில் இருக்கும். எல்லாம் சரியாகச் சென்று, பிறக்கப்போகும் குழந்தை எந்தவித இடர்பாடுகளும் இன்றிப் பிறக்க வேண்டும் என்பதிலே அவர்களின் சிந்தனை முழுமையாக இருக்கும். அதில் எழும் கனவுகளில் மூழ்கி எழுவார்கள். இருந்தும், அழுத்தங்கள் அதிகரிக்கும் போது தேவையற்ற சிந்தனைகளில் கூட மூழ்கி எழுந்து கவலையடைவார்கள்!

                            பவானி

ஈழத்தின் முதல்  தலைமுறை பெண் எழுத்தாளர்களில் ஒருவரான ‘பவானி ஆழ்வாப்பிள்ளை’ எழுதிய சிறுகதையில் “பொரிக்காத முட்டை” என்கிற சிறுகதை பெண்களின் பார்வையில் பெண்களின் அகப்பிரச்சனை சார்ந்த மென்மையான உணர்வுகளைச் சிறுகதையாக நிறுத்துகின்றது. புதிதாகத் திருமணமாகி கர்ப்பமாக இருக்கும் இளம் பெண்ணின் மனதில் ஏற்படும் அலைச்சல்களின் தொகுப்புதான் கதை. மிக நெருக்கமான அன்பான கணவன்; வேறு எந்தவித புறவயமான பிரச்சனைகளும் அவர்களுக்கு இடையில் இல்லை. கணவனின் பார்வையில் அவளது இயல்புகள் சிறுமிக்குரியவையாக இருக்கின்றன; அதனை வெகுவாகவே கணவர் ரசிச்கிறார். ஒரு நாள் அவள் தன் மேசை லாச்சியைத் திறந்து கணவனுடன் அதற்குள் சேமித்து வைத்த பொருட்களை நோக்குகிறாள். அவள் சிறுமியாக இருக்கும்போது சேகரித்து வைத்த பொருட்கள் அவை; நீண்ட நாட்களின் பின் அதனை மீண்டும் நோக்க அங்குச் சிறுவயதில் விளையாட்டாக ஒளித்து வைத்த முட்டை ஒன்று அம்பிடுகின்றது. அதைப் பார்த்தவுடன் அவளுக்கு ஓர் உயிரை சிதைத்துவிட்டோமே என்கிற எண்ணம் வெகுவாகக் கிளர்ந்து அவளின் அணைத்து செயற்பாடுகளையும் முடக்குகின்றது.

உண்மையில் அந்த லாச்சி என்பது; அவள் மனதின் அடியாழத்தில் புனதைந்திருக்கும் சிறுவயது ரகசியமாக இருக்கலாம், இதுவரை வாழ்ந்த வாழ்கையில் சிறுமிக்குரிய அகத்தை வெளிப்படுத்தும் ஒன்றாக இருக்கலாம். கணவனிடம் மட்டுமே அதை வெளிப்படுத்த விரும்பியிருக்கலாம்; அவளின் சிறுவயது நினைவுகளை விரித்து இருவருமாகத் துழாவும் போது கண்ட வடுவைத் தெரிந்து கொண்ட கணவனுக்கு அதில் கண்ட சிக்கல் ஒரு பிரச்னையாகவே தெரியவில்லை, இருந்தும் பிற்பகுதியில் அவளின் மன உளைச்சலின் அலைக்கழிப்பை உள்வேண்டுகிறார்.

சிறுவயதில் விளையாட்டாக அறியாமல் நிகழ்த்திய தவறுகளின் நினைவுகள் கூட கிளர்ந்து எழுந்து கர்ப்பகாலத்தில் பிறக்கப் போகும் குழந்தையின் நலன்களை பாதிக்குமோ என்று அஞ்ச வைத்து தடுமாறவைகின்றது. தாய்மையின் அன்பு எத்தகைய உருக்கமானது. தன்னையே வருத்தி சங்கதிகளின் நலன்கள் மீது ஓயாமல் கவலையடைந்து அதிலே திளைப்து!

மிக எளிமையான பிரச்சினைகளில் பெண்கள் எரிந்து விழுவதை நாம் கண்டிருக்கலாம்; அதற்குப் பின்னாலுள்ள காரணங்களை அவர்கள் பின்னணியில் ஆண்கள் யோசிப்பது குறைவு, ஆண் பெண் இருவருக்குமான சிந்தனை முறையில் நுட்பமாக வேறுபாடுகள் இருக்கும். அதை இக்கதை அதற்குரிய யதார்த்தத்துடன் தேடித் துழாவியுள்ளது.

தாய்மையின் மற்றொரு பக்கத்தை, அவர்கள் பக்கம் நின்று மென்மையின் தடுமாற்றத்தை மிகக் கூர்மையாகச் சிறுகதையில் ‘பவானி’ கொண்டு வந்திருப்பார். ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் வரிசையில் இவருக்கு முக்கிய இடமுள்ளது.

பின் குறிப்பு

பவானி ஆழ்வாப்பிள்ளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள அருண்மொழிவர்மன் எழுதிய இக்கட்டுரையை வாசிக்கலாம்.

‘பொரிக்காத முட்டை சிறுகதை’ கடவுளும் மனிதரும் தொகுப்பில் உள்ளது. நூலகம் நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள அப்புத்தகத்தை தரவிறக்கிக்கொள்ள இங்கே அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *