சந்திரிகை – முனியப்பதாசன் – 04

எதிர்ப்பாலின் மீதான கவர்ச்சி ஏதோவொரு புள்ளியில் ஆரம்பித்தாலும், அதற்கு வயது வித்தியாசம் என்பதும் கிஞ்சித்தும் இருப்பதில்லை. மிகச்சிறிய வயதிலே நமக்கு அழகானவர்களாகத் தோன்றுபவர்களை வியந்து மெய்மறந்து பார்த்திருப்போம், ரசித்திருப்போம்; ஏதோவொரு கவர்ச்சியும் ஈர்ப்பும் உள்ளிர்த்துக் கொண்டேயிருக்கும். அந்த ஈர்ப்பு எந்தவித காமம் சார்ந்த கிளர்தலையும் நகர்த்தியிருக்காது. ஆனால், எம்மை அறியாமலே அதற்குரிய ரசாயன மாற்றங்களை உள்ளுக்குள் நிகழ்த்தியும் இருக்கலாம். ஒவ்வொரு வயது படிகளிலும், நெருக்கமான உறவு இன்னுமொருவருடன் இருக்கும்போதோ அல்லது இல்லாமல் இரும்கும்போதோ ஏற்படும். இவ்வாறான எதிர்ப்பாலின் அழகுக்குள் வீழ்ந்து தேய்வது சில சில காலங்களில் மனித மனதிற்கு நிகழ்வது. அது மிக அந்தரங்கமானதும் கூட!

முனியப்பாதாசன் எழுதிய சிறுகதையான ‘சந்திரிகை’ வயது வேறுபாடுகளை மீறி, அதன் தடுமாற்றங்களுக்குள் நிகழும் மிக மென்மையான உறவொன்றின் உணர்வுகளைப் பேசுகின்றது. கதை சொல்லியின் வீட்டுக்குள் ஏறக்குறைய பதின்நான்கு வயது கொண்ட உறவினர் பெண் ஒருவர் தங்க நேர்கின்றது. அவளைக் குழந்தையாக நோக்கவே இயலுகிறது, இருந்தும் அவளின் அழகும் செழுமையும் அவரை மென்மேலும் கவர்கின்றது. அந்த ஈர்ப்பின் பின்னால் இருக்கும் அவஸ்தையையும் தடுமாற்றமும் அவரைத் திக்குமூடாக்க வைக்கின்றது. அதே நேரம் மனது ‘அவள் குழந்தை குழந்தை’ என்று சொல்கிறது. கதைசொல்லிக்கு அவளிடமும் தன் மீது ஈர்ப்பு இருப்பது தெரிகின்றது. அது வளர்ந்து வரும் சமயத்தில் “நீயொரு குழந்தை” என்று அவளிடம் சொல்லி தன் சமநிலையைப் பேணுகிறார். இருந்தும் அந்த ஈர்ப்பு இன்னும் வளராதா என்று தன்னை மீறி அவரின் மனம் ஏங்கித் தடுமாறுகிறது. மனித மனதின் சிறுமைகளையும் அதை மீறி தனக்குள் நடிப்தையும் ஒரு கட்டத்தில் அந்த நடிப்பையும் தாண்டி தன்னை இனம்கண்டு கொள்வதும் அட்டகாசமாக இச்சிறுகதையில் வருகின்றது.

muniyapathsan

             முனியப்பதாசன்

சிறிய புறவயமான சம்பவங்கள் மட்டுமே கதைகளில் வருகின்றது; அகவய உணர்வுகளே கதையில் அதிகம் நொதிக்கின்றது. இக்கதை வெளியாகியபோது மற்றைய ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் கையாண்ட நேரடி மொழிப் பிரயோகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட, அழகுணர்ச்சியையும் மனதின் இருண்ட பக்கங்களைக்கூட இலகுவில் உசாவும் ஆழமான புனைவு மொழியைக் கச்சிதமாகப் பயன்படுத்தியமை தெரிகின்றது.

சந்திரிகை சிறுகதை 1964-இல் முனியப்பதாசனினால் எழுதப்பட்டுள்ளது என்பது கடும் ஆச்சரியத்தைத் தரலாம். கொள்கைகளையும் பிரச்சாரங்களையும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட அக்காலப்பகுதியில் இக்கதையின் பேசுபொருளும், எழுத்துமுறையும் சொல் மிகைப்படாத கூர்மையும் பல அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கே வேண்டும் என்றே நினைக்கிறேன். முனியப்பதாசன் ஈழத்து சிறுகதை உலகில் மாபெரும் முன்னோடி என்பதில் சந்தேகம் இல்லை.

பின் குறிப்பு:

தாமோதரம்பிள்ளை சண்முகநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட முனியப்பாதாசன் 1944-களில் பிறந்தவர். இளம்வயதிலே சிறுகதைகள் எழுத ஆரம்பித்து மூன்றாண்டுகளில் இருபது சிறுகதைகளை எழுதியிருக்கிறார். லௌகீக வாழ்கையில் பற்றற்று ஆன்மிக வாழ்கையில் அதிகம் அலைந்தவர். தனக்குரிய வாழ்க்கையின் தேடல்களைத் தன் கதைகளின் மூலம் கண்டடையவே எழுதியவர். ஒரு கட்டத்தில் தான் எழுதிய கதைகள் அனைத்தையும் குவித்து நெருப்பு மூட்டி எரித்தார். எரியும் நெருப்பு சுவாலைகளைப் பார்த்துச் சிரித்தவாறு அமர்ந்திருந்தார் என்று நேரில் கண்டவர்கள் குறிப்பிடுகிறார்கள். மிக இளம் வயதிலே மரணத்தையும் தழுவிக்கொண்டார். பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகிய அவரின் கதைகளைச் செங்கை ஆழியான் தேடிப்பிடித்துத் தொகுத்து சிறுகதைப் புத்தகமாகக் கொண்டு வந்துளார். நூலகத் திட்டத்தின் கீழ் அப்புத்தகத்தை இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ள இயலும்.

ஈழத்து இலக்கியம் மிக முக்கிய ஆளுமைகளை இளம்வயதிலே இழந்திருக்கின்றது. பலர் மிகச்சிறந்த கதைகளை எழுதி பின் ஒரு தொகுப்போடு ஒதுங்கியிருக்கிறார்கள். சிலரை அகால மரணங்கள் தழுவியிருக்கின்றன. இவற்றின் பிரதிபலன்களைத்தான் இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியம் அனுபவிக்கின்றது என்பதும் கசப்பான உண்மை.

இச்சிறுகதை ‘முனியப்பதாசன் கதைகள்’ தொகுப்பில் உள்ளது.

‘முனியப்பதாசன் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பினை நூலகம் திட்டத்தின் கீழ்  தரவிறக்கிக்கொள்ள இங்கே அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *