புனிதம் அற்ற உறவுகள் என்று நமது சமூகத்தில் ஒதுக்கப்ட்டு இழிவாகப் பார்க்கப்படும் ஒவ்வொரு உறவுகளுக்கும் தொடுப்புகளுக்குப் பின்பும் ஒவ்வொரு உணர்வு சார்ந்த நெகிழ்வான கூரிய காரணங்களும் இருக்கும். திருமணம் என்ற ஒழுக்கு இருவருக்கு இடையிலான அன்பையும்,நேசத்தையும்,உதவிகளையும் ஒன்றையொன்று இட்டு நிரப்பும்; இருந்தும் இந்த ஒழுக்கில் சிறிய பகுதி தவறி அந்த இடைவெளி வளர அதை வேறொரு துண்டு நிரப்பிவிடலாம். இரண்டு அணுக்கள் இலத்திரன்களைப் பங்கிடுவது போல அது சட்டென்று நிகழ்ந்து விடலாம். மனித வாழ்க்கை என்பதே உடல்,உளம் மாறி மாறி இட்டு நிரப்புதலுக்குள் சுழல்வதுதானே. அவை ஒவ்வொரு காலகட்டத்திற்குரிய கலாச்சார அதிர்ச்சிகளை நிகழ்த்தும். ஆனால், இவை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. எதிர்பால் மீதான பற்றும் ஊடலும் உயிரினங்களின் ஆதார இச்சையில் முதன்மையான ஒன்றாக இருக்கின்றது.
சட்டநாதன் எழுதிய ‘மாற்றம்’ சிறுகதை அவ்வாறான உறவுச்சிக்கல்கள் சார்ந்த நெருக்கடியைச் சொல்லுகின்றது. சட்டநாதனின் கதைகள் அதிகம் கதை சொல்லியின் புறவயமான சித்தரிப்பில் நகர்பவை. பல சம்பவங்களை மையமாகக் கோர்த்து சம்பவ ஒருமையை ஏற்படுத்தும் வேலையைக் கதைசொல்லி நிகழ்த்துவார். அதனாலேயே அங்குவரும் பாத்திரங்களின் உணர்வுத் தளும்பல்களை வெளியே நின்று சொல்லும் கூறு முறையையே கதைகளில் நோக்க இயலுகிறது.
இக்கதையில் பிள்ளையற்ற மனைவியொருவர் தன் கணவரிடம் குறையிருப்பதாகச் சொல்லி குற்றம்சாட்டி தன் சிறுமைகளைக் கொட்டிக்கொண்டிருக்கிறார். அதுவொரு கசப்பான ஆறாகப் பெருகிக்கொண்டே இருக்கின்றது. ஒரு கட்டத்தில், சமூகத்தால் தாழ்த்தப்பட்டதாகச் சொல்லபட்டும் சாதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் நெருக்கம் உருவாகி,அவள் கற்பமாகிறாள். அவளின் தமயனுடன் ஏற்கனவே அவருக்குச் சாதியம் சார்ந்த முரண்பாடு இருக்கின்றது. இருந்தும் அவரில் ஏற்பட்ட உணர்வு ரீதியிலான மற்றங்கள் மற்றைய ஏனைய புறக்காரணிகள் அனைத்தையும் பொருட்டேயில்லாமல் ஆக்குகின்றது. கதையின் இறுதி முடிவுகூடச் சாதியப் பற்றைவிட உணர்வுகளும், அன்பும்தான் மிகமுக்கியமான அடிப்படைத் தேவையாக இருக்கின்றது என்பதை மைய தரிசனமாகக் காட்டிவிடுகிறது.
எந்தளவுக்கு மிக முக்கிய வெறியாகத் தோன்றுவதெல்லாம் ஒரு மாயை என்று சொல்லவும் உணர்விக்கவும், அதிகம் ஒரு சம்பவத்தை அழகுணர்ச்சியாக்க வேண்டியுள்ளது. சட்டநாதனின் நுட்பமான சம்பவ வரண்ணைகள் அவரது கதைகூறல் முறைக்கு அழகுணர்ச்சி சேர்கின்றது. சம்பவ வர்ணனைகளில் இருக்கும் சூழல் மீதான அவதானிப்பு இன்னுமொரு வகையில் அன்றைய சூழலின் ஆவணப்படுத்தலாகவும் அமைகிறது.
இக்கதையின் பேசுபொருள் மீண்டும் மீண்டும் தற்பொழுது எழுதப்பட்டு தேய்வழக்காகி விட்டாலும், இக்கதை வெளியாகிய காலப்பகுதியான 1977-ஆண்டில் ஈழத்து இலக்கியச் சூழலிலும் சரி,சமூகச் சூழலிலும் சரி ஒரு பாய்ச்சலையே தனக்குள் நிகழ்த்தியிருக்கின்றது.
இச்சிறுகதை மாற்றம் தொகுப்பில் உள்ளது.
சட்டநாதனின் ‘மாற்றம்’ சிறுகதைத் தொகுப்பினை நூலகம் திட்டத்தின் கீழ் தரவிறக்கிக்கொள்ள இங்கே அழுத்தவும்.