மொழி மானமும் தமிழ் மனநிலையும்!

எம் இனம் சார்ந்து இருக்கும் அக்கறையில் எனக்குப் பல கேள்விகள் எழுவதுண்டு. முக்கியமாக எம் இனத்துக்கு இருக்கும் தாழ்வுச் சிக்கல். அந்தத் தாழ்வுச் சிக்கலை மறைக்க எம்மிடம் எம் இனம் சார்ந்து உருவாக்கப்பட்ட வரலாற்று ரீதியான பாரிய விம்பங்கள் அறிவுரீதியாக யோசிப்பதை எப்பொழுதும் இடையூறு செய்கின்றன. அதன் வெற்றுப் பெருமிதங்கள் பேசுவதிலே பெரும்பாலான காலத்தைக் கடத்தியிருக்கிறோம்.

உலமாகயமாக்களில் அல்லது இன்னுமொரு இனத்தின் திட்டமிட்ட பண்பாட்டு அழிப்பில் எமது தமிழ் மொழியும் அடையாளங்களும் சிக்கியிருக்கும் பொழுது அதனை எப்படிப் பாதுகாப்பது என்பதை அறிவுரீதியான சிந்தனையில் நாம் எதிர்கொண்டிருக்கின்றோமா? உண்மையில் கழிவிரக்கத்தை ஏற்படுத்தும் கண்ணீர் வரவைக்கும் இனவுணர்வை வெறுமே தூண்டிவிடும் காரியங்களைத் தான் செய்கிறோம்.

இதிலிருந்து வெளியேறி அறிவுரீதியில் எவ்வாறு சிந்திக்கலாம்?

இங்கே தமிழகத்தில் வாழ்ந்த அயோத்திதாசரின் சிந்தனையை ஒட்டிச் சிந்திக்க ஆரம்பிக்கலாம்.

ஒருவர் எதில் சாதிக்கிறாரோ அதுவே அவரது மொழி என்கிறார் அயோத்திதாசர். அதாவது எந்த மொழியில் சிந்திக்கிறார், இயங்குகிறார் என்பதைப் பொறுத்தே ஒருவரது தாய்மொழி தீர்மானிக்கப்படுகின்றது என்று விளக்குகின்றார்.

இந்தச் சிந்தனை உண்மையானது தான். மொழி அடையாளம் என்பது பிறப்பால் தீர்மானிக்கப்படுவதல்ல. நாம் எந்த இடத்தில் பிறக்கின்றமோ அங்கு உயிர்வாழ எந்த மொழியில் தொடர்பாடலைச் செய்ய வேண்டுமோ அந்த மொழியையே உள்வாங்க நேரிடும். அதுதான் இயற்கை. மொழி என்பதை அடிப்படையில் தொடர்பாடலுக்கு உரியதாகவே இருக்கின்றது. அந்த தொடர்பாடல் ஊடாக திரட்டப்பட்ட அறிவு, ஞானத்தின் மூலம் பண்பாடுகள் நீட்சியடைந்து செல்கின்றது. அதனையொட்டியே மெல்ல மெல்ல பண்பாடுகளை ஒட்டிய புனிதங்களும் கட்டமைக்கப்படுகின்றன.

அயோத்திதாசர்

                   அயோத்திதாசர்

இன்று புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது பிள்ளைகள் அந்த நாட்டுக்குரிய மொழியில் அந்த மண்ணில் வாழவிடுகிறார்கள். அங்கிருக்கும் மொழிச் சூழலில் அதைத்தான் செய்ய வேண்டும். என்றாலும், தமிழ் பேசவேண்டும் எழுத வேண்டும் என்ற சுமையை பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மேல் திணித்துவிடுகிறார்கள். ஒருவர் விரும்பி ஒரு மொழியைக் கற்பது வரவேற்கப்பட வேண்டியது. ஆனால், இன உணர்வுக்காக மொழியொன்றைப் புகட்டுவது நகைப்புக்குரியது. தமிழ்தான் அவர்களது தாய் மொழி என்று சொல்வது இரத்த சம்பந்தப்படுத்தி சிந்திக்கும் செயல்பாட்டின் வெளிப்பாடு. இரந்த சம்மந்தப்படுத்தி அனைத்தையும் பார்க்கும் நெறிமுறைகளில் இருந்து விடுபடவேண்டும். எம்முடைய மரபு அந்தச் சிந்தனையில் பழக்கி இருப்பதனாலயே எப்போதும் பிரச்சினையாகவுள்ளது. அதிலிருக்கும் போலித்தன்மையை விளங்கிக் கொள்ள நமக்கு இன்னும் காலம் எடுக்கலாம். அவர் அவர்கள் சிந்திக்கவும் உயிர்வாழவும் எந்த மொழி பொருத்தமாக இருக்கின்றதோ அதிலே இயங்குவதுதான் இயல்பானது.

உயிர்வாழ்வதற்காக மொழியா? மொழிக்காக உயிர்வாழ்வதா? என்ற அடிப்படையைத் தெளிவாகப் புரிந்து கொண்டால் இன்னும் தெளிவாகச் சிந்திக்க இயலும்.

இன்று எம்மிடம் தூய்மையான தமிழ் மொழியென்று ஒன்றில்லை. பல கலப்புகள் நிகழ்ந்த தமிழ் மொழியே எம்மிடம் உண்டு. அதன் தூய்மைத் தன்மையைப் பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஏனென்றால் அதில் கலந்திருக்கும் மொழிகளின் சொற்கள் நடைமுறை வாழ்க்கையின் இலகுத்தன்மையை தொடர்பாடலில் பேண உதவுகின்றது. அதிலிருக்கும் அலாதியான சுதந்திரம் மானுடவாழ்கையின் உயிர்வாழ்தல் மீதான பற்றைக் காட்டுகின்றது. மொழியின் ஊடக உயிர்வாழ்தல் என்பதே உண்மையாக இருக்கின்றது.

உலகமயமாக்கல் என்பது வெகுவிரைவில் எல்லைகள் எங்கும் நான்கு கால்களில் விரைந்து எட்டும் புரவியாக உள்ளது. மொழியின் இருப்பை சிதைக்கும் அந்நிய பண்பாட்டின் திணிப்புகள் என்று சந்தேகம் கொள்ளச் செய்யும் நடவடிக்கைகளும் எம் முன்னே வைக்கப்படுகின்றது. இந்தச் சமயத்தில் நாம் பேசும் மொழியை எப்படிப் பாதுகாக்கலாம்?

மொழி என்பது தொடர்பாடல் ஊடகம் எனின், அந்தத் தொடர்பாடல் இதுவரையில் திரட்டித் தந்த ஞானத்தை(Wisdom) சேமித்துப் பாதுகாப்பதுதான் மொழியைப் பாதுகாத்தல் எனலாம். தமிழர்களுக்கு உரிய தொழில்நுட்டங்கள், கலைகள், இலக்கியங்கள், மருத்துவம், வானியல்சாஸ்திரம் போன்றவற்றின் அறிவுக்கூட்டுத் தொகுதியை சிதறவிடாமல் சேமிப்பதைத்தான் நாம் உண்மையில் விரைவாகச் செய்ய வேண்டும்.

சேமித்தல் என்பது வெறுமே ஆவணப்படுத்துவதில்லை. அதன் மூலத்தைத் திரட்டி பொது மொழி (உதாரணம் : ஆங்கிலம்) ஒன்றிலும் அந்தச் சிந்தனைகளை பதிவுசெய்து கடத்துவது. இதற்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும். இன்று ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்கப்படுவது மிக முக்கியமான செயல்பாடு. அங்கு நிகழ்த்தப்படும் ஆய்வுகள் இன்னும் பல திறப்புகளைத் தருவதோடு தமிழ் எனும் மொழியின் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டே இருக்கும்.

தமிழர்கள் தமக்கிடையே தொடர்பு கொண்டு உருவாக்கிய தொன்மமான ஞானத்திலே, மொழியெனும் ஆன்மா உறைந்திருக்கின்றது. வெறுமே பேச்சு வடிவத்திலோ,உரையாடலிலோ மொழி தங்கியிருப்பதில்லை. அது காலத்திற்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கப்போகின்றது. ஆனால் உள்ளுறைந்து இருக்கும் சித்தனை முறைதான் எமக்கு முக்கியமானது.

தமிழர்களுக்கு உரிய பாரம்பரியமான கட்டடக்கலை, பொறியியல் உத்திகள், மருத்துவம் போன்றவற்றை நாம் அழியவும் விட்டிருக்கிறோம். தெரிந்தோ தெரியாமலோ அபிவிருத்தி என்ற பெயரில் வீதிகள் அகலாமாக்கப்படும்போது பாரம்பரியமான மதில்கள், தூண்கள் உடைபடத்தான் போகின்றன. அந்த மதிலுக்கு, தூண்களுக்கு வயது ஓர் இருநூறு ஆண்டுகள் எனக் கொண்டால், இதற்கு முன் அந்த இடத்தில் என்ன இருந்திருக்கும் என்று நமக்குத் தெரியுமா? கடினம்தான் அதனைத் தெரிந்துகொள்ள. ஆனால், இன்று எமக்கு இருக்கும் தொழில்நுட்ப வசதியில் இன்று இருப்பதை, இருந்ததை எதிர்காலத்தில் ஒருவர் கேட்கும் போது நாம் தெளிவாகச் சொல்லக்கூடியதாக இருக்கவேண்டும். அதுதான் மொழியைப் பாதுகாப்பதாக இருக்க முடியும்.

உசாத்துணைகள்

  1. அயோத்திதாசரின் சிந்தனைகள்
  2. tdharumaraj.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *