ஈழத்து நாவல்களில் என்ன விசேடமாக இருந்துவிடப்போகின்றது என்ற பிரக்ஞை பெரும்பாலானோர்க்கு இருப்பதுண்டு. ஓலம் ஒப்பாரி கண்ணீர் மீண்டும் மீண்டும் மரணம் என்றே பேசிக்கொண்டிருக்கும். ஈழம் வலிகளினாலும் ஓலத்தினாலும் நிரம்பியது. நாம் சந்தித்த கண்ணீர் முடிவற்றது. கொடுத்த தியாகங்கள் கற்பனைக்கு எட்டமுடியாத பிரமாண்டமானவை. இவற்றின் தரவுகளும் வலிகளும் எம்மிடம் ஏராளம் உண்டு. கடந்து வந்த வாழ்க்கையினை ஏதோவொரு விதத்தில் பதித்து வரலாற்றில் ஒப்பேற்றிவிட மனம் விரும்பிக்கொண்டிருக்கும். இவற்றைக் கட்டுரைகளாக எழுதுவதிலும் பார்க்க கதை சொல்லலாக சொல்வதிலே அதிகமான தரப்பினரிடம் கொண்டு சென்று வாசிப்பவர்களின் வீச்சை அதிகரிக்க முடியும். இதனால் என்னவோ அதிகமான புனைவெழுத்தாளர்கள் ஈழத்தில் இருந்து உருவாகின்றார்கள். பெரும்பாலும் இவர்கள் எழுதுவது சாட்சி இலக்கிய வகைக்குள் (Testimony literature) அடங்கக்கூடியது. தங்களிடம் இருக்கும் கதைகளையும் வலிகளையும் எழுதிக்கடந்துவிட, அல்லது புனிதப்படுத்திவிட இடைவிடாது முயல்கிறார்கள்.
இவ்வாறு கதைகளின் ஊடாகப் பதித்த வலிகளையும் இழப்புக்களையும் எழுதுபவர் எழுதிவிட்டாலும் படிப்பவர்கள் அனைவரும் அதனை பிரதியில் கண்டடைகின்றார்களா என்றால் பெரும்பாலும் இல்லையென்றே அமைந்து விடுகின்றது. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள், அந்த வலிகளை நேரில் அறிந்தவர்கள், அனுபவித்தவர்கள் பிரதியில் தங்களைப் பொருத்தி எழுத்தில் சொல்லப்பட்ட வலிகளை வாசிக்கும்போது கண்டடைந்து கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு அவ்வாறன உணர்வுகள் பெரும்பாலும் கிடைப்பது இல்லை. தரவுகளும் இறப்புக்களும் அவர்களிடம் சாதரணமாக எஞ்சுகின்றது. எழுத்தில் உள்ள நிஜமான சுமைகளுடன் கூடிய வலியும் வாழ்கையும் கிடைத்திருக்காது. காரணம் வலிகளைச் சொல்லும் எழுத்துக்களில் போதிய புனைவு நுட்பம் இல்லாமல் இருப்பது. புனைவு மொழிக்கும் கட்டுரை மொழிக்கும் இடையிலான வித்தியாசம் போதாமல் இருந்துவிடுவதுபோன்ற குறைபாடுகள். இவ்வாறான அழகியல் குறைபாடுகள்கொண்ட புனைவுகள் தரவுகளைமட்டும் சொல்லிவிட்டு ஆழமான அகம்சார்ந்த உணர்வுகளை கிளறிவிடாது கடந்து செல்கின்றன. இவ்வாறான புனைவுத்தரம் தாழ்ந்த பிரதிகள் உருப்பெற்றுக்கொண்டிருந்தாலும் மிகச்சிறந்த அழகியலுடன் சிறந்த புனைவுகளும் ஈழத்தில் வந்திருக்கின்றன, வந்துகொண்டிருக்கின்றனதான்.
தமிழர்களின் வாழ்வில் நிகழ்ந்த அனைத்து கண்ணீர் துளிகளையும் தொகுக்கும் தொகுப்பாக ஆதிரை நாவல் இருக்கின்றது. துரத்தப்பட்ட ஓர் இனத்தின் கதையினை ஆதிரை நாவல் சொல்லிக்கொண்டு செல்கின்றது. மலையகத் தமிழர்கள்மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டு துரத்தப்படும் காலத்தின் தொடக்கத்தில் இருந்து முள்ளிவாய்காலினைத் தாண்டி புனர்வாழ்வு முடிந்து வெளியேறும் காலம்வரை மூன்று தலைமுறையின் அனைத்துக் கதையையும் பெண்களின் பார்வையில் சொல்ல விழைகின்றது. திடீர் திடீர் என்று பிள்ளைகள் போராட இயக்கத்துக்கு கிளம்புகிறார்கள். அவர்கள் ஏன் சென்றார்கள் எதனால் சென்றார்கள் என்று போராடச்சென்ற பிள்ளைகளின் பார்வையில் கதைப்பிரதி சொல்லவில்லை. ஆனால் செல்கிறார்கள். பிரதியில் நிகழும் சமகாலச் சம்பவங்களும் ஊகங்களும் அதனை தீராத வலிகளுடன் இட்டு நிரப்புகின்றது. இயக்கத்துச் சென்ற பிள்ளைகளின் தாய்மாரின் பார்வையில் அவர்களின் ஏக்கங்கள் வலிகள் நிராசைகளின் தொகுப்பை ஆதிரை கதைப்பிரதி நீட்சியாகப் பேசிக்கொண்டு செல்கின்றது.
எளிமையான வாழ்க்கை மெல்லமெல்ல சிதைந்துகொண்டுவருகின்றது. ஏன் சிதைகின்றது எங்கே ஆரம்பமாகிறது என்பதினை அவை தத்துவவிசாரணை செய்யவில்லை. விளிம்புநிலை மக்களின் உணவு,உடை,உறையுளில் எப்படி பங்கம் விழைவிக்கின்றது என்பதை சொல்வதில் இருந்து தமிழர்களுக்கு எதிராக எழும் எழுச்சியையும் அதற்கு எதிராக எழும் போராட்டத்தின் அவலங்களை மெல்லமெல்ல சொல்லத்தொடங்குகின்றது. தாய்மார்கள்,பிள்ளைகளின் அகம் சார்ந்த மாறுதல்கள் நுண்மையாக மாறுகின்றன. இராணுவங்கள் படுகொலைகள் நிகழ்த்துகின்றன. இராணுவத்தின் சித்தரிப்புகள் இயதிரத்தனமாக குழுநிலையாக கதைப்பிரதியில் சித்தரிக்கப்படுகின்றது. ஒட்டு மொத்த தமிழ் தாய்மார்களின் பார்வையில் அவை தொகுக்கப்படுகின்றன. இராணுவத்தின்மேல் எழும் கோபங்கள் இறுதியில் புலிகளின்மேல் தாய்மார்களுக்கு எழும் கோபங்கள் சாபங்கள் அனைத்தும் வீரிட்டுக்கொண்டு வருகின்றது. போராட்டம் ஆரம்பித்த காலமும் சரி, புலிகள் ஆயுதபலத்தில் எழுச்சி பெற்றகாலமும் சரி, புலிகளின் இறுதி வீழ்ச்சிக் காலமும் சரி போராட்டங்களுக்கு பிள்ளைகளை எந்தத்தாய்மார்களும் விரும்பி அனுப்பவில்லை. தாய்மார்களின் ஒரே சிந்தனை தங்களது பிள்ளைகளை ஆயுதப்போராட்டத்தில் பறிகொடுத்துவிடாமல் கலங்கம் இல்லாமல் வாழ அனுப்பிவிட முயல்கிறார்கள் என்பதை கதைபிரதி தாய்மார்களின் பார்வையில் சொல்கின்றது.
பிரச்சாரங்களுக்காக பள்ளிக்கூடங்களுக்கு வரும் புலிகளும் அவர்களின் பிரச்சாரம் முடிய போராட கிளம்பிச்செல்லும் பிள்ளைகளும், கிளம்பிப்போன பிள்ளைகளின் பெற்றோர்கள் பாடசாலையில் நுழைந்து ஆசிரியர்களைப்பார்த்து உங்களை நம்பிப் படிக்க அனுப்பிய எங்கள் பிள்ளைகள் எங்கே என்று கதறுவதும் நிகழந்துகொண்டிருக்கின்றது. தொண்ணூற்றியைந்தாம் இடம்பெயரவில் யாழ்.மக்கள் வன்னி நிலப்பரப்பை நோக்கிவர வன்னிமக்கள் மனதில் மெல்லிய குதூகலம் பிறக்கின்றது. கல்வீட்டில் வாழ்ந்தவர்கள் மண்வீட்டில் வாழ்ந்துபார்க்கட்டும் என்ற மெலிதான அசை அசூசையோடு ஆழ்மனத்தில் கதைபிரதியில் உள்ள மாந்தர்களுக்கு எட்டிப்பார்கின்றது. சமாதானக் காலத்தில் “எனி சண்டைவந்தால் கொழும்பில்தான் அடிவிழும்” என்று யாரோ கிளப்பிவிட வடக்குமக்கள் மெலிதாகக் அவையளும் வேண்டிப்பார்க்கட்டும் எண்டு குதூகலப்பட்டதை பிரதிக்குவெளியே இருந்து ஆதிரை கதைப்பிரதியோடு ஒப்பிட்டுப்பார்க்க முடிகின்றது.
ஆறாவடுவில் இருந்து மாறுபட்ட அடர்த்தியான மொழியில் ஆதிரை நாவல் எழுதப்பட்டுள்ளது. சம்பவத்தை கண்ணுக்குக் காட்டி நுண்மையான உணர்வுகளுடன் சித்தரித்து தன்னை நகரத்துகின்றது. ஒவ்வொரு வரிகளாக வாசிக்கும்போது கற்பனை அகத்தில் விரிகின்றது. ஒவ்வொரு சம்பவங்களையும் மனதில் காட்சியாக நகர்த்தி கொண்டு வாசிக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளதால் கடக்கும் பந்திகளை செமிக்கவிட்டே பக்கங்களை கடக்கவேண்டியுள்ளது. கதைப்பிரதிக்குள் நுழைய ஆரம்பத்தில் தடங்கல் வந்துகொண்டிருக்கும். சொல்லாமல் சொல்லும் உணர்வுகளின் சிதறல்கள் எழுத்தின் கனதியை பரந்து விரிந்து இன்னும் இன்னும் ஆழமாக வாசிப்பு இன்பத்தினை விரிக்கின்றது. வெள்ளையக்கா மீது லெட்சமனுக்கு ஏற்படும் அடையாளம் தெரியாத காம உணர்வுகள், கணவனை தொலைத்த ராணிக்கு மணிவண்ணன் மீது ஏற்படும் தடுமாற்றம் நிறைந்த காம உணர்வுகள் என்று காமம் சார்ந்த உடலின் இச்சைகள் இயல்பாக ஊடுருவிப் பயணிக்கின்றன. இறுதிச்சண்டையில் மணிவண்ணன் இறந்துகிடக்கும் உடலைப்பார்த்தபின் ராணிக்கு அழுகை சொரிந்துகொண்டுவரும். அந்த தருணத்தில் ராணிக்கு மணிவண்ணன்மேல் உள்ள நெகிழ்ச்சியான அகம்சார்ந்த ஆழ்மனது உறவைத் தெளிவாகக் கண்டடைய முடியும். மணிவண்ணனின் காலடியில் உருண்டு புரண்டு பெருங்குரலெடுத்து அழுவாள். அவளின் அழுகை ஒலித்துக்கொண்டே பிரதியில் இருக்கும்.
மூன்று காதல்கள், போர்களின் வடுக்கள், குமியும் இறந்த உடல்கள் என்று நகரும் பகுதிகளில் தரவுகள் மட்டும் எஞ்சவில்லை அதன் வாழ்க்கையும், அனுபவும் கண்ணீரும் கிடைக்கின்றது. காடும் காடுசார் அனுபவங்களையும் அதில் வாழும் மக்களுமே கதைப் பிரதியில் மையப்படுத்தப்பட்டுள்ளது. உயிர்ப்புள்ள காட்டுக்குள் நுழைந்து வெளியேற முடியாத சிக்கித்தவிக்கும் தடுமாற்றங்கள் பிரதியில் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது.சில கதை மாந்தர்கள் நிஜமான மனிதர்களையும் நியாபகமூட்டுகின்றது. பிரச்சாரத்துக்கு பள்ளிக்கு வரும் நரைத்த தலைமுடியை கொண்ட வயது முதிர்ந்த பிரச்சார பெண்புலி உறுப்பினரின் குணாதிசயங்களும் பாத்திரச்சித்தரிப்பும் உங்களுக்கு ஒருவரை நினைவுபடுத்தலாம். இயக்கத்துக்கு ஆள்சேர்த வயது முதிர்ந்த இயக்க அன்டி ஒருவர் “எனக்கு இந்தப் போராட்டம் தோற்றுவிடும் என்று இருபது வருடங்களுக்கு முதலே தெரியும்” என்று சொல்கிறார். கதைமாந்தரான மலருக்கு அடக்கமுடியாத கோவம் ஏற்படும், “தோற்கப்போகும் போராட்டத்துக்கா இவ்வளவு நாளும் ஆள்சேத்தீங்க” என்று கேட்டக்தோன்றும். ஆசிரியர் யாரை சித்தரிக்கின்றார் என்பது தெளிவாகவே தெரியும் ஓம் தமிழ்கவியைத்தான்.
ஆதிரை தமிழ் தாய்மார்களின், பெண்களின் பார்வையில் ஒரு இனத்தின் அவலங்களை பிரதியில் பேசமுயன்றாலும் இன்னும் ஒருபக்கம் சொல்லப்படாத சிங்களத் தாய்மார்களின் பக்கம் இருகின்றது. இராணுவம் என்ற கட்டமைப்பு குழுநிலையாக காட்படுகின்றது அவர்களின் வாழ்வும் மன என்ன ஓட்டங்களும் புனைவுப் பிரதியில் வெற்றிடமாகவே இருகின்றது. செவ்வியல் என்பதே மானுட மனத்தின், வரலாற்றின் இருண்மையையும், கசப்பையும் அதிகமாகச் சொல்லக்கூடிய ஒன்றாகவே இருக்கும். அது ஒரு பண்பாட்டின் ஒரு கட்டத்தில் நிகழ்கிறது. ஆதிரை அதன் அனைத்து இயல்பையும் செறிவாகக் கொண்டிருக்கின்றது. இது எமது இனத்தின் இருண்மையின் வலிகளின் தொகுப்பு.
ஆதிரை கதைப்பிரதியில் உன்னதமாக்கல்(Sublimation) இருக்கிறன. ஆசிரியனின் குரலினை பிரதியில் கண்டுகொள்ள முடிகின்றது. மொழியையும் தருணத்து உணர்ச்சிகளையும் வெளியே இருந்து நேரடியாக வந்து சயந்தன் வெளிப்படுத்துவதினை உணரமுடிகின்றது. கதைமாந்தரை மேலதிகமாகப் பேசச்செய்து சிந்திக்கச்செய்து சயந்தன் அந்த உன்னதமாக்கலை நிகழ்த்துகின்றார். அந்தக்கதாபாத்திரம் அப்படியெல்லாம் சிந்திக்குமா, அது ஆசிரியன் குரல் அல்லவா என்ற வினாவுக்கு செவ்வியல் படைப்பில் இடமில்லைத்தான். உன்னதமாக்கல் மூலம் பிரதி அடையும் முழுமை என்பது வரையறைக்குள் மறுக்கப்படாத முதன்மை கொண்டது. அது தன்னை நிரூபிக்க எதையும் செய்வதில்லை. அப்படைப்பின் படைப்பியல்புதான் அதை நிரூபிக்கிறது. ஆதிரையின் படைப்பாக்கம் அதனைச் செவ்வனே செய்கின்றது.
இறுதிச் சண்டையில் எளிமையாக மனிதர்கள் கொத்துக்கொத்தாக செத்துவிழுகின்றார்கள். செத்துவிழும் மாந்தர்களின் மிகப்பெரிய வாழ்க்கை பிரதியில் ஏற்கனவே சொல்லப்பட்டவொன்று. அவர்களது வாழ்வு ஒரு குறுகிய நிலப்பரப்பில் செல்வீச்சில் துளைத்துச்சாவதில் முடிகின்றது. வீழ்ந்து சிதைவுற்று இருக்கும் உடல்களை பார்க்கும்போது பிரதியில் சொல்லப்பட்ட அவர்களது முன்னைய வாழ்வும் அவர்களது இறப்பும் விசித்திரமான உணர்வுகளை கிளர்ந்தெழச்செய்து அகத்தை உக்கிரமாக பிசையவைகின்றது.
மனிதன் சாதாரணமாகக் கடந்து செல்லும் அகம் சார்ந்த உணர்வுகளின் தருணங்கள் மிகச்சிலவாக இருக்கும். இலக்கியம் அதன் வீச்சை இன்னும் அதிகரித்து அகத்தை கொந்தளிக்கவைக்கும். அதன் மூலம் கண்டடையும் வலிகள் அளிக்கும் அனுபவங்கள் எம்மை மீண்டும் புதிதாக வேறோர் கோணத்தில் கண்டடைய வைக்கும். ஆதிரை அதில் வென்ற ஒன்று. ஆதிரை கண்டடைய வைக்கும் அனுபவங்கள் ஒரு வாழ்க்கையின் உயிர்ப்புள்ள தொகுப்பு. க.நா.சுவும் சுந்தர ராமசாமியும் உருவாக்கிய வலுவான இலக்கிய மதிப்பீட்டிலும் வெற்றிபெறும் பிரதிதான். ஆனால் உட்பிரதியில் உள்ள விடுபடல்கள் ஒரு நல்ல நாவலாகக் சொல்ல வைக்கும் மகத்துவமான நாவல் என்று சொல்லவைக்காது. வாசித்து முடிக்கும்போது தீராத மனவழுத்தத்தை வாசிப்பவருக்கு தந்துவிட்டுப்போகும், ஆனால் ஒரு வெறுமை இருக்கும் அவை சிங்களத் தாய்மார்களின் கண்ணீரை நினைவூட்டும். ஆதிரையில் சொல்லாமல் விட்ட பக்கம் அது. ஆதிரை ஒரு தமிழ் தரப்பு பெண்களின் வாழ்க்கையின் அவலங்களை அவர்கள் பார்வையில் முன்வைக்கும் கட்டற்ற கண்ணீர்.
2016 எதுவரை ஜனவரி – பெப்ரவரி இதழில் வெளியாகிய கட்டுரை.