பஞ்சபூதம் வெறும் 32 பக்கங்களில் சாஜித்தினால் எழுதப்பட்ட நாவல். இலங்கை தமிழ் இலக்கியப்பரப்பிலிருந்து வெளியாகும் நாவல்களின் வழமையான மரபார்ந்த கதையாடலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஆக்கம் பஞ்சபூதம். சர்ரியலிசத் தன்மைக்கான கூறுகளை அதிகம் கொண்டிருக்கின்றது. இவ்வாறான வடிவ பரிசோதனைகள் இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் ஓரளவுக்கு ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டிருந்தாலும், நான் வாசித்தவரையில் யதார்த்தவாதத்திலிருந்து மீறி சர்ரியலிசமும் மேஜிக்கல் ரியலிசத்தின் கூறுகளையும் ஒருங்கே கொண்டு நாவல் வடிவில் எழுதப்பட்டதில் இதுவே இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் முதலாவதாக இருக்கவேண்டும்.
ஆழமான நித்திரையில் விரட்டும் கனவுகள் போல் தொடர்ச்சியற்று குழம்பிக் குழம்பி நீண்டு செல்லும் கதையாடல். மயக்கத்தன்மையில் மங்கலான அறையில் துயில்கொள்வதுபோல் வீழ்ந்திருக்கும்போது, அருகிலிருந்து கதைசொல்லி விசித்திரமான கதை ஒன்றைச் சொல்லிக்கொண்டிருப்பதுபோல் நாவலின் கதை செல்கிறது. வாசகனுடன் கதை சொல்லி பிரதியிலிருந்தே உரையாடுகிறான். பல இடங்களில் தன்னைப் பாதுகாக்கச் சொல்கிறான், நன்றி சொல்கிறான், மன்றாடுகிறான், நிம்மதிப்பெருமூச்சு விடுகிறான். நீர்,நிலம்,காற்று,ஆகாயம்,நெருப்பு போன்ற மனிதனை மிஞ்சிய சக்தியைக்கொண்ட பஞ்சபூதங்களுடன் மோதி வாழ்வதற்கு அலைக்கழியும் நிமிடங்களாக அவை நீள்கின்றது. எழுத்தை அதன் சட்டகத்திலிருந்து வெளியயேற்றிச் சுதந்திரமாக அலைய வைக்கின்றது பிரதி.
நாவல் பத்து அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூச்சு. அவ்மூச்சுக்கள் ஒரே களத்தில் இருப்பதில்லை; சட்டென்று கணப்பொழுதில் மாறிக்கொண்டே இருகின்றது. பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என ஐம்பூதங்களையும் கதைக்களமாகக் கொண்டு கதையை நகர்த்துகிறார் சதைசொல்லி சாஜித். வாணியர் நகரம், நான் தேசம், கடல் ராஜ்ஜியம், மேக ராஜ்ஜியம் எனக் கதையின் களங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றது.
மையக்கதை என்று இருக்கின்றதா என்ற கேள்வி எழும். உண்மையில் இக்கதை குறியீடுகளால் நிரம்பியதாகவே கொள்கிறேன். சமகால அரசியல் சூழல்களை ஒரு கட்டுண்ட மயக்க நிலையில் சொல்கிறது.
.நான்காம், ஐந்தாம் அத்தியாயத்தில் வரும் கழுகு, வேடன், முனியாண்டி, புலிகள் போன்ற பாத்திரங்களைக் காணும் வாசகன் அவற்றை ஊகித்துக்கொள்ளுவான். புலிகள் வாழும் காட்டில் வசிக்கும் கதை சொல்லி பயம் கொள்கிறான். வேடன் அவனுக்கு நம்பிக்கை ஊட்டுகின்றான். வேடனும் புலிகளால் கொல்லப்படும்போது கதை சொல்லி திணறுகின்றான். எனினும் வேடன் இறப்பதற்கு முன் அவனுக்கு ஊட்டிய நம்பிக்கைகள் அவனை ஓரளவுக்குச் சமாதானப்படுத்துகின்றது. தமிழ் இசுலாமிய உறவின் தடுமாற்றங்களை அவை மௌனமாகப் பேசுகின்றது.
“பெரும்பான்மை வர்க்கமாக வாழ்கின்ற வெள்ளை மேகங்கள், கறுப்பு மேகங்கள் மீதான தங்களது அதிகாரத்தொனியை அள்ளி வீசியதே இம்மோதலுக்குக் காரணம் என நட்சத்திரங்கள் பேசிக்கொண்டன” இவ்வரிகளே ஒட்டுமொத்த நாவலின் மைய இழையாகச் சட்டென்று தோன்றவைத்தது. சிறுபான்மை இனத்தின் மீதான பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கத்தை அவ்வரிகள் உணர்த்துகின்றன.
இப்புத்தகத்தின் பக்கங்கள் அதிகரிக்கப்பட்டு இருந்தால் கட்டுண்டிருந்த அனுபவம் சிதறியிருக்கும் என்றே நினைக்கின்றேன்.
வெளியீடு : பெருவெளி பதிப்பகம்
விலை : 300 ரூபாய்