விதிவிலக்காக நல்ல திரைப்படங்கள் ஹிந்தியில் வருவதுண்டு. அப்படி வருவதில் சில படங்கள் மட்டுமே அதிஷ்டவசமாகப் பார்கக் கிடைக்கும். அப்படிப் பார்த்தில் சிலாகிக்கக் கூடிய திரைப்படம்தான், 2007 இல் வெளிவந்த தாரே ஸமீன் பார். அமீர்கான் மீது தனிப்பட்ட நம்பிக்கை எனக்கு அவரது சமூகச் செயல்பாடுகளை ஓட்டி இருகின்றது. இப்படத்தின் குறுவட்டு கைக்குவந்தபோது எந்த நம்பிக்கையும் இன்றி – முன் எடுகோள்கள் எதுவும் இன்றி – பார்க்கத் தொடங்கினேன்.
வசதியான பொருளாதார நிலையினைக் கொண்ட குடும்பத்தில் – அப்பா,அம்மா,அண்ணாவோடு சேர்ந்து கடைசிப் பிள்ளையாக இஷான். இஷான் எப்போதும் கற்பனை உலகில் சஞ்சரிப்பவன்; அவனது தனது கற்பனையில் தினமும் வாழ்கின்றான். இரண்டாம் ஆண்டில் பெயிலாகி, மீண்டும் இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டிருக்கின்றான். படிப்பில்தான் அவனுக்குப் பிரச்னை. எழுத்துக்களை வேறு பிரித்தறியவோ, நினைவில் தக்கவைத்துக் கொள்ளவோ,வாசிக்கவோ முடிவதில்லை. விளையாட்டில் ஒரு பந்தைக்கூட சீராக இலக்குவைத்து எறிய முடிவதில்லை. எழுத்துக்கள் எல்லாம் இடம் மாறி, அவனது கற்பனையில் புகுந்து பரவசப்படுத்துகின்றன. சராசரிப் “பொடியன்கள்” போல் அவனால் வயதிற்கு தகுந்தாற்போல் எழுதமுடியவில்லை. பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் மிக குறைந்த மதிப்பெண்கள். மற்ற எல்லா விஷயங்களிலும் அவன் ஒரு இயல்பான, துடிப்பு மிக்க, குறும்புத்தனமான பொடியன். அவனால் மிகுந்த கற்பனை ஆற்றலுடன் ஓவியம் வரைய முடிகின்றது.
படிப்பில் நிலைமை மேலும் சிக்கலாக, பள்ளி நிர்வாகம் அடுத்த வருடம் தொடர்ந்து படிக்க, அவனுக்கு அனுமதி மறுக்கின்றது. எல்லை மீறிய செல்லத்தினாலும் விளையாட்டுத்தனத்தாலும் அவன் இப்படியாகி விட்டதாகக் கருதும் தந்தை, அவனைத் தனியாக வேறொரு ஊரிலிருக்கும் பள்ளியில் சேர்க்க முடிவு செய்கிறார். அங்கேயே ஆசிரியர்களின் கண்காணிப்பில் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டும்; இது அவனது நிலையை மாற்றும், படிப்பில் கவனம் குவியும் என்று நம்புகின்றார்.
இஷான் போக மறுக்கிறான். அப்பா,அம்மாவின் ஸ்பரிசத்தில் இருந்து விலகிச்செல்வதனைக் கடுமையாக மறுத்து, அழுது அடம் பிடிகிறான். பெற்றோர்களுக்கு மனதினுள்ளே வலிகள் இருந்தாலும், அவனின் நன்மை கருதி புதிய பாடசாலையில் சேர்த்துவிடுகின்றானர். புதிய சூழல் அவனைப் பயப்படுத்துகின்றது. ஒருவித தனிமையில் தன்னை ஒப்படைக்கின்றான். அப்பா,அம்மாமீது தாங்க முடியாத கோவத்தில் இருக்கின்றான். தனிமையில் அவனது சோகங்கள் கரைகின்றன.
வகுப்பறையில் அவனது இயலாமை புரிந்து கொள்ளப்படமால் போகின்றது, ஆசிரியர்களால் தண்டிக்கப்படுகிறான்; கிண்டலடிக்கப்படுகிறான். சக மாணவனான கால் ஊனமுற்ற ஒருவன் மட்டும், அவனுக்கு ஆறுதலாக இருக்கிறான். இஷானும் அவனுடன் நெருக்கமான நண்பன் ஆகின்றான். இருவருக்கும் இடையிலான நட்பு ஆழமாகச் சில காட்சிகளில் சொல்லப்படுகின்றன.
இந்நிலை தொடர்ந்து கொண்டிருக்க பள்ளிக்குப் புதிய – தற்காலிக ஓவிய ஆசிரியராக வருகிறார் நிகும்ப் (அமீர்கான்). கற்பித்தலில் புதிய அணுகுமுறைகொண்ட இளைஞராக அவர் இருக்கின்றார். முதல் நாளே தனது விசேஷ திறமையினால் எல்லாச் சிறார்களையும் கவர்ந்து விடுகிறார். இஷான் மட்டும் அவருடன் ஒன்ற மறுக்கிறான். ஓவியமும் வரையாமல் ஒதுங்கிச் செல்லும் அவனுக்குள் ஏதோ பிரச்சினை இருக்கிறது எனப் புரிந்து கொள்ளும் அவர், அவனுடைய புத்தகங்களை பார்க்கிறார்.
அவன் விடும் பிழைகளின் ஒழுங்கு முறைகளை, அவனுக்குக் கற்றல் குறைபாடு (Dyslexia) இருப்பதினை புரிந்துகொள்கின்றார். அவனுக்கு இருக்கும் வேறு திறமைகளைக் கண்டுபிடித்து அந்த வழியில் அவனை ஊக்குவித்து, அவனுக்கு இருக்கும் பிரச்சினைகளைக் களையவேண்டும் என்பதினை உணர்கின்றார். அவனுடைய வீட்டுக்குச் சென்று பெற்றோரைச் சந்திக்கிறார். அங்கு அவன் வரைந்த படங்களைப் பார்த்து, அவனிடம் இருக்கும் ஓவியம் வரையும் அசாத்தியத் திறனைக் கண்டுகொள்கிறார். ஓவியத்தினைத் தூண்டுதலாக வைத்து அவனது மையப் பிரச்னையை அதிலிருந்து அவனை மீட்க முயல்கின்றார்.
ஒரு நாள் வகுப்பறையில், கற்றல் குறைபாட்டுக்கான தோற்றப்பாடுகளை விவரித்துச் செல்கின்றார். ஏனைய மாணவர்கள் அதனை நகைச்சுவையாக எண்ணிச் சிரிக்க, இஷான் மட்டும் அதிர்ச்சியடைகிறான். இறுதியில், இப்படியெல்லாம் ஒருவனுக்குத் தோன்றியிருக்கு; அவன் யார்? என்று கேட்க, அவன் தன்னைத்தான் கூறுகிறார் என்றெண்ணி திகைக்கிறான். அவர் உடனே ஐன்ஸ்டைனின் படத்தைக் காண்பிக்கிறார். ஆச்சரியத்துடன் அவனிருக்க – வரிசையாக டாவின்சி, எடிசன், அபிஷேக்பச்சன் போன்ற பிரபலங்களின் படங்களைக் காட்டுகிறார். அவனது தாழ்வு மனப்பான்மையை நீக்க அவர்கையாளும் உத்திகள், அற்புதமாக காட்சிப் படிமங்களாகின்றன. இறுதியாக இஷானிடம் தனியாக “இந்த பாதிப்புக்குள்ளான இன்னொருவனைப் பற்றி மட்டும் நான் சொல்லவில்லை” எனச் சொல்ல, மீண்டும் இஷான் திகைக்க “அது நான்தான்” என்கிறார் நிகும்ப்.
அதன் பின் இஷான், நிகும்ப்புடன் நட்பாகிவிடுகிறான். இஷானுக்கு நம்பிக்கை, ஒளிக்கீற்றாக சுடர்விடுகிறது. தாழ்வுமனப்பான்மை மெல்லமெல்லப் போகின்றது. நிகும்ப் தலைமை ஆசிரியரின் அனுமதியைப் பெற்று, எல்லாப் பாடங்களையும் அவனுக்குத் தனியே கற்பிக்கிறார். அவனால் இப்பொழுது வாசிக்க, எழுத ஓரளவு முடிகின்றது. ஒருகட்டத்தில் முழுவதுமாக முன்னேறிவிடுகின்றான்.
பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளும் திறந்த ஓவியப் போட்டி ஒன்றை நடாத்துகிறார் நிகும்ப்; அதில் இஷானுக்கு முதலிடம் கிடைக்கிறது. பாடசாலையின் ஆண்டு இதழில் முகப்பு அட்டையில் அவன் வரைந்த படம் அச்சாகின்றது. விடுமுறைக்காக அவனைத் தம்முடன் அழைத்துச் செல்ல வந்த அவனின் பெற்றோர், அவனைப் பற்றி ஆசிரியர்கள் பெருமையாகப் பேச மிகுந்த ஆச்சரியப்படுகிறானர். மீண்டும் இஷானை அழைத்துச் செல்ல முற்பட, அவனோ மறுத்து திரும்பி நிகும்பிடம் ஓடிவர, அவர் அவனைத் தூக்கிக் கொள்ள, நெகிழ்ச்சியாக படம் முடிவைகின்றது.
இஷான் பாத்திரத்தில் நடித்த சிறுவனின் நடிப்பு பிரமிக்கவைக்கும்; ஒவ்வொரு முகபாவனையும், தத்தளிக்கும் உணர்சிகளும் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.
வர்த்தக ரீதியான படங்களில், மிக வித்தியாசமான முயற்சிகளைத் தொடரந்தும் செய்து வருபவர் அமீர்கான். அவரது இயக்கத்தில் வெளியான முதலாவது படம் இது. அவருக்குள் உறங்கிக்கொண்டிருந்த இன்னொரு புதிய ஆளுமை பிரமிக்க வைக்கிறது. புதிய கதைக்களம், சலிப்புத் தட்டாத தொய்வில்லாத, நெகிழ்ச்சியான திரைக்கதை. முதல் முயற்சியிலேயே மிகச் சிறந்த திரைபடம் ஒன்றினைத் தந்துள்ளார். தான் இயக்கிய படத்தில் தனக்கு மிகச்சாதாரமான பாத்திரத்தினை ஒதுக்கி, ஒரு சிறுவனுக்கு முக்கிய பாத்திரம் கொடுத்து அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் இப்படியான அற்புதங்கள் நடப்பதற்கான சாத்தியப்பாடு, மிகக் குறைவு!
2016 பங்குனி -சித்திரை “தெரிதல்” இதழ் 17-ல் வெளியாகிய கட்டுரை.